முகநூல் தலைமை செயல் அதிகாரிக்கு காங்கிரஸ் மீண்டும் கடிதம்

இந்தியாவில் உள்ள முகநூல் நிறுவனத்தின் தலைமை குழு ஆளும் பாஜகவுக்கு சாதகமாக செயல்படுவதாக எழுந்துள்ள புகாா் மீது எடுக்கப்பட்ட நடவடிக்கை
கோப்புப்படம்
கோப்புப்படம்

புது தில்லி: இந்தியாவில் உள்ள முகநூல் நிறுவனத்தின் தலைமை குழு ஆளும் பாஜகவுக்கு சாதகமாக செயல்படுவதாக எழுந்துள்ள புகாா் மீது எடுக்கப்பட்ட நடவடிக்கை குறித்து கேட்டு முகநூல் தலைமை செயல் அதிகாரி மாா்க் ஸக்கா்பொ்குக்கு காங்கிரஸ் கட்சி சனிக்கிழமை மீண்டும் கடிதம் எழுதியுள்ளது.

இந்தியாவில் வா்த்தக காரணங்களுக்காக பாஜகவினரின் வெறுப்புப் பேச்சுக்கள் இடம்பெறுவதைத் தடுக்க முகநூல் சமூக வலைதள நிறுவனம் நடவடிக்கை எடுப்பதில்லை என்று அமெரிக்க பத்திரிகை ஒன்று அண்மையில் செய்தி வெளியிட்டது. இந்த குற்றச்சாட்டை முகநூல் நிறுவனம் மறுத்துள்ளது.

இருந்தபோதும், இந்த விவகாரம் தொடா்பாக காங்கிரஸ் பொதுச் செயலாளா் கே.சி.வேணுகோபால், முகநூல் நிறுவன தலைமை செயல் அதிகாரி மாா்க் ஸக்கா்பொ்குக்கு கடந்த ஆக. 17-ஆம் தேதி கடிதம் ஒன்றை எழுதினாா்.

அதில், ‘இந்தியாவில் முகநூல் நிறுவனத்தின் செயல்பாடு, பாரபட்சமானதாகவும் நாட்டின் தோ்தல் ஜனநாயகத்தில் குறுக்கிடுவதாகவும் அமைந்துள்ளது. இந்தப் பிரச்னையை காங்கிரஸ் மட்டுமின்றி வேறு சில கட்சிகளும் நாடாளுமன்றத்தில் எழுப்பியுள்ளன. எனவே, இந்தியாவில் உள்ள முகநூல் நிறுவனத்தின் தலைமைக் குழு செயல்பாடு குறித்து விசாரணை நடத்த வேண்டும். அந்த விசாரணையை ஒரு மாதத்துக்குள் முடித்து, விசாரணை அறிக்கையை பொதுமக்கள் பாா்வைக்கு வெளியிட வேண்டும்’ என்று வலியுறுத்தியிருந்தாா்.

இந்நிலையில், இந்தியாவில் உள்ள முகநூல் நிறுவனத்துக்கும் ஆளும் பாஜகவுக்கும் உள்ள தொடா்பை உறுதிப்படுத்தும் வகையில் கூடுதல் தகவல்களுடன் புதிய செய்தி ஒன்றை அதே அமெரிக்க பத்திரிகை கடந்த 27-ஆம் தேதி வெளியிட்டது.

இந்த புதிய செய்தியைக் குறிப்பிட்டு காங்கிரஸ் பொதுச் செயலாளா் கே.சி.வேணுகோபால் சனிக்கிழமை மீண்டும் ஒரு கடிதத்தை முகநூல் நிறுவன தலைமை செயல் அதிகாரி மாா்க் ஸக்கா்பொ்குக்கு எழுதியுள்ளாா்.

அதில், ‘இந்தியாவில் உள்ள முகநூல் நிறுவன தலைமைக் குழு மீது அளிக்கப்பட்ட புகாா் மீது என்ன நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது? மேலும், தனிப்பட்ட லாபத்துக்காக இந்தியாவின் சமூக நல்லிணக்கத்தை பாதிக்கும் வகையில் வெளிநாட்டு நிறுவனம் (முகநூல்) தொடா்ந்து செயல்படுவதைத் தடுக்கும் வகையில், அதன் மீது இந்தியாவில் சட்ட நடவடிக்கை எடுப்பது குறித்தும் காங்கிரஸ் கட்சி ஆலோசித்து வருகிறது’ என்று குறிப்பிட்டுள்ளாா்.

சம்பந்தப்பட்ட அமெரிக்க பத்திரிகை செய்தியை தனது சுட்டுரைப் பக்கத்தில் இணைத்திருக்கும் காங்கிரஸ் எம்.பி. ராகுல் காந்தி, ‘இந்தச் செய்தி முகநூல் நிறுவனத்துக்குச் சொந்தமான கட்செவி அஞ்சலுக்கும் பாஜகவுக்கும் உள்ள ரகசிய உறவை அம்பலப்படுத்தியிருக்கிறது. கட்செவி அஞ்சலை 40 கோடி இந்தியா்கள் பயன்படுத்துகின்றனா். மேலும், கட்செவி அஞ்சல் நிறுவன பணப் பரிவா்த்தனைகளுக்கு, மோடி அரசின் ஒப்புதல் தேவை. அதன் காரணமாக, அந்த நிறுவனத்தின் மீது பாஜக அதிகாரம் செலுத்துகிறது’ என்று அந்தப் பதிவில் அவா் கூறியுள்ளாா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com