உள்நாட்டில் பாதுகாப்பு தளவாட உற்பத்தியை மேம்படுத்த வேண்டும்: டிஆர்டிஓ தலைவர் வலியுறுத்தல்

"உள்நாட்டில் பாதுகாப்பு தளவாட உற்பத்தியை மேம்படுத்துவதில் கூடுதல் கவனம் செலுத்தப்பட வேண்டும்' என்று பாதுகாப்பு ஆராய்ச்சி மற்றும் மேம்பாட்டு அமைப்பின் (டிஆர்டிஓ) தலைவர் ஜி.சதீஷ் ரெட்டி

"உள்நாட்டில் பாதுகாப்பு தளவாட உற்பத்தியை மேம்படுத்துவதில் கூடுதல் கவனம் செலுத்தப்பட வேண்டும்' என்று பாதுகாப்பு ஆராய்ச்சி மற்றும் மேம்பாட்டு அமைப்பின் (டிஆர்டிஓ) தலைவர் ஜி.சதீஷ் ரெட்டி வலியுறுத்தியுள்ளார்.
மேகாலய மாநிலம், ஷில்லாங்கில் உள்ள தேசிய தொழில்நுட்ப கல்வி நிறுவனத்தின் 6-ஆவது பட்டமளிப்பு விழா சனிக்கிழமை நடைபெற்றது. இதில், டிஆர்டிஓ தலைவர் ஜி.சதீஷ் ரெட்டி பங்கேற்றுப் பேசியதாவது: இந்தியாவைப் பொருத்தவரை, உள்நாட்டு பாதுகாப்பு தளவாடங்கள் உற்பத்தி 45 - 50 சதவீதம்தான் உள்ளது. பாதுகாப்பு தளவாடங்களுக்காக, இறக்குமதியையே அதிகம் சார்ந்துள்ளோம். பாதுகாப்புத் துறையில் இறக்குமதியை குறைக்க கூடுதல் கவனம் செலுத்தப்பட வேண்டியது அவசியம். இதேபோல், பாதுகாப்புசார் தொழில்நுட்பங்களிலும் நாம் தற்சார்புடன் திகழ வேண்டும்.
மற்ற நாடுகளுக்கு தொழில்நுட்பங்களை வழங்கும் நிலையை எட்டுவதை இலக்காக கொண்டு செயலாற்ற வேண்டும். இதன் மூலம் பாதுகாப்பு தொழில் துறையில் நிலையான வளர்ச்சியை உறுதி செய்வதுடன் அந்நிய செலாவணியையும் நாம் ஈட்ட முடியும்.
உலக அளவில் தொழில்நுட்பங்களின் வழிகாட்டியாக உருவெடுப்பதை இலக்காக கொண்டு, டிஆர்டிஓ பணியாற்றி வருகிறது. போர் விமானங்கள் தயாரிப்பில், அடுத்த 10 ஆண்டுகளில் டிஆர்டிஓ சிறப்பான இடத்தை அடையும். உள்நாட்டில் உருவாக்கப்பட்ட ரேடார் கட்டமைப்பு உள்பட பல்வேறு தொழில்நுட்பங்களை உருவாக்கியுள்ளோம். துல்லியமாக தாக்கக் கூடிய ஏவுகணைகளை உருவாக்கிய அமெரிக்கா, ரஷியா, சீனா ஆகிய நாடுகளின் வரிசையில் இந்தியாவும் உள்ளது.  புத்தாக்க முயற்சிகளை, மத்திய அரசு தொடர்ந்து ஊக்குவித்து வருகிறது. எனவே, அரசின் வாய்ப்புகளை மாணவர்கள் பயன்படுத்திக் கொள்ள வேண்டும் என்றார் அவர்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com