ஒரே அடையாள அட்டை: உள்துறை அமைச்சர் அமித் ஷா யோசனை

ஆதார், ஓட்டுநர் உரிமம், கடவுச் சீட்டு, வங்கிக் கணக்குப் புத்தகங்கள் என அனைத்துக்கும் தனித்தனி அடையாள அட்டைக்குப் பதிலாக, நாடு முழுவதும் செல்லுபடியாகும் ஒரே அடையாள அட்டை இருக்க வேண்டுமென மத்திய
ஒரே அடையாள அட்டை: உள்துறை அமைச்சர் அமித் ஷா யோசனை

ஆதார், ஓட்டுநர் உரிமம், கடவுச் சீட்டு, வங்கிக் கணக்குப் புத்தகங்கள் என அனைத்துக்கும் தனித்தனி அடையாள அட்டைக்குப் பதிலாக, நாடு முழுவதும் செல்லுபடியாகும் ஒரே அடையாள அட்டை இருக்க வேண்டுமென மத்திய உள்துறை அமைச்சர் அமித் ஷா யோசனை தெரிவித்துள்ளார்.

இந்தியப் பதிவு ஆணையத்தின் புதிய அலுவலகத்துக்கான அடிக்கல் நாட்டு விழா தில்லியில் திங்கள்கிழமை நடைபெற்றது. இதில் பங்கேற்று அமித் ஷா பேசியதாவது:
வழக்கமாக காகிதம், பேனா ஆகியவற்றைக் கொண்டு மக்கள்தொகைக் கணக்கெடுப்பு மேற்கொள்ளப்படும். வரும் 2021-ஆம் ஆண்டு நடத்தப்படவுள்ள மக்கள்தொகை கணக்கெடுப்பு, முதல் முறையாக செல்லிடப்பேசி செயலி மூலம் நடைபெறவுள்ளது. இது மக்கள்தொகைக் கணக்கெடுப்பில் பெரும் புரட்சியாக இருக்கும். இந்தக் கணக்கெடுப்புடன் தேசிய மக்கள்தொகை பதிவேட்டுக்கான (என்பிஆர்) தகவல்களும் மக்களிடம் திரட்டப்படும்.

மக்கள்தொகை கணக்கெடுப்பின் மூலம் திரட்டப்படும் தகவலானது, மக்கள் நலத் திட்டங்களை வடிவமைப்பதற்கும், வளர்ச்சி நடவடிக்கைகளுக்கும் உதவும். எனவே, நாட்டிலுள்ள மக்கள் அனைவரும் கணக்கெடுப்பில் கலந்துகொள்ள வேண்டியது அவசியமாகும். மக்கள்தொகைக் கணக்கெடுப்பு தொடர்பாக நாட்டிலுள்ள 130 கோடி மக்களுக்கும் தெரியப்படுத்த வேண்டும்.
நகராட்சிகள், பேரவை மற்றும் மக்களவைத் தொகுதிகளுக்கான எல்லைகளை மறுவரையறை செய்யவும் இந்தக் கணக்கெடுப்பு உதவும். எனவே, மக்கள்தொகைக் கணக்கெடுப்புப் பணியை மேற்கொள்ள இருக்கும் பணியாளர்கள், மிகுந்த பொறுப்புடன் பணியாற்ற வேண்டும். அப்படிப் பணியாற்றினால், நாட்டைக் கட்டமைக்க உதவிய பெருமை அவர்களுக்குக் கிடைக்கும்.
மத்தியில் முந்தைய அரசுகள், மக்கள் நலத் திட்டங்களை முறையாகத் திட்டமிடாமல் செயல்படுத்தி வந்தன. பிரதமர் நரேந்திர மோடி தலைமையிலான பாஜக அரசு கடந்த 2014-ஆம் ஆண்டு பொறுப்பேற்ற பிறகு, அனைத்தும் மாறிவிட்டன. பிரச்னைகளுக்குத் தீர்வுகாணும் வழிமுறைகள் மாறிவிட்டன. ஒவ்வொரு திட்டங்களுக்கும் சரியான இலக்கு நிர்ணயித்து, அதை அடைவதற்கான நடவடிக்கைகளை மத்திய அரசு மேற்கொண்டு வருகிறது.

கணக்கெடுப்பே அடிப்படை:கடந்த 2011-ஆம் ஆண்டு மக்கள்தொகை கணக்கெடுப்பை அடிப்படையாக வைத்து, பிரதமர் மோடி தலைமையிலான அரசு 22 மக்கள் நலத் திட்டங்களைச் செயல்படுத்தி வருகிறது. அனைத்து வீடுகளுக்கும் மின்சாரம் வழங்கும் திட்டம், சாலை அமைக்கும் திட்டம், வீடு கட்டும் திட்டம், கழிப்பறை கட்டும் திட்டம், வங்கிக் கணக்குகள் தொடங்கும் திட்டம் உள்ளிட்ட அனைத்துக்கும் 2011 மக்கள்தொகைக் கணக்கெடுப்பே அடிப்படையாக உள்ளது. 
அவற்றில், வீடுதோறும் சமையல் எரிவாயு இணைப்பு வழங்கும் உஜ்வலா திட்டம் மிகப் பெரிய வெற்றி பெற்றுள்ளது. வரும் 2022-ஆம் ஆண்டுக்குள் நாட்டிலுள்ள அனைத்துக் குடும்பங்களுக்கும் சமையல் எரிவாயு இணைப்பு வழங்கப்படும்.

ஒரே அடையாள அட்டை: 2011-ஆம் ஆண்டு மக்கள்தொகைக் கணக்கெடுப்பில், சில மாநிலங்களில் பாலின விகிதம் குறைவாகக் காணப்பட்ட காரணத்தால்தான், பெண் குழந்தைகளைக் காப்போம், பெண் குழந்தைகளுக்குக் கல்வியளிப்போம் திட்டம் தொடங்கப்பட்டது. இத்திட்டத்தின் கீழ் ஹரியாணா மாநில அரசு கடந்த 5 ஆண்டுகளில் சிறப்பாகப் பணியாற்றியதன் காரணமாக, அங்கு ஆண்-பெண் பாலின விகிதம் மேம்பட்டுள்ளது.
ஆதார், கடவுச்சீட்டு, வங்கிக் கணக்குப் புத்தகங்கள், ஓட்டுநர் உரிமம், வாக்காளர் அடையாள அட்டை உள்ளிட்ட அனைத்தையும் சேர்த்து, ஒரே அடையாள அட்டையாக நாம் ஏன் வைத்துக்கொள்ளக் கூடாது? ஒரு நபருடைய அனைத்து தகவல்களும் ஒரே அடையாள அட்டையில் இருக்கும்படி அமைய வேண்டும். மக்கள்தொகைக் கணக்கெடுப்பு உள்ளிட்டவற்றுக்கு அது பெரும் உதவியாக இருக்கும்.

குறைவான வளங்கள்: உலகின் மொத்த பரப்பளவில் இந்தியாவின் பங்கு வெறும் 2.4 சதவீதம் என்றாலும், மொத்த மக்கள்தொகையில் 17.5 சதவீதம் பேர் இங்குள்ளனர். எனவே, நாட்டிலிருக்கும் மக்களுக்குத் தேவையான இயற்கை வளங்கள் குறைவாகவே உள்ளன.  
இந்த ஏற்றத்தாழ்வைப் போக்க மத்திய அரசு கடுமையாக உழைக்க வேண்டியிருக்கிறது என்றார் அமித் ஷா.

மக்கள்தொகை கணக்கெடுப்பு
2021-ஆம் ஆண்டு மார்ச் 1-ஆம் தேதியின்படி, நாட்டிலுள்ள மக்கள்தொகையின் கணக்கெடுப்புப் பணிகள் நடத்தப்படவுள்ளன. ஜம்மு-காஷ்மீர், ஹிமாசலப் பிரதேசம், உத்தரகண்ட் ஆகிய பனிபடர்ந்த மாநிலங்களில் சற்று முன்னதாக 2020-ஆம் ஆண்டு அக்டோபர் 1-ஆம் தேதி நிலவரப்படி கணக்கெடுப்புப் பணிகள் நடைபெறவுள்ளன.
16 மொழிகளில் கணக்கெடுப்பு நடத்தப்படவுள்ளது. இந்தக் கணக்கெடுப்புக்காக ரூ.12,000 கோடி செலவிட மத்திய அரசு திட்டமிட்டுள்ளது.
 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com