தேசிய நீரோட்டத்தில் சேர ஜம்மு-காஷ்மீர் மக்களுக்கு நல்ல வாய்ப்பு: ஜே.பி. நட்டா

தேசிய நீரோட்டத்தில் சேருவதற்கு ஜம்மு-காஷ்மீர் மக்களுக்கு நல்ல வாய்ப்பு கிடைத்துள்ளது என்று பாஜக தேசிய செயல் தலைவர் ஜே.பி.நட்டா தெரிவித்தார்.
தேசிய நீரோட்டத்தில் சேர ஜம்மு-காஷ்மீர் மக்களுக்கு நல்ல வாய்ப்பு: ஜே.பி. நட்டா

தேசிய நீரோட்டத்தில் சேருவதற்கு ஜம்மு-காஷ்மீர் மக்களுக்கு நல்ல வாய்ப்பு கிடைத்துள்ளது என்று பாஜக தேசிய செயல் தலைவர் ஜே.பி.நட்டா தெரிவித்தார்.
பெங்களூரு, அரண்மனை மைதானத்தில் பாஜக சார்பில் ஞாயிற்றுக்கிழமை நடைபெற்ற 'ஒரு நாடு,  ஓர் அரசியலமைப்புச் சட்டம்' மக்கள் விழிப்புணர்வுக் கூட்டத்தில் பங்கேற்று அவர் பேசியது: 
நாட்டின் இறையாண்மை மற்றும் நலனைப் பாதுகாக்கும் நோக்கில் ஜம்மு-காஷ்மீருக்கு சிறப்பு அந்தஸ்து வழங்கும் அரசியலமைப்புச் சட்டத்தின் 370-ஆவது பிரிவு நீக்கும் வரலாற்று சிறப்புமிக்க  தீர்மானம் எடுக்கப்பட்டது.  இதன் மூலம் தேசிய நீரோட்டத்தில் சேருவதற்கு ஜம்மு-காஷ்மீர் மக்களுக்கு நல்ல வாய்ப்புக் கிடைத்துள்ளது. அரசியலமைப்புச் சட்டப்பிரிவு 370-ஐ நீக்குவதற்கு பிரதமர் மோடி காட்டிய அரசியல் நிலைப்பாடு பாராட்டத்தக்கது. இதனால் ஜம்மு-காஷ்மீர் மக்கள் மகிழ்ச்சி அடைந்துள்ளனர். இதுவரை இரண்டாம் தரக் குடிமக்களாக வாழ்ந்துவந்த ஜம்மு-காஷ்மீர் மக்கள் இனி நிம்மதியாக வாழும் நம்பிக்கையைப் பெற்றுள்ளனர்.  இனி ஜம்மு-காஷ்மீர் மக்கள் தேசிய நீரோட்டத்தில் கலந்து வாழலாம்.  அரசியலமைப்புச் சட்டப் பிரிவு 370 நீக்கப்பட்டுள்ளதால்,  ஜம்மு-காஷ்மீரில் வசிக்கும் பிற்படுத்தப்பட்டோர், தாழ்த்தப்பட்டோர், பழங்குடியினருக்கும் அரசியல் இட ஒதுக்கீடு கிடைக்கவிருக்கிறது. காஷ்மீர் மக்களைப் போல எல்லா சமுதாய மக்களுக்கும் சம  உரிமை கிடைக்கவுள்ளது.
சுதந்திரத்துக்குப் பின்பு ஜம்மு-காஷ்மீரில் நிலை கொண்டிருந்த கிழக்கு பாகிஸ்தானியர்கள்,  குஜ்ஜார் சமுதாயத்தினருக்கு உரிமைகள் இல்லாமல் உள்ளது.  370ஆவது பிரிவு நீக்கப்பட்டுள்ளதால், அனைத்து சமுதாயத்தினருக்கும் சம உரிமை கிடைக்கவிருக்கிறது. இத்துடன் நமது நாட்டின் அரசியலமைப்புச் சட்டம் முழுமையாக காஷ்மீரில் அமலுக்கு வரவுள்ளது.  370-ஆவது பிரிவை நீக்கியதற்கு 3 குடும்பங்கள் கண்ணீர்விட்டதைத் தவிர,  நாட்டின் 130 கோடிமக்கள் மகிழ்ச்சி அடைந்துள்ளனர். 
மத்தியில் சட்டத் துறை அமைச்சராக இருந்த டாக்டர் பி.ஆர்.அம்பேத்கரும் ஜம்மு-காஷ்மீருக்கு  சிறப்பு அந்தஸ்து வழங்க 370ஆவது பிரிவை அரசியலமைப்புச் சட்டத்தில் சேர்க்க எதிர்ப்புத் தெரிவித்திருந்தார்.  நாட்டின் பிரிக்க முடியாத அங்கமாக ஜம்மு-காஷ்மீர் மாறியுள்ளது. இனிமேல் பிற மாநிலங்களைப் போல ஜம்மு-காஷ்மீர் வளர்ச்சி அடையவுள்ளது. 
ஜம்மு-காஷ்மீருக்கு அளித்துவந்த சிறப்பு அந்தஸ்தை திரும்பப் பெற்ற முடிவு நமது நாட்டின் உள்விவகாரமே அன்றி, இது பன்னாட்டு விவகாரம் அல்ல.  இந்த விவகாரத்தில் 100-க்கும் மேற்பட்ட நாடுகள் இந்தியாவுக்கு ஆதரவான நிலைப்பாட்டை எடுத்துள்ளன. இதற்கு பிரதமர் மோடியின் அரசியல் ராஜதந்திரமே காரணமாகும் என்றார் அவர்.
நிகழ்ச்சியில், மத்திய ரசாயனத் துறை அமைச்சர் சதானந்த கெளடா, பாஜக மாநிலத் தலைவர் நளின்குமார் கட்டீல், துணை முதல்வர் கோவிந்த் கார்ஜோள்,  அமைச்சர் வி.சோமண்ணா உள்ளிட்டோர் கலந்துகொண்டனர்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com