"மோடி நலமா' நிகழ்ச்சியில் பங்கேற்கிறார் டிரம்ப்

அமெரிக்காவின் ஹூஸ்டன் நகரில் பிரதமர் நரேந்திர மோடி பங்கேற்கும் "மோடி நலமா' (ஹெளடி மோடி) நிகழ்ச்சியில், அந்நாட்டு அதிபர் டொனால்ட் டிரம்ப்பும் இணையவிருப்பதாக வெள்ளை மாளிகை தெரிவித்துள்ளது.
"மோடி நலமா' நிகழ்ச்சியில் பங்கேற்கிறார் டிரம்ப்

அமெரிக்காவின் ஹூஸ்டன் நகரில் பிரதமர் நரேந்திர மோடி பங்கேற்கும் "மோடி நலமா' (ஹெளடி மோடி) நிகழ்ச்சியில், அந்நாட்டு அதிபர் டொனால்ட் டிரம்ப்பும் இணையவிருப்பதாக வெள்ளை மாளிகை தெரிவித்துள்ளது.
அமெரிக்காவில் ஐ.நா. பொதுச் சபையின் 74-ஆவது ஆண்டுக் கூட்டத்தின் பொது விவாதம் வரும் 24ஆம் தேதி முதல் 30 ஆம் தேதி வரை நடைபெறுகிறது. அந்தக் கூட்டத்தில் 28-ஆம் தேதி பிரதமர் மோடி உரையாற்றவுள்ளார். 
இதையொட்டி, அமெரிக்காவில் சுற்றுப்பயணம் மேற்கொள்ளும் அவர், ஹூஸ்டன் நகரில் இந்திய-அமெரிக்கர்கள் மத்தியில் 22-ஆம் தேதி உரையாற்றவுள்ளார். "மோடி நலமா' என்று பெயரிடப்பட்டுள்ள இந்நிகழ்ச்சி, ஹூஸ்டனின் என்ஆர்ஜி அரங்கில் மிகப் பிரம்மாண்டமாக நடைபெற உள்ளது. இதில் பங்கேற்க இதுவரை சுமார் 50,000 பேர் முன்பதிவு செய்துள்ளனர்.  
இந்நிலையில், "மோடி நலமா' நிகழ்ச்சியில் அவருடன் அமெரிக்க அதிபர் டிரம்ப்பும் இணையவிருக்கிறார். இதுதொடர்பாக வெள்ளை மாளிகை வெளியிட்ட அறிக்கையில், "இரு தலைவர்களும் பங்கேற்கும் அந்த நிகழ்வு, இரு நாடுகளின் மக்களுக்கு இடையிலான நட்புறவை உறுதி செய்வதற்கான வாய்ப்பாக அமையும். உலகின் பழைமையான மற்றும் மிகப் பெரிய இரு ஜனநாயக நாடுகளுக்கு இடையிலான நல்லுறவை வலுப்படுத்துவதற்கான வழிமுறைகளை ஆலோசிப்பதற்கும் உதவும்' என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
டெக்ஸாஸ் இந்திய கூட்டமைப்பால் ஏற்பாடு செய்யப்பட்டுள்ள இந்நிகழ்ச்சியில், ஜனநாயகக் கட்சியின் மூத்த எம்.பி. ஸ்டெனி ஹோயர் உள்ளிட்ட அந்நாட்டின் முக்கிய பிரமுகர்கள் பலரும் பங்கேற்க உள்ளனர்.
பிரதமர் மோடி வரவேற்பு:  வெள்ளை மாளிகையின் இந்த அறிவிப்பைத் தொடர்ந்து, பிரதமர் நரேந்திர மோடி சுட்டுரையில் வெளியிட்ட பதிவில் கூறப்பட்டுள்ளதாவது:
அமெரிக்க அதிபரின் நல்லெண்ண முடிவு, இந்தியா-அமெரிக்கா இடையிலான சிறப்பான நட்புறவை வெளிப்படுத்துகிறது. மேலும், அமெரிக்க சமூகம் மற்றும் பொருளாதாரத்துக்கு இந்திய சமூகத்தினரின் அளித்து வரும் பங்களிப்புக்கான அங்கீகாரத்துக்கு வலுசேர்ப்பதாக உள்ளது என்று தெரிவித்துள்ளார்.
இதுதொடர்பாக, அமெரிக்காவுக்கான இந்தியத் தூதர் ஹர்ஷ் வர்தன் ஷிரிங்லா, பிடிஐ செய்தி நிறுவனத்திடம் கூறியதாவது:
"மோடி நலமா' நிகழ்ச்சியில் அமெரிக்க அதிபர் பங்கேற்கவிருப்பது வரலாற்றுச் சிறப்புமிக்கதாகும். இந்தியா-அமெரிக்கா இடையே வலுவான நட்புறவும், ஒத்துழைப்பும் இருப்பதையே இது காட்டுகிறது. இந்திய-அமெரிக்கர்களின் மத்தியில் இரு நாட்டுத் தலைவர்களும் உரையாற்றுவது, சிறப்பான முன்னுதாரணத்தை ஏற்படுத்தும் என்றார் அவர்.
மூன்றாவது முறையாக...: நிகழாண்டில் மூன்றாவது முறையாக பிரதமர் மோடியும், அதிபர் டிரம்ப்பும் சந்தித்துக் கொள்ளவிருக்கின்றனர். ஜப்பானில் கடந்த ஜூன் மாதம் ஜி-20 நாடுகள் மாநாட்டின்போதும், பிரான்ஸில் ஜி7 நாடுகள் மாநாட்டின்போதும் அவர்கள் சந்தித்துப் பேசியிருந்தனர்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com