கிசான் ரயில் சேவை
கிசான் ரயில் சேவை

கிசான் ரயில் சேவை: கொடியசைத்துத் துவக்கி வைத்தார் மத்திய அமைச்சர் நரேந்திர சிங் தோமர்

மகாராஷ்டிரத்தின் தேவ்லாலி - பிகாரின் தனாபூர் கிசான் ரயிலை மத்திய வேளாண், விவசாயிகள் நலத்துறை அமைச்சர் நரேந்திர சிங் தோமர் இன்று காணொலி காட்சி மூலமாக கொடியசைத்துத் துவக்கி வைத்தார்.

மகாராஷ்டிரத்தின் தேவ்லாலி - பிகாரின் தனாபூர் கிசான் ரயிலை மத்திய வேளாண், விவசாயிகள் நலத்துறை அமைச்சர் நரேந்திர சிங் தோமர் இன்று காணொலி காட்சி மூலமாக கொடியசைத்துத் துவக்கி வைத்தார். நிகழ்ச்சிக்கு மத்திய ரயில்வே, வர்த்தக, தொழில்துறை அமைச்சர் பியூஷ் கோயல் தலைமை வகித்தார்.

நிகழ்ச்சியில் பேசிய நரேந்திர சிங் தோமர், “கிசான் ரயில் வேளாண் விளைபொருள்களை நாட்டின் பல்வேறு பகுதிகளுக்கும் நியாயமான விலையில் எடுத்துச் சென்று விவசாயிகளுக்கு நன்மை அளிக்கும்; இதன் காரணமாக விவசாயிகளின் வருவாயை 2022ஆம் ஆண்டுக்குள் இரட்டிப்பாக்குவது என்ற பிரதமரின் தொலைநோக்குப் பார்வையை அடைய முடியும்” என்று கூறினார். நாட்டில் சரக்குப்போக்குவரத்து கட்டமைப்பை, குறிப்பாக அழுகும் தன்மை கொண்ட பொருள்களுக்கான போக்குவரத்தை காலவரையறைக்கு உட்பட்டு மேற்கொள்ள வேண்டும் என்ற பிரதமர் நரேந்திர மோடியின் பார்வை குறித்து தோமர் நன்றி தெரிவித்தார். 

சரக்குப்போக்குவரத்து வசதி இல்லாததன் காரணமாக உழவர்கள் தங்களது விளைபொருள்களுக்கு உரிய விலையை பெற முடியாத நிலை இருந்தது என்றும், கொவைட் பெருந்தொற்று நிலவும் கடினமான சூழலில், கிசான் ரயிலைத் துவக்கியதற்காக மத்திய ரயில்வே அமைச்சகத்திற்கு அவர் பாராட்டு தெரிவித்தார். நிகழ்ச்சியில் பங்கேற்றவர்களிடையே காணொலி மூலமாக உரையாற்றிய வேளாண்துறை அமைச்சர், உழவர்களின் நலன் காக்க அரசு உறுதி பூண்டுள்ளது என்றார். அழுகக்கூடிய வேளாண் விளைபொருள்கள், கால்நடைப்பிரிவு உணவுப்பொருள்கள் ஆகியவற்றுக்காக தேசிய அளவிலான குளிர்ப்பதன, தங்கு தடையின்றி கிடைக்கக் கூடிய, பொருள் வழங்கு தொடர் மூலமாக உழவர்களின் நலன்கள் பாதுகாக்கப்படுகின்றன என்று அவர் கூறினார். 

போர்பந்தர் முதல் தானே வரையில் முதன் முதலாக ரயில் 1853ஆம் ஆண்டில் விடப்பட்டது என்று குறிப்பிட்ட பியூஷ் கோயல், பிரதமர் நரேந்திர மோடி தலைமையிலான மத்திய அரசு தற்போது 2020ஆம் ஆண்டில் முதலாவது, கிசான் ரயிலை இயக்கியுள்ளது என்று கூறினார். பிரதமர் கிசான் திட்டத்தை, அரசு அறிமுகப்படுத்தியுள்ளது. இத்திட்டத்தின் கீழ் உழவர்களின் குடும்பங்களுக்கு 6000 ரூபாய் அளிக்கப்பட்டு வருகிறது. அவர்களின் வருவாயை இரட்டிப்பாக்குவதற்காக மேலும் பல திட்டங்களும் செயல்படுத்தப்பட்டு வருகின்றன. உணவுப்பொருள் வழங்கு தொடரை மேம்படுத்துவதற்கான பணிகளிலும், ரயில்வே அமைச்சகம் ஈடுபட்டுள்ளது. இதனால் உழவர்கள் தங்களது பயிர்களுக்கு அதிக விலை பெற முடியும் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

அரசு மற்றும் தனியாா் பங்களிப்புடன் இயக்கப்படும் முழுவதும் குளிா்சாதன வசதியுடன் கூடிய இந்த கிசான் ரயில் திட்டத்தை, நாடாளுமன்றத்தில் இந்த ஆண்டு நிதிநிலை அறிக்கை தாக்கலின்போது நிதியமைச்சா் நிா்மலா சீதாராமன் அறிவித்தாா். அதனடிப்படையில், இந்தத் திட்டத்தை ரயில்வே அமைச்சகம் அறிமுகம் செய்திருப்பது குறிப்பிடத்தக்கது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

X
Dinamani
www.dinamani.com