சந்திரயான்-2 திட்டத்தின் 98 சதவீத நோக்கங்கள் வெற்றி: இஸ்ரோ தலைவர் கே.சிவன்

பூமியின் ஒரே துணைக்கோளான நிலவை ஆராய்வதற்காக அனுப்பப்பட்ட சந்திரயான்-2 விண்கலத்தின் 98 சதவீத நோக்கங்கள் வெற்றிகரமாக நிறைவடைந்துள்ளதாக இஸ்ரோ தலைவர் கே.சிவன் தெரிவித்துள்ளார்.
சந்திரயான்-2 திட்டத்தின் 98 சதவீத நோக்கங்கள் வெற்றி: இஸ்ரோ தலைவர் கே.சிவன்

பூமியின் ஒரே துணைக்கோளான நிலவை ஆராய்வதற்காக அனுப்பப்பட்ட சந்திரயான்-2 விண்கலத்தின் 98 சதவீத நோக்கங்கள் வெற்றிகரமாக நிறைவடைந்துள்ளதாக இஸ்ரோ தலைவர் கே. சிவன் தெரிவித்துள்ளார்.

நிலவுக்கு அடுத்த ஆண்டில் மற்றொரு விண்கலத்தை ஏவும் திட்டம் குறித்து ஆலோசனை நடத்தி வருவதாகவும் அவர் தெரிவித்துள்ளார்.

ஒடிஸா மாநிலத் தலைநகர் புவனேசுவரத்தில் உள்ள இந்தியத் தொழில்நுட்பக்கல்வி நிறுவனத்தின் (ஐஐடி) 8-ஆவது பட்டமளிப்பு விழாவில் கலந்துகொள்வதற்காக, இந்திய விண்வெளி ஆய்வு அமைப்பின் (இஸ்ரோ) தலைவர் கே. சிவன், புவனேசுவரம் விமான நிலையத்தை சனிக்கிழமை வந்தடைந்தார். 

அப்போது, செய்தியாளர்களிடம் அவர் கூறியதாவது:

சந்திரயான்-2 திட்டத்தின் 98 சதவீத நோக்கங்கள் வெற்றியடைந்துள்ளன. அறிவியலும், தொழில்நுட்பச் செயல்பாடுகளுமே 98 சதவீத நோக்கங்கள் வெற்றியடைந்ததற்கான காரணங்களாகும். தொழில்நுட்பச் செயல்பாட்டின் நோக்கங்கள் ஏறத்தாழ முழுமையாக வெற்றியடைந்துள்ளன.

நிலவுக்கு 2020-ஆம் ஆண்டில் மற்றொரு விண்கலத்தை அனுப்புவது குறித்து ஆலோசனை நடத்தி வருகிறோம். இருப்பினும், இது தொடர்பாக இறுதி முடிவு எதுவும் எடுக்கப்படவில்லை. 2021-ஆம் ஆண்டுக்குள் விண்வெளிக்கு மனிதர்களை அனுப்பும் "ககன்யான்' திட்டத்தின் மீதே எங்களுடைய முழு கவனமும் தற்போது உள்ளது.

குழு அமைப்பு: சந்திரயான்-2 விண்கலத்துடன் அனுப்பப்பட்டு, பூமியுடனான தொடர்பு துண்டிக்கப்பட்ட "விக்ரம்' லேண்டருக்கு என்ன ஆனது என்பதை அறிந்துகொள்வதற்கான நடவடிக்கைகளை எடுத்துள்ளோம். அதற்காக இஸ்ரோ நிபுணர்கள், கல்லூரிப் பேராசிரியர்கள் உள்ளிட்டோர் அடங்கிய தேசிய அளவிலான குழுவை அமைத்துள்ளோம். 

லேண்டருடனான தொடர்பை மீட்க தொடர்ந்து முயற்சித்து வருகிறோம். தொடர்பு மீட்கப்பட்டவுடன் அடுத்தகட்ட நடவடிக்கைகள் எடுக்கப்படும். நிலவைச் சுற்றி வரும் ஆர்பிட்டர் வெற்றிகரமாக இயங்கி வருகிறது. 

சுமார் ஓராண்டு மட்டுமே ஆர்பிட்டர் இயங்கும் என்று கணித்திருந்தோம். தற்போது, அதன் ஆயுள்காலம் ஏழரை ஆண்டுகளாக நீட்டிக்க வாய்ப்பிருக்கிறது. 

ஆர்பிட்டரில் 8 கருவிகள் பொருத்தப்பட்டுள்ளன. அவையனைத்தும் தங்களுக்குரிய பணிகளைச் சரியான முறையில் செய்து வருகின்றன என்றார் கே.சிவன். 

சந்திரயான்-2 திட்டம்: நிலவின் தென்துருவப் பகுதியை ஆராயும் நோக்கத்துடன் சந்திரயான்-2 விண்கலம் கடந்த ஜூலை 22-ஆம் தேதி விண்ணில் செலுத்தப்பட்டது. 

நிலவில் தரையிறங்கி ஆராய்ச்சி செய்வதற்காக, சந்திரயான்-2 விண்கலத்தின் ஆர்பிட்டரிலிருந்து கடந்த 7-ஆம் தேதி பிரித்துவிடப்பட்ட "விக்ரம்' லேண்டர், நிலவில் தரையிறங்க குறைந்த தொலைவே இருந்த நிலையில் கட்டுப்பாட்டு அறையுடனான தொடர்பை இழந்தது. 

கட்டுப்படுத்த இயலாத நிலையில் நிலவின் தரைப்பகுதியில் வீழ்ந்த "விக்ரம்' லேண்டருடனான தொடர்பை ஏற்படுத்த இஸ்ரோ விஞ்ஞானிகள் முயற்சித்து வருகின்றனர்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com