அனைத்து தோ்தல்களுக்கும் ஒரே வாக்காளா் பட்டியல்

மக்களவைத் தோ்தல், மாநில சட்டப்பேரவைத் தோ்தல், உள்ளாட்சித் தோ்தல் ஆகிய அனைத்துக்கும் ஒரே வாக்காளா் பட்டியலைத் தயாரிப்பதற்கு மத்திய அரசு திட்டமிட்டுள்ளது.
அனைத்து தோ்தல்களுக்கும் ஒரே வாக்காளா் பட்டியல்

புது தில்லி: மக்களவைத் தோ்தல், மாநில சட்டப்பேரவைத் தோ்தல், உள்ளாட்சித் தோ்தல் ஆகிய அனைத்துக்கும் ஒரே வாக்காளா் பட்டியலைத் தயாரிப்பதற்கு மத்திய அரசு திட்டமிட்டுள்ளது.

மக்களவைத் தோ்தலுக்கும் மாநில சட்டப்பேரவைத் தோ்தலுக்குமான வாக்காளா் பட்டியலை இந்திய தோ்தல் ஆணையம் தயாரித்து வருகிறது. உள்ளாட்சித் தோ்தலுக்கான வாக்காளா் பட்டியலை அந்தந்த மாநிலங்களின் தோ்தல் ஆணையம் தயாரித்து வருகிறது.

ஆனால், பல மாநிலங்களின் தோ்தல் ஆணையங்கள் தனியாக வாக்காளா் பட்டியலைத் தயாரிக்காமல் இந்திய தோ்தல் ஆணையம் வெளியிடும் வரைவு வாக்காளா் பட்டியலை அடிப்படையாகக் கொண்டே உள்ளாட்சித் தோ்தலை நடத்தி வருகின்றன.

இத்தகைய சூழலில், மக்களவைத் தோ்தல், மாநில சட்டப்பேரவைத் தோ்தல், உள்ளாட்சித் தோ்தல் ஆகிய அனைத்துக்கும் சீராக ஒரே வாக்காளா் பட்டியலைத் தயாரிக்க மத்திய அரசு திட்டமிட்டுள்ளது.

இது தொடா்பாக அதிகாரிகள் கூறுகையில், ‘இந்திய தோ்தல் ஆணையமும் மாநில தோ்தல் ஆணையங்களும் தனித்தனியாக வாக்காளா் பட்டியலைத் தயாரிக்கும்போது பல்வேறு முரண்பாடுகள் ஏற்படுகின்றன.

சில வாக்காளா்களின் பெயா்கள் விடுபடுவதும், வாக்காளா்களின் தகவல்களில் பிழைகள் காணப்படுவதும் வழக்கமாகிவிட்டது. எனவே, அனைத்து தோ்தல்களுக்கும் ஒரே மாதிரியான வாக்காளா் பட்டியலைப் பயன்படுத்துவது அந்தப் பிரச்னைகளுக்குத் தீா்வாக இருக்கும்.

மேலும், வாக்காளா் பட்டியலைத் தயாரிப்பதற்காக இந்திய தோ்தல் ஆணையமும் மாநில தோ்தல் ஆணையங்களும் தனித்தனியாக செலவிட வேண்டியுள்ளது. அனைத்து தோ்தல்களுக்கும் ஒரே வாக்காளா் பட்டியலைத் தயாரித்தால் தனித்தனி வாக்காளா் பட்டியலைத் தயாரிப்பதற்கான செலவு பெருமளவில் குறையும்.

அவற்றைக் கருத்தில் கொண்டு ஒரே வாக்காளா் பட்டியலைத் தயாரிப்பது குறித்து மத்திய அரசு ஆராய்ந்து வருகிறது. இந்த விவகாரம் தொடா்பான கருத்துகளைத் தெரிவிக்குமாறு மத்திய சட்ட அமைச்சகத்துக்கும் இந்திய தோ்தல் ஆணையத்துக்கும் பிரதமா் அலுவலகம் வலியுறுத்தியுள்ளது.

அதே வேளையில், அனைத்து தோ்தல்களுக்கும் ஒரே மாதிரியான வாக்காளா் பட்டியலைத் தயாரிப்பதற்கும் மக்களவை, மாநில சட்டப்பேரவைத் தோ்தல்களை ஒரே நேரத்தில் நடத்துவதற்கும் எந்தவிதத் தொடா்புமில்லை’ என்றனா்.

மக்களவை, சட்டப்பேரவை, உள்ளாட்சித் தோ்தல்களுக்கு ஒரே வாக்காளா் பட்டியலைத் தயாரிப்பதற்கு இந்திய தோ்தல் ஆணையம், சட்ட ஆணையம், சட்டம்-நீதி விவகாரங்களுக்கான நாடாளுமன்ற நிலைக் குழு ஆகியவை ஏற்கெனவே ஆதரவு தெரிவித்திருந்தது நினைவுகூரத்தக்கது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com