10 எம்எல்ஏ-க்களை விலைக்கு வாங்க பாஜக ரூ. 300 கோடி செலவழித்தது: கோவா காங்கிரஸ் தலைவர்

கோவாவில் காங்கிரஸ் எம்எல்ஏ-க்கள் 10 பேரை விலைக்கு வாங்குவதற்காக பாஜக சுமார் ரூ. 300 கோடி செலவழித்ததாக காங்கிரஸ் மாநிலத் தலைவர் கிரிஷ் சோடாங்கர் தெரிவித்துள்ளார். 
புகைப்படம்: கிரிஷ் சோடாங்கர் டிவிட்டர்
புகைப்படம்: கிரிஷ் சோடாங்கர் டிவிட்டர்


கோவாவில் காங்கிரஸ் எம்எல்ஏ-க்கள் 10 பேரை விலைக்கு வாங்குவதற்காக பாஜக சுமார் ரூ. 300 கோடி செலவழித்ததாக காங்கிரஸ் மாநிலத் தலைவர் கிரிஷ் சோடாங்கர் தெரிவித்துள்ளார். 

பாஜக மாநிலங்களவை உறுப்பினர் சுப்ரமணியன் சுவாமி தெற்கு கோவாவில் நேற்று (ஞாயிற்றுக்கிழமை) உரையாற்றினார். அப்போது பேசிய அவர், "பாஜகவில் இணைந்த புதிய நபர்கள் அமைச்சர்களாக நியமிக்கப்பட்டுள்ளனர். இந்தச் சூழல் தற்காலிகமானதுதான். இதனால், ஏமாற்றத்துடன் இருக்கும் கட்சி நிர்வாகிகளுக்கு விரைவில் உரிய மரியாதை கிடைக்கும்" என்றார்.

இந்நிலையில் இதுகுறித்து கருத்து தெரிவித்துள்ள காங்கிரஸ் கட்சியின் மாநிலத் தலைவர் கிரிஷ் சோடாங்கர், "பாஜக தங்களுக்குத் தேவையானவர்களைப் பயன்படுத்திக்கொண்டு, தூக்கி எறிந்துவிடும். பாஜகவின் உள்ளுணர்வையே சுப்பிரமணியன் சுவாமி வெளிப்படுத்தியுள்ளார். கட்சி மாறியவர்களை, பாஜக அழித்துவிடும். அதில் ஒரு சிலருக்கு பணம் கொடுக்கப்பட்டது. சிலருக்கு அமைச்சர் பதவி உள்ளிட்ட பதவிகள் வழங்கப்பட்டது. மேலும், இந்த எம்எல்ஏ-க்களை விலைக்கு வாங்க பாஜக ரூ. 300 கோடி செலவழித்தது. 

பாஜகவுக்காக எங்களைவிட்டு விலகிய 10 பேருக்கு முடிவு காலம் தொடங்கிவிட்டது. அதை அவர்கள் உணருவார்கள்" என்றார். 

முன்னதாக:

40 தொகுதிகளைக் கொண்ட கோவா சட்டப்பேரவைக்கு கடந்த 2017-ஆம் ஆண்டு தேர்தல் நடைபெற்றது. இதில், காங்கிரஸ் கட்சி 17 தொகுதிகளில் வெற்றி பெற்று தனிப்பெரும் கட்சியாக உருவெடுத்தது. ஆனால், அதே சட்டப்பேரவையில் காங்கிரஸ் கட்சியின் உறுப்பினர்கள் தற்போது 5 ஆக குறைந்துள்ளது. கோவா பேரவையின் அப்போதைய எதிர்க்கட்சித் தலைவர் சாந்திரகாந்த் காவ்லேகர் உட்பட 10 காங்கிரஸ் எம்எல்ஏ-க்கள் கடந்த ஜூலை மாதம் பாஜகவில் இணைந்தனர். இதுதவிர மூன்று காங்கிரஸ் எம்எல்ஏ-க்களும் இதற்கு முன்னதாக பாஜகவில் இணைந்தனர் என்பது குறிப்பிடத்தக்கது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com