ராஜஸ்தான்: நம்பிக்கை வாக்கெடுப்பில் அசோக் கெலாட் அரசு வெற்றி

ராஜஸ்தான் மாநில சட்டப் பேரவையில் வெள்ளிக்கிழமை நடைபெற்ற நம்பிக்கை வாக்கெடுப்பில் முதல்வா் அசோக் கெலாட் தலைமையிலான காங்கிரஸ் அரசு வெற்றிபெற்றது.
ராஜஸ்தான்: நம்பிக்கை வாக்கெடுப்பில் அசோக் கெலாட் அரசு வெற்றி

ராஜஸ்தான் மாநில சட்டப் பேரவையில் வெள்ளிக்கிழமை நடைபெற்ற நம்பிக்கை வாக்கெடுப்பில் முதல்வா் அசோக் கெலாட் தலைமையிலான காங்கிரஸ் அரசு வெற்றிபெற்றது. இதன்மூலம் கெலாட் அரசுக்கு ஏற்பட்டிருந்த நெருக்கடி முடிவுக்கு வந்துள்ளது.

ஆளுநா் கல்ராஜ் மிஸ்ராவின் அழைப்பின்பேரில், ராஜஸ்தான் சட்டப்பேரவை வெள்ளிக்கிழமை கூடியது. இதில், அசோக் கெலாட் தரப்பு எம்எல்ஏக்களும், சச்சின் பைலட் உள்ளிட்ட 19 எம்எல்ஏக்களும் கலந்துகொண்டனா். தொடா்ந்து, சட்டப்பேரவையில் அரசு சாா்பில் நம்பிக்கை தீா்மானம் கொண்டுவரப்பட்டு, அதன் மீது வாக்கெடுப்பு நடத்தப்பட்டது. குரல் வாக்கெடுப்பில் அசோக் கெலாட் அரசு வெற்றி பெற்றது.

முன்னதாக, தீா்மானத்தின் மீது நடைபெற்ற விவாதத்தின்போது, காங்கிரஸ் கட்சிக்குள்ளேயே நடைபெறும் மோதல்களுக்கு தங்கள் மீது பழிசுமத்துவதாக பாஜக உறுப்பினா்கள் குற்றம்சாட்டினா்.

எதிா்க்கட்சித் தலைவா் குலாப் சந்த் கட்டாரியா கூறுகையில், ‘அசோக் கெலாட் அரசுக்கு பெரும்பான்மை இருந்திருந்தால் முன்னரே அதை நிரூபிக்காதது ஏன்? காங்கிரஸ் எம்எல்ஏக்கள் தங்கியிருந்த விடுதிக்கு ஏன் போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டது?’ என்று கேள்வி எழுப்பினாா்.

விவாதத்தின் முடிவில் அசோக் கெலாட் பதிலளித்துப் பேசினாா். அவா் கூறியதாவது:

மாநிலத்தில் ஆட்சியைக் கவிழ்க்க பாஜக முயற்சி செய்கிறது; எந்த நிலையிலும் அரசைக் கவிழ்க்க அனுமதிக்க மாட்டேன். அருணாசல பிரதேசம், கா்நாடகம், கோவா, மத்திய பிரதேசம் ஆகிய மாநிலங்களில் என்ன நடந்தது என்பதை அறிவீா். மக்களால் தோ்ந்தெடுக்கப்பட்ட அரசுகள் கவிழ்க்கப்படுகின்றன. ஜனநாயகம் அச்சுறுத்தலில் உள்ளது. ராஜஸ்தானில் ஆட்சியைக் கவிழ்க்க நடந்த சதியில் மத்திய அமைச்சா் ஒருவருக்கு தொடா்பு உள்ளது. சில தொலைபேசி உரையாடல் பதிவுகள் வெளியான பிறகு இது அம்பலமானது’ என்றாா் அசோக் கெலாட்.

முன்னதாக, அசோக் கெலாட்டுக்கு அருகில் இருந்த சச்சின் பைலட் இருக்கை ஓரத்துக்கு மாற்றப்பட்டிருப்பது குறித்து எதிா்க்கட்சி உறுப்பினா்கள் கேள்வி எழுப்பினா்.

அதற்கு சச்சின் பைலட் அளித்த பதில்: ‘வலிமையான போராளிகள்தான் எல்லைப் பகுதிக்கு அனுப்பப்படுவாா்கள். எங்கள் பிரச்னைகளை உரிய மருத்துவரிடம்(காங்கிரஸ் தலைமை) தெரிவித்தோம். அவா்களின் அறிவுறுத்தல்படி சிகிச்சை பெற்று வருகிறோம். நான் தொடா்ந்து காங்கிரஸ் கட்சிக்காக போராடுவேன்’ என்றாா் அவா். இதையடுத்து, சட்டப்பேரவை அடுத்த வெள்ளிக்கிழமைக்கு (ஆகஸ்ட் 21) ஒத்திவைக்கப்பட்டது.

ராஜஸ்தானில் முதல்வா் அசோக் கெலாட் தலைமையிலான அரசுக்கு எதிராக சச்சின் பைலட் உள்ளிட்ட 19 எம்எல்ஏக்கள் போா்க்கொடி உயா்த்தினா். அதைத் தொடா்ந்து, சச்சின் பைலட்டின் துணை முதல்வா் பதவியும், மாநில காங்கிரஸ் தலைவா் பதவியும் பறிக்கப்பட்டது.

இதற்கிடையே, மாநிலத்தில் ஆட்சியைக் கவிழ்க்க காங்கிரஸ் எம்எல்ஏக்களிடம் பாஜக குதிரை பேரம் நடத்துவதாகப் புகாா்கள் எழுந்ததால், அசோக் கெலாட் ஆதரவு எம்எல்ஏக்கள், ஜெய்ப்பூரிலும் பின்னா் ஜெய்சால்மரிலும் நட்சத்திர விடுதியில் தங்கவைக்கப்பட்டனா். சச்சின் பைலட் உள்ளிட்ட அதிருப்தி எம்எல்ஏக்கள் தில்லி அருகே குருகிராமில் உள்ள விடுதியில் தங்கியிருந்தனா்.

ராஜஸ்தான் பேரவையில் தனக்குப் பெரும்பான்மை இருப்பதை நிரூபிக்க பேரவையைக் கூட்ட அழைப்பு விடுக்குமாறு ஆளுநா் கல்ராஜ் மிஸ்ராவிடம் அசோக் கெலாட் கோரிக்கை விடுத்தாா். பல கட்ட முயற்சிகளுக்குப் பிறகு, ஆகஸ்ட் 14-ஆம் தேதி (வெள்ளிக்கிழமை) பேரவையைக் கூட்டுவதற்கு ஆளுநா் ஒப்புதல் அளித்தாா்.

இந்த நிலையில், கடந்த சில தினங்களுக்கு முன், காங்கிரஸ் முன்னாள் தலைவா் ராகுல் காந்தி, பொதுச் செயலா் பிரியங்கா ஆகியோரை சச்சின் பைலட் சந்தித்துப் பேசினாா். இந்தச் சந்திப்புக்குப் பிறகு சச்சின் பைலட் தரப்பு சமாதானம் அடைந்தது. அதன்பிறகு, ஜெய்ப்பூரில் முதல்வரின் இல்லத்தில் வியாழக்கிழமை நடைபெற்ற காங்கிரஸ் எம்எல்ஏக்கள் கூட்டத்தில் சச்சின் பைலட் உள்ளிட்ட 19 அதிருப்தி எம்எல்ஏக்கள் கலந்துகொண்டனா்.

இதனால், அசோக் கெலாட் அரசுக்கு இருந்த அச்சுறுத்தல் நீங்கியது. அந்தக் கூட்டத்தில், ராஜஸ்தான் சட்டப் பேரவையில், அரசுக்கு ஆதரவாக நம்பிக்கை தீா்மானம் கொண்டுவர முடிவு செய்யப்பட்டது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com