ஹிந்தியை திணிக்கவில்லை: அமித் ஷா

ஹிந்தி மொழியைத் திணிக்க எப்போதுமே நினைத்ததில்லை. பிராந்திய மொழிகளை வலுப்படுத்த வேண்டும்; ஹிந்தியை 2-ஆவது மொழியாக பயன்படுத்த வேண்டும் என்றே நான் எப்போதும் கூறி வருகிறேன்
ஹிந்தியை திணிக்கவில்லை: அமித் ஷா


ஹிந்தி மொழியைத் திணிக்க எப்போதுமே நினைத்ததில்லை. பிராந்திய மொழிகளை வலுப்படுத்த வேண்டும்; ஹிந்தியை 2-ஆவது மொழியாக பயன்படுத்த வேண்டும் என்றே நான் எப்போதும் கூறி வருகிறேன் என்று மத்திய உள்துறை அமைச்சர் அமித் ஷா கூறினார். 

ஹிந்தி மொழியால் நாட்டை ஒருங்கிணைக்க முடியும் என்று சமீபத்தில் அவர் கூறிய கருத்துக்கு பரவலாக எதிர்ப்பு எழுந்தது. குறிப்பாக, தென் மாநிலங்களில் கடும் எதிர்ப்பு தெரிவிக்கப்பட்டது. இந்நிலையில், அந்த சர்ச்சைக்கு முற்றுப்புள்ளி வைக்கும் வகையில் அமித் ஷா இவ்வாறு கூறியுள்ளார். 
ஜார்க்கண்ட் மாநிலம், ராஞ்சியில் ஹிந்தி மொழி பத்திரிகை ஒன்றின் சார்பில் புதன்கிழமை நடைபெற்ற நிகழ்ச்சியில் பங்கேற்ற அவர், இதுதொடர்பாக பேசியதாவது: 

ஹிந்தி மொழியை நாட்டின் எந்தவொரு பகுதியிலும், எப்போதும் திணிக்க நினைத்ததில்லை. எனினும், அந்தந்த பிராந்திய மொழிகளுக்குப் பிறகு 2-ஆவது மொழியாக ஹிந்தியை பயன்படுத்த வேண்டும் என்றுதான் பேசி வருகிறேன். 
மாநில மொழிகளை வலுப்படுத்த வேண்டும் என்றே நான் எப்போதும் கூறி வருகிறேன். ஹிந்தி மொழியை பிரதானமாகக் கொண்டிராத மாநிலத்திலிருந்துதான் நானும் வந்துள்ளேன். நான் சார்ந்த குஜராத் மாநிலத்தில் குஜராத்திதான் தாய்மொழியே தவிர, ஹிந்தி அல்ல. 
ஒரு குழந்தை தனது தாய்மொழியில் கற்கும்போது தான் அதன் மூளை வளர்ச்சியும், செயல்பாடும் தடுமாற்றமில்லாமல் இயல்பாக இருக்கும். அவ்வாறு தாய்மொழி என்று குறிப்பிடுவது ஹிந்தி மொழியை அல்ல. குஜராத் மாநிலத்துக்கு குஜராத்தி மொழி இருப்பது போல், அந்தந்த மாநிலத்தின் பிரத்யேக மொழியே தாய்மொழியாக குறிப்பிடப்படுகிறது. 

அதேவேளையில், நாட்டுக்கென பொதுவாக ஒரு மொழி இருக்க வேண்டும். ஒருவர் தனது தாய்மொழிக்கு அடுத்தபடியாக மற்றொரு மொழியைக் கற்க விரும்பினால் அது ஹிந்தியாக இருக்க வேண்டும். இதையே ஒரு கோரிக்கையாக முன்வைத்தேன். அதில் என்ன தவறு இருக்கிறது என்பதைத் தான் புரிந்துகொள்ள இயலவில்லை. 
எதிர்காலத்தில் நாட்டில் பிராந்திய மொழிகளைப் பாதுகாப்பதற்கென இயக்கம் ஒன்று தொடங்கப்பட வேண்டும். இல்லையென்றால், நியூஸிலாந்து, ஆஸ்திரேலியாவைப் போல இந்தியாவும் மாறிவிடும். ஏனெனில் அந்த இரு நாடுகளைச் சேர்ந்தவர்களைப் பார்க்கும்போது அவர்களின் மொழி என்ன என்று கேட்பேன். ஆனால் அவர்கள் அதற்கு பதிலளிக்கத் தயங்குவார்கள். 
நமது சொந்த மொழியை இழந்துவிடும் நிலை வரக் கூடாது. பிராந்திய மொழிகள் வலுப்படுத்தப்பட வேண்டும்; அதேவேளையில், மக்கள் ஹிந்தி மொழியையும் கற்க வேண்டும். 

ஹிந்தி மொழி குறித்து நான் கூறும் கருத்துகளை கவனமாகப் புரிந்துகொள்ள வேண்டும். இந்திய மொழிகள் அனைத்தும் வலுப்படுத்தப்பட வேண்டும் என்றுதான் நான் மீண்டும் மீண்டும் கூறி வருகிறேன். எனது கருத்துகளைக் கொண்டு எவரேனும் அரசியல் செய்ய நினைத்தால், அது அவர்களின் விருப்பம் சார்ந்தது என்று அமித் ஷா பேசினார். 

முன்னதாக, கடந்த சனிக்கிழமை ஹிந்தி தினம் கொண்டாடப்பட்டபோது நிகழ்ச்சி ஒன்றில் பேசிய அமித் ஷா, நாட்டில் பெரும்பான்மையான மக்களால் ஹிந்தி பேசப்படுவதால், அந்த மொழியால் நாட்டை ஒருங்கிணைக்க முடியும் என்று கூறியிருந்தார். 
அவரது இந்தப் பேச்சு ஹிந்தி திணிப்பு முயற்சி என திமுக, மதச்சார்பற்ற ஜனதா தளம், இடதுசாரிக் கட்சிகள் கடுமையாக விமர்சித்திருந்தன. 
தமிழகத்தில் பாஜகவின் கூட்டணிக் கட்சியான அதிமுகவும் இதற்கு எதிர்ப்பு தெரிவித்திருந்தது. 
ஹிந்தி திணிப்பு முயற்சிக்கு எதிராக தமிழகத்தில் வெள்ளிக்கிழமை (செப். 20) ஆர்ப்பாட்டம் நடத்தப்போவதாக திமுக அறிவித்திருந்தது. எனினும், அமித் ஷாவின் விளக்கத்தை அடுத்து அந்தப் போராட்டம் ஒத்திவைக்கப்படுவதாக அக்கட்சி புதன்கிழமை அறிவித்தது. 

மக்கள் நீதி மய்யம் கட்சித் தலைவர் கமல்ஹாசன், தமிழகத்தில் ஹிந்தியைத் திணிக்க முற்பட்டால் கடந்த 2017-ஆம் ஆண்டு நடைபெற்ற ஜல்லிக்கட்டுக்கு ஆதரவான போராட்டத்தைக் காட்டிலும் மிகப்பெரிய போராட்டம் நடைபெறும் என்று எச்சரித்தார். 
நடிகர் ரஜினிகாந்த், ஹிந்தி மொழியைத் திணிக்கும் முயற்சியை தென் மாநிலங்கள் மட்டுமல்ல; வடமாநிலங்களே எதிர்க்கும் என்று புதன்கிழமை கூறியிருந்தார்.
 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com