மோடியை நாட்டின் தந்தை என்பதா? கொதிக்கிறார் காந்தியின் கொள்ளுப் பேரன்!

அமெரிக்க அதிபருக்கு வேண்டுமானால் இந்தியப் பிரதமர் நரேந்திர மோடி நாட்டின் தந்தையாகத் தெரியலாம், ஆனால், மகாத்மா காந்தியின் கொள்ளுப் பேரனுக்கு அது பிடிக்கவில்லை.
மோடியை நாட்டின் தந்தை என்பதா? கொதிக்கிறார் காந்தியின் கொள்ளுப் பேரன்!


மும்பை: அமெரிக்க அதிபருக்கு வேண்டுமானால் இந்தியப் பிரதமர் நரேந்திர மோடி நாட்டின் தந்தையாகத் தெரியலாம், ஆனால், மகாத்மா காந்தியின் கொள்ளுப் பேரனுக்கு அது பிடிக்கவில்லை.

அமெரிக்காவின் ஜார்ஜ் வாஷிங்டன்னுக்கு மாற்றாக அதிபர் டொனால்ட் டிரம்ப் தன்னைக் கருதுகிறாரா என்று ஒரு சரவெடிக் கேள்வியையும் எழுப்பியுள்ளார் மகாத்மா காந்தியின் கொள்ளுப் பேரன் துஷார் காந்தி.

கடந்த வாரம் அமெரிக்கா சென்றிருந்த பிரதமர் நரேந்திர மோடியை பாராட்டிப் பேசிய அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்ப், இதற்கு முன்பு இந்தியா பழைய கந்தை போல இருந்தது எனக்கு நினைவிருக்கிறது. ஏராளமான வேறுபாடுகள், மோதல்கள் இருந்தன. ஆனால், மோடி எல்லாவற்றையும் ஒருங்கிணைத்து விட்டார். ஒரு தந்தையைப் போல. அவர் தான் இந்தியாவின் தந்தை என்று குறிப்பிட்டார்.

செப்டம்பர் 24ம் தேதி டொனால்ட் டிரம்ப் பேசிய இந்த பேச்சுக்கு மகாத்மா காந்தியின் கொள்ளுப் பேரன் துஷார் காந்தி தனது கருத்தினை பதிவு செய்துள்ளார்.

இந்தியாவின் தேசத் தந்தையின் இடத்தை நிரப்ப வேண்டும் என்று யார் நினைத்தாலும் அவரை வரவேற்கிறேன். அமெரிக்காவின் தந்தை என்று அறியப்படும் ஜார்ஜ் வாஷிங்டன் இடத்தைப் பிடிக்க வேண்டும் என்று ஒருவேளை அதிபர் டொனால்ட் டிரம்ப் விரும்பலாம் என்று கூறியுள்ளார்.

59 வயதாகும் துஷார் காந்தி, செய்தியாளர் அருண் காந்தியின் மகனாவார். அருண் காந்தி, மகாத்மா காந்தியின் மகன் மணிலால் காந்தியின் மகனாவார்.

அதே சமயம், மகாத்மா காந்தியின் 150வது பிறந்ததினத்தைக் கொண்டாட மத்திய அரசு திட்டமிட்டிருப்பது குறித்து மகாத்மா காந்தி அறக்கட்டளையின் அறங்காவலரான துஷார் காந்தி கூறுகையில், அது வெறும் அடையாளத்துக்காக செய்யப்படும் நிகழ்வு மட்டுமே என்று தெரிவித்தார்.
 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com