அமித் ஷாவுடன் மம்தா சந்திப்பு : என்ஆர்சி குறித்துப் பேச்சு

மேற்கு வங்க முதல்வர் மம்தா பானர்ஜி, மத்திய உள்துறை அமைச்சர் அமித் ஷாவை வியாழக்கிழமை சந்தித்துப் பேசினார். அப்போது, அஸ்ஸாம் தேசிய குடிமக்கள் பதிவேட்டில் (என்ஆர்சி) உண்மையான குடிமக்களின் பெயர்கள்
தில்லியில் மத்திய உள்துறை அமைச்சர் அமித் ஷாவை வியாழக்கிழமை சந்தித்துப் பேசிய மம்தா பானர்ஜி.
தில்லியில் மத்திய உள்துறை அமைச்சர் அமித் ஷாவை வியாழக்கிழமை சந்தித்துப் பேசிய மம்தா பானர்ஜி.


மேற்கு வங்க முதல்வர் மம்தா பானர்ஜி, மத்திய உள்துறை அமைச்சர் அமித் ஷாவை வியாழக்கிழமை சந்தித்துப் பேசினார். அப்போது, அஸ்ஸாம் தேசிய குடிமக்கள் பதிவேட்டில் (என்ஆர்சி) உண்மையான குடிமக்களின் பெயர்கள் விடுபட்டது தொடர்பாக அவர் பேச்சுவார்த்தை நடத்தினார்.
தில்லியில் உள்ள உள்துறை அமைச்சக அலுவலகத்தில் அமித் ஷாவை மம்தா பானர்ஜி வியாழக்கிழமை சந்தித்துப் பேசினார். மத்திய உள்துறை அமைச்சராக அமித் ஷா பொறுப்பேற்ற பிறகு, மம்தா பானர்ஜி அவரைச் சந்தித்துப் பேசுவது இதுவே முதல் முறையாகும். இந்தச் சந்திப்புக்குப் பிறகு, செய்தியாளர்களிடம் மம்தா கூறியதாவது:
அஸ்ஸாமில் அண்மையில் வெளியிடப்பட்ட என்ஆர்சி இறுதிப் பட்டியல் தொடர்பாகப் பேச்சுவார்த்தை நடத்தவே உள்துறை அமைச்சரை சந்தித்தேன். அந்தப் பட்டியலில் இருந்து விடுபட்டவர்களில், உண்மையான இந்தியக் குடிமக்கள் சிலரும் இடம்பெற்றுள்ளனர். மேற்கு வங்கம், பிகார் ஆகிய மாநிலங்களைச் சேர்ந்தவர்களும், கோர்க்கா பிரிவினரும் அந்தப் பட்டியலிலிருந்து விடுபட்டுள்ளனர். அஸ்ஸாமில் பூர்விகமாக வசித்து வருபவர்கள் சிலரின் பெயர்களும் பட்டியலில் விடுபட்டுள்ளன.
இவற்றை உள்துறை அமைச்சரிடம் எடுத்துக் கூறி, இவை குறித்து நடவடிக்கை எடுக்குமாறு கோரிக்கை விடுத்தேன். இந்த விவகாரத்தில் தலையிட்டு, உரிய நடவடிக்கை எடுப்பதாக அவர் உறுதியளித்தார் என்றார் மம்தா பானர்ஜி.
மேற்கு வங்கத்தில் என்ஆர்சி அவசியமில்லை:  மேற்கு வங்கத்தில் தேசிய குடிமக்கள் பதிவேட்டுப் பணிகள் தொடங்கப்படுவது குறித்து சந்திப்பின்போது ஆலோசிக்கப்பட்டதா? என செய்தியாளர்கள் கேள்வி எழுப்பினர். இதற்கு மம்தா பதிலளித்ததாவது: 
அது குறித்து எந்தப் பேச்சுவார்த்தையும் நடைபெறவில்லை. மேற்கு வங்கத்தில் என்ஆர்சி பட்டியலுக்கான அவசியம் எதுவுமில்லை. பிகார் முதல்வர் நிதீஷ் குமாரும் அந்த மாநிலத்தில் என்ஆர்சி பட்டியலுக்கான அவசியம் இல்லை என்று கூறியுள்ளார்.
பிரதமரையும், உள்துறை அமைச்சரையும் சந்தித்துப் பிரச்னைகளை எடுத்துக் கூற வேண்டியது, மாநில முதல்வர்களின் கடமை. வங்கதேசம், பூடான் நாடுகளுடன் மேற்கு வங்கம் எல்லைகளைக் கொண்டுள்ளது; பிகார், ஜார்க்கண்ட் மாநிலங்களுடன் எல்லைகளைப் பகிர்ந்துகொண்டுள்ளது. வடகிழக்கு மாநிலங்களுக்குச் செல்வதற்கான முக்கிய வழித்தடமும் மேற்கு வங்கத்திலேயே உள்ளது. எனவே, இவை தொடர்பான பிரச்னைகள் குறித்து உள்துறை அமைச்சரிடம் எடுத்துக் கூறும் நோக்கிலேயே அவரைச் சந்தித்தேன் என்றார் மம்தா பானர்ஜி.
முன்னதாக, பிரதமர் நரேந்திர மோடியை புதன்கிழமை அவரது அலுவலகத்தில் சந்தித்த மம்தா, மேற்கு வங்கத்தின் பெயரை மாற்றுவது குறித்து பேச்சுவார்த்தை நடத்தினார். கடந்த மாதம் 31-ஆம் தேதி வெளியிடப்பட்ட என்ஆர்சி இறுதிப் பட்டியலில் 19 லட்சம் பேர் விடுபட்டிருந்தது குறிப்பிடத்தக்கது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com