குறிப்பிட்ட சில பொதுத்துறை வங்கிகளை மூட உள்ளதா ஆர்பிஐ?  நிதித்துறை செயலாளர் விளக்கம் 

குறிப்பிட்ட சில வங்கிகளை ஆர்பிஐ மூட உள்ளதாக, சமூக வலைத்தளங்களில் வெளியான செய்திக்கு, மத்திய நிதித்துறை செயலாளர் விளக்கமளித்துள்ளார்.
மத்திய ரிசர்வ் வங்கி
மத்திய ரிசர்வ் வங்கி

புது தில்லி: குறிப்பிட்ட சில வங்கிகளை ஆர்பிஐ மூட உள்ளதாக, சமூக வலைத்தளங்களில் வெளியான செய்திக்கு, மத்திய நிதித்துறை செயலாளர் விளக்கமளித்துள்ளார்.

வங்கித் துறையில் மிகப்பெரிய சீர்திருத்தமாக, பல்வேறு பொதுத் துறை வங்கிகளை இணைப்பதாகவும், பொதுத் துறை வங்கிகளை சர்வதேச தரத்துக்கு மாற்றும் முயற்சியாகவும், வங்கிகளின் கடன் வழங்கும் திறனை அதிகப்படுத்தவும் இந்த நடவடிக்கையை மத்திய அரசு மேற்கொண்டுள்ளதாக மத்திய நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் கடந்த மாத இறுதியில் அறிவித்தார். மத்திய அரசின் இந்த இணைப்பு நடவடிக்கைக்குப் பிறகு 12 பொதுத் துறை வங்கிகள் மட்டுமே நடைமுறையில் செயல்படும் என்றும் அவர் தெரிவித்தார்.

இதுதொடர்பாக நிதித் துறைச் செயலர் ராஜீவ் குமார் செய்தியாளர்களிடம் பேசுகையில், நிகழாண்டின் தொடக்கத்தில், பாங்க் ஆஃப் பரோடாவுடன் தேனா வங்கியும், விஜயா வங்கியும் இணைக்கப்பட்டன. அதற்கு முன், பாரத ஸ்டேட் வங்கியின் 5 துணை வங்கிகள், பாரதிய மகிளா வங்கி ஆகியவை பாரத ஸ்டேட் வங்கியுடன் இணைக்கப்பட்டன. இதனால் எந்த ஊழியர்கள் குறைப்பு நடவடிக்கையும் இல்லை என்பதை கவனத்தில் கொள்ள வேண்டும் என்று தெரிவித்தார்.

இந்நிலையில் குறிப்பிட்ட சில பொதுத்துறை வங்கிகளை ஆர்பிஐ மூட உள்ளதாக, சமூக வலைத்தளங்களில் தகவல்கள் வேகமாக பரவத் துவங்கியது. 

அதையடுத்து சமூக வலைதளங்களில் பரவும் தகவல்கள் தவறானவை என்றும், பொதுத்துறை வங்கிகள் மூடப்படும் என்ற பேச்சுக்கே இடமில்லை என்றும் நிதித்துறை செயலாளர் ராஜீவ் குமார் விளக்கமளித்துள்ளார்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com