ஒரே நிறுவனத்தில் பணியாற்றுவதை 75% இந்தியர்கள் விரும்பவில்லை: ஆய்வில் தகவல்

வாழ்க்கை முழுவதும் ஒரே நிறுவனத்தில் பணியாற்றுவதை 75 சதவீத இந்தியர்கள் விரும்பவில்லை; ஒரே நிறுவனத்தில் பணியாற்றுவது பழைய நடைமுறை என்று அவர்கள் எண்ணுகின்றனர் என்று ஆய்வு


வாழ்க்கை முழுவதும் ஒரே நிறுவனத்தில் பணியாற்றுவதை 75 சதவீத இந்தியர்கள் விரும்பவில்லை; ஒரே நிறுவனத்தில் பணியாற்றுவது பழைய நடைமுறை என்று அவர்கள் எண்ணுகின்றனர் என்று ஆய்வு மூலம் தெரியவந்துள்ளது.
உலகம் முழுவதும் வேலைக்குச் செல்வோரிடையே பியர்ஸன் நிறுவனம் ஆய்வு நடத்தியது. 19 நாடுகளைச் சேர்ந்த 11 ஆயிரம் பேர் இந்த ஆய்வில் பங்கேற்றனர். 16 முதல் 70 வயதுடைய ஆயிரத்துக்கும் மேற்பட்ட இந்தியர்களும் இந்த ஆய்வில் கலந்து கொண்டனர். அந்த ஆய்வு முடிவு குறித்து வெளியான அறிக்கையில் கூறப்பட்டுள்ளதாவது:
வாழ்க்கை முழுவதும் ஒரே நிறுவனத்தில் பணியாற்றுவது பழைய நடைமுறை என்று 75 சதவீத இந்தியர்கள் கருதுகின்றனர். 25 சதவீதம் பேர், பணி ஓய்வுக்குப் பிறகும் பிடித்த துறையில் பணியாற்ற விரும்புகின்றனர். 31 சதவீதம் பேர் தங்களது பணிகளுக்கான துறைகளை மாற்றிக் கொண்டே இருக்கின்றனர். 
மேலும், இப்போதைய சூழலில், மாணவர்களுக்கு கல்வியில் தொழில்நுட்பம் மிகவும் உதவியாக உள்ளது என்று கருதுகின்றனர். யு-டியூப் முக்கிய கற்றல் ஊடகமாக மாணவர்களிடையே உள்ளது. முறையான கல்வி பயிலாவிட்டாலும், பணி வாழ்க்கையில் சாதிக்கலாம் என்று 22 சதவீதம் பேர் நம்புகின்றனர். கல்லூரி மாணவர்களிடம் ஆய்வு நடத்தியபோது, அவர்களுக்கு வாய்ப்பு கிடைத்தால் தொழில் செய்ய விரும்புவதாகவும், பள்ளிப்படிப்பை முடித்து விட்டு நேரடியாக பணிக்குச் செல்ல விரும்புவதாகவும் தெரிவித்தனர்.
நாட்டின் தற்போதைய கல்வி முறை, இன்றைய தலைமுறையினருக்கு ஏற்ற வகையில் உள்ளது என்று 59 சதவீதம் பேர் கூறுகின்றனர். பணியில் இருந்து ஓய்வு பெற்ற பின் புதிதாக தொழில் தொடங்க வேண்டும் என்று 25 சதவீதம் பேர் விரும்புகின்றனர். பணி சார்ந்த சான்றிதழ் படிப்புகளைப் பயிலும் இந்தியர்களின் எண்ணிக்கை கடந்த 2 ஆண்டுகளாக அதிகரித்துள்ளது. பணிக்குத் தேவையான மென்திறன்களை மேலும் வளர்த்துக் கொள்ள வேண்டும் என்று 86 சதவீத இந்தியர்கள் கருதுகின்றனர் என்று அந்த ஆய்வறிக்கையில் கூறப்பட்டுள்ளது.
 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com