ஐஎன்எஸ் விக்ராந்திலிருந்து முக்கிய மின்னணு பொருள்கள் திருட்டு

இந்தியாவில் உருவாக்கப்பட்டுவரும் முதல் விமானம் தாங்கி போர்க் கப்பலான ஐஎன்எஸ் விக்ராந்த்-இல் இருந்து முக்கியமான கணினி பாகங்கள் திருடுபோனது தொடர்பாக கேரள காவல்துறை சிறப்பு விசாரணைக் குழு விசாரித்து வருக
கொச்சியில் உருவாக்கப்பட்டு வரும் விக்ராந்த் போர்க்கப்பல் (கோப்புப்படம்).
கொச்சியில் உருவாக்கப்பட்டு வரும் விக்ராந்த் போர்க்கப்பல் (கோப்புப்படம்).


இந்தியாவில் உருவாக்கப்பட்டுவரும் முதல் விமானம் தாங்கி போர்க் கப்பலான ஐஎன்எஸ் விக்ராந்த்-இல் இருந்து முக்கியமான கணினி பாகங்கள் திருடுபோனது தொடர்பாக கேரள காவல்துறை சிறப்பு விசாரணைக் குழு விசாரித்து வருகிறது. 
கட்டுமானம் செய்யப்பட்டுவரும் போர்க் கப்பலில் இருந்து, கணினி பாகங்கள் திருடப்பட்டுள்ளது, மிகப்பெரிய பாதுகாப்புக் குறைபாடாக பார்க்கப்படுகிறது. 
ஐஎன்எஸ் விக்ராந்த் கப்பல், கேரள மாநிலம் கொச்சியில் உள்ள கப்பல் கட்டும் தளத்தில் கட்டுமானம் செய்யப்பட்டு வருகிறது. இந்நிலையில், அந்தக் கப்பலில் பொருத்தப்பட்டிருந்த கணினிகளிலிருந்து 10 ஹார்டு டிஸ்க்குகள், 3 சிபியுக்கள் ஆகிய வன்பொருள்கள் திருடப்பட்டுள்ளன. அவற்றில் கப்பல் குறித்த முக்கியத்
தகவல்கள் இடம்பெற்றுள்ளன. 
இதுதொடர்பாக உயரதிகாரிகள் கூறுகையில், கப்பலில் இருந்து ஆகஸ்ட் 29 முதல் செப்டம்பர் 12-ஆம் தேதிக்குள் தான் அந்தப் பொருள்கள் திருடப்பட்டுள்ளன. திருட்டு நடைபெற்று சுமார் 2 வாரங்களுக்கு அதுகுறித்த தகவல் தெரியவில்லை. இதற்குள்ளாக திருடப்பட்ட பொருள் அது கடத்தப்பட வேண்டிய இடத்துக்கு கொண்டு செல்லப்பட்டிருக்கும். அவற்றின் மதிப்பு ரூ.2.10 லட்சமாகும் என்றன. 
இதுதொடர்பாக கொச்சின் கப்பல் கட்டுமான நிறுவனம் அளித்த புகாரின் பேரில் வழக்குப் பதிவு செய்து, சிறப்பு விசாரணைக் குழு அமைத்து விசாரித்து வருவதாக கேரள காவல்துறை இயக்குநர் லோகேநாத் பெஹரா கூறியுள்ளார். மேலும், கடற்படையும், மத்திய புலனாய்வு அமைப்பும் தனியே சம்பவம் தொடர்பாக விசாரித்து வருவதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்தத் திருட்டு சம்பவம் உளவு வேலையாக இருக்காலம் என்றும் சந்தேகிக்கப்படுகிறது.  ஐஎன்எஸ் விக்ராந்த் கப்பலை பாதுகாக்கும் பொறுப்பு மத்திய தொழிலக பாதுகாப்புப் படையின் (சிஐஎஸ்எஃப்) வசம் உள்ளது. கடற்பகுதியிலிருந்து கப்பலுக்கு இருக்கும் அச்சுறுத்தலை எதிர்கொள்ளவே சிஐஎஸ்எஃப் பணியில் ஈடுபடுத்தப்பட்டுள்ளது. 
எனினும், விக்ராந்த் கப்பலின் உள்பகுதியில் தனியார் பாதுகாவலர்கள் பணியில் ஈடுபடுத்தப்பட்டுள்ளதாகவும், அங்கிருந்தே கணினி பாகங்கள் திருடப்பட்டுள்ளதாகவும் தெரியவந்துள்ளது. கப்பல் கட்டுமானப் பணியில் தொடர்புடைய நபர்கள் எவரும் இந்தத் திருட்டில் ஈடுபட்டிருக்கலாம் என்று காவல்துறையினர் சந்தேகிக்கின்றனர். 
கப்பலின் உள்ளேயும், வெளியேயும் கண்காணிப்புக் கேமராவும், கண்காணிப்பு உணர் கருவிகளும் பொருத்தப்பட்டிருக்கவில்லை என்று தகவலறிந்த வட்டாரங்கள் தெரிவித்தன.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com