ஜம்மு-காஷ்மீர் ஆளுநருடன் வடமண்டல ராணுவ தளபதி சந்திப்பு

ஜம்மு-காஷ்மீர் ஆளுநர் சத்யபால் மாலிக்கை ராணுவத்தின் வடக்கு மண்டல தலைமை அதிகாரி ரண்வீர் சிங் திங்கள்கிழமை சந்தித்தார். இந்தச் சந்திப்பின்போது, காஷ்மீரின் பாதுகாப்பு நிலவரம் குறித்து
ஜம்மு-காஷ்மீர் ஆளுநருடன் வடமண்டல ராணுவ தளபதி சந்திப்பு


ஜம்மு-காஷ்மீர் ஆளுநர் சத்யபால் மாலிக்கை ராணுவத்தின் வடக்கு மண்டல தலைமை அதிகாரி ரண்வீர் சிங் திங்கள்கிழமை சந்தித்தார். இந்தச் சந்திப்பின்போது, காஷ்மீரின் பாதுகாப்பு நிலவரம் குறித்து ஆளுநரிடம் ரண்வீர் சிங் விளக்கினார்.
ஜம்மு-காஷ்மீருக்கான சிறப்பு அந்தஸ்தை ரத்து செய்து கடந்த மாதம் மத்திய அரசு நடவடிக்கை மேற்கொண்டது. அதனால், முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக, அங்கு கடும் கட்டுப்பாடுகளும், தடைகளும் விதிக்கப்பட்டன. காஷ்மீரின் பெரும்பாலான பகுதிகளில் இப்போது கட்டுப்பாடுகள் தளர்த்தப்பட்டுள்ளன. 
இந்நிலையில், ஆளுநரை ரண்வீர் சிங் சந்தித்தார். இதுதொடர்பாக ஆளுநர் மாளிகை செய்தித்தொடர்பாளர் கூறுகையில்,  ஸ்ரீநகரில் ஆளுநர் சத்யபால் மாலிக்கை ராணுவத்தின் வடக்கு மண்டல தலைமை அதிகாரி லெப்டினன்ட் ஜெனரல் ரண்வீர் சிங் திங்கள்கிழமை சந்தித்தார். 
காஷ்மீரில் தற்போது நிலவும் பாதுகாப்பு சூழல், பயங்கரவாதத்துக்கு எதிராக ராணுவத்தால் மேற்கொள்ளப்பட்டு வரும் நடவடிக்கைகள் ஆகியவை குறித்து ஆளுநரிடம் அவர் விளக்கினார். 
பயங்கரவாதத்துக்கு எதிராக உள்ளூர் நிர்வாகம், மாநில காவல் துறை, ராணுவம் என அனைவரும் இணைந்து செயல்பட வேண்டும் என ரண்வீர் சிங்கிடம் ஆளுநர் வலியுறுத்தினார் என்றார்.
50-ஆவது நாளாக இயல்பு வாழ்க்கை பாதிப்பு: ஜம்மு-காஷ்மீருக்கான சிறப்பு அந்தஸ்து ரத்து செய்யப்பட்டதையடுத்து, அங்கு கடந்த மாதம் 5-ஆம் தேதி முதல் கடும் கட்டுப்பாடுகளும், தடைகளும் விதிக்கப்பட்டுள்ளன. 
பெரும்பாலான இடங்களில் தடைகள் நீக்கப்பட்டாலும், தொடர்ந்து 50-வது நாளாக திங்கள்கிழமை மக்களின் இயல்பு வாழ்க்கையும், வர்த்தகமும் பாதிக்கப்பட்டன. 
காஷ்மீரில் கடந்த 50 நாள்களாக வர்த்தகம் நடைபெறாததால், சிறு நிறுவன தொழில்முனைவோர் கடுமையாகப் பாதிக்கப்பட்டுள்ளனர். 
சோபோர் மாவட்டம் உள்ளிட்ட தெற்கு காஷ்மீர் மாவட்டங்களில் ஆப்பிள் வர்த்தகம் பெரும்பாலான மக்களின் வாழ்வாதாரமாக உள்ள நிலையில், பயங்கரவாத அச்சுறுத்தல், அங்கு விதிக்கப்பட்டுள்ள தடைகள் ஆகியவற்றால் வர்த்தகம் கடுமையான பாதிப்புக்குள்ளாகி இருக்கிறது. இதனால் அந்த பகுதி தொழில்முனைவோர் கடும் நஷ்டத்தை சந்தித்தாக தெரிவித்தனர்.
40 கிலோ வெடிமருந்து பறிமுதல்
ஜம்மு-காஷ்மீரின் கதுவா மாவட்டத்தில் உள்ள வீட்டில் இருந்து 40 கிலோ வெடிமருந்து திங்கள்கிழமை பறிமுதல் செய்யப்பட்டது. இதுதொடர்பாக அதிகாரிகள் கூறுகையில், கதுவா மாவட்டம், தேவல் கிராமத்தில் உள்ள வீட்டில் வெடிபொருள்கள் பதுக்கி வைக்கப்பட்டுள்ளதாக, ராணுவத்துக்கு ரகசியத் தகவல் கிடைத்தது. 
அதையடுத்து அந்த கிராமத்தில் பாதுகாப்புப் படையினர் சோதனை நடத்தினர். அப்போது, அந்த கிராமத்தைச் சேர்ந்த கலீல் என்பவரின் மனைவி, அவரது வீட்டில் இருந்து இரண்டு பைகளை தூக்கி எறிவதை வீரர்கள் கண்டனர். அந்த பைகளை சோதனையிட்டதில், அதில் துப்பாக்கி குண்டுகள் தயாரிப்பதற்கான வெடிமருந்து இருந்தது. அந்த பைகளில் மொத்தம் 40 கிலோ வெடிமருந்து இருந்தது. இதுதொடர்பாக ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளார். அவரிடம் தொடர்ந்து விசாரணை நடைபெற்று வருகிறது என்றனர்.
 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com