ராஜஸ்தான் அரசியலில் திடீர் திருப்பம்: ராகுல், பிரியங்காவுடன் சச்சின் பைலட் சந்திப்பு

ராஜஸ்தான் காங்கிரஸ் அதிருப்தி தலைவரான சச்சின் பைலட், கட்சித் தலைவர்களான ராகுல் காந்தி, பிரியங்கா ஆகியோரை தில்லியில் திங்கள்கிழமை சந்தித்தார். 
கோப்புப்படம்
கோப்புப்படம்


புது தில்லி: ராஜஸ்தான் காங்கிரஸ் அதிருப்தி தலைவரான சச்சின் பைலட், கட்சித் தலைவர்களான ராகுல் காந்தி, பிரியங்கா ஆகியோரை தில்லியில் திங்கள்கிழமை சந்தித்தார். 

ராஜஸ்தான் அரசியல் நிலவரம் பரபரப்பாக இருக்கும் நிலையில் வரும் 14-ஆம் தேதி மாநில சட்டப்பேரவைக் கூட்டம் நடைபெற இருக்கிறது.  இச்சூழலில் இந்த சந்திப்பு திடீர் திருப்பத்தை ஏற்படுத்தியுள்ளது. 

இதுகுறித்து சச்சின் பைலட்டுக்கு நெருக்கமான வட்டாரங்கள் கூறுகையில், "சுமார் 2 மணி நேரம் இந்த சந்திப்பு நடைபெற்றது. பைலட் குழுவினரால் முன்வைக்கப்பட்ட பல்வேறு விவகாரங்களுக்கு தீர்வு காணப்படும் என்று கட்சி மேலிடம் உறுதியளித்தது' என்றன. 

இதுகுறித்து காங்கிரஸ் வட்டாரங்கள் கூறியதாவது: 
தில்லியில் ராகுல் காந்தி இல்லத்தில் திங்கள்கிழமை பிற்பகலில் அவரையும், பிரியங்காவையும் சச்சின் பைலட் சந்தித்து பேசினார். இந்த சந்திப்பால் சாதகமான முடிவுகள் ஏற்படலாம் என எதிர்பார்க்கப்படுகிறது. காங்கிரஸின் மேலிட தலைவர்களுடன் சச்சின் பைலட் தொடர்பில் இருந்து வருகிறார். அத்துடன், அவர் மீண்டும் சுமுகமாக கட்சிக்கு திரும்புவதற்கான நடைமுறைகள் ஆலோசிக்கப்பட்டு வருகின்றன. 

குறிப்பாக, வரும் 14-ஆம் தேதி ராஜஸ்தான் சட்டப்பேரவையில் நம்பிக்கை வாக்கெடுப்பு நடைபெறும் பட்சத்தில் சச்சின் பைலட்டும், அவரது ஆதரவு எம்எல்ஏக்கள் 18 பேரும் காங்கிரஸ் அரசுக்கு ஆதரவாக வாக்களிப்பது குறித்தும் அப்போது ஆலோசிக்கப்பட்டது. 

காங்கிரஸ் அதிருப்தி எம்எல்ஏக்களில் சிலரும் கட்சி மேலிடத்துடன் கடந்த சில நாள்களாக தொடர்பில் இருந்து வருகின்றனர். அந்த வகையில் அதில் ஒரு எம்எல்ஏ மீண்டும் கட்சிக்கு திரும்பிவிட்டார். இதர எம்எல்ஏக்களும் விரைவில் கட்சித் தலைமையை சந்தித்து தங்களது குறைகள் தொடர்பாக ஆலோசிப்பார்கள் எனத் தெரிகிறது என்று அந்த வட்டாரங்கள் கூறின. 

ராஜஸ்தானில் முதல்வர் அசோக் கெலாட் தலைமையிலான காங்கிரஸ் ஆட்சியில் சச்சின் பைலட் துணை முதல்வராகவும், மாநில காங்கிரஸ் தலைவராகவும் இருந்து வந்தார். இந்நிலையில், மாநிலத்தில் காங்கிரஸ் ஆட்சியை கவிழ்ப்பதற்கு முயற்சி நடைபெறுவதாக குற்றம்சாட்டிய முதல்வர் கெலாட், அதுதொடர்பாக காவல்துறை சிறப்புக் குழுவிடம் புகார் அளித்தார். 

இதுதொடர்பான விசாரணைக்காக துணை முதல்வர் சச்சின் பைலட்டுக்கு அந்தக் குழு நோட்டீஸ் அனுப்பியது. ஏற்கெனவே கெலாட்டுடன் பைலட்டுக்கு மோதல் போக்கு இருந்துவந்த நிலையில், இந்த விவகாரத்தால் அவர்களிடையேயான பூசல் உச்சத்தை எட்டியது. 

கெலாட் இல்லத்தில் நடைபெற்ற காங்கிரஸ் எம்எல்ஏக்கள் கூட்டத்தில் பங்கேற்க கொறடா உத்தரவு பிறப்பிக்கப்பட்டபோதும், சச்சின் பைலட்டும், அவரை ஆதரிக்கும் 18 எம்எல்ஏக்களும் அந்தக் கூட்டத்தில் பங்கேற்காமல் தவிர்த்ததுடன் ஹரியாணாவில் தனியே முகாமிட்டனர். 

இதனால் துணை முதல்வர், மாநில காங்கிரஸ் தலைவர் பதவியிலிருந்து சச்சின் பைலட் நீக்கப்பட்டார். அத்துடன், அவர் ஆதரவு அமைச்சர்கள் இருவர் அமைச்சரவையில் இருந்து நீக்கப்பட்டனர். 

மேலும் கட்சி கொறடா உத்தரவை மீறியதாக சச்சின் பைலட் உள்ளிட்ட அதிருப்தி எம்எல்ஏக்களை தகுதிநீக்கம் செய்யக்கோரி பேரவைத் தலைவரிடம் காங்கிரஸ் புகார் அளித்தது. அதனடிப்படையில் அவர் சச்சின் பைலட் தரப்பு எம்எல்ஏக்களுக்கு நோட்டீஸ் அனுப்பினார். 

இதற்கு எதிராக அவர்கள் நீதிமன்றத்தை நாட, இந்த விவகாரம் முதலில் ராஜஸ்தான் உயர்நீதிமன்றத்தையும், பின்னர் உச்சநீதிமன்றத்தையும் எட்டியது. இறுதியாக பேரவைத் தலைவர் அதிருப்தி எம்எல்ஏக்கள் மீது நடவடிக்கை எடுக்க உயர்நீதிமன்றம் தடை விதித்தது. இந்நிலையில், தனது பெரும்பான்மையை நிரூபிக்க ஏதுவாக பேரவைக் கூட்டத்தை நடத்துமாறு ராஜஸ்தான் மாநில ஆளுநர் கல்ராஜ் மிஸ்ராவிடம் முதல்வர் கெலாட் ஒன்றுக்கு மேற்பட்ட முறை முறையிட்டார். 

முதலில் அதற்கு மறுத்து வந்த ஆளுநர், இறுதியாக வரும் 14-ஆம் தேதி பேரவைக் கூட்டத்தை நடத்த ஆளுநர் ஒப்புதல் அளித்தார். இந்நிலையில், சச்சின் பைலட் காங்கிரஸ் மேலிட தலைவர்களை சந்தித்துள்ளது ராஜஸ்தான் அரசியலில் முக்கியத்துவம் வாய்ந்த திருப்பமாக அமைந்துள்ளது. 

குழு அமைப்பு: சச்சின் பைலட் மற்றும் அவர் தரப்பு எம்எல்ஏக்கள் எழுப்பிய பல்வேறு விவகாரங்களுக்கு தீர்வு காண்பதற்காக 3 நபர் குழுவை அமைக்க காங்கிரஸ் தலைவர் சோனியா காந்தி முடிவு செய்துள்ளதாக கட்சி வட்டாரங்கள் தெரிவித்தன. 

கெலாட்டுடன் அதிருப்தி எம்எல்ஏ சந்திப்பு: சச்சின் பைலட் குழுவைச் சேர்ந்த அதிருப்தி எம்எல்ஏ பன்வர்லால் சர்மா, ராஜஸ்தான் முதல்வர் அசோக் கெலாட்டை திங்கள்கிழமை நேரில் சந்தித்தார். ராகுல், பிரியங்காவை சச்சின் பைலட் சந்தித்த சில மணி நேரத்துக்குப் பிறகு இந்த சந்திப்பு நடைபெற்றது. 
 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com