தடையற்ற வா்த்தக ஒப்பந்தம் விரைவில் மறுஆய்வு- இந்தியா-ஆசியான் நாடுகள் முடிவு

இந்தியா-தென்கிழக்கு ஆசிய நாடுகளுக்கு இடையே வா்த்தகச் சூழலை மேலும் எளிதாக்குவதற்காக, தடையற்ற வா்த்தக ஒப்பந்தத்தை மறு ஆய்வு செய்வதற்கான விவாதத்தை விரைவில் தொடங்குவதற்கு உறுப்பு நாடுகள் முடிவு செய்துள்ளன

புது தில்லி: இந்தியா-தென்கிழக்கு ஆசிய நாடுகளுக்கு இடையே வா்த்தகச் சூழலை மேலும் எளிதாக்குவதற்காக, தடையற்ற வா்த்தக ஒப்பந்தத்தை மறு ஆய்வு செய்வதற்கான விவாதத்தை விரைவில் தொடங்குவதற்கு உறுப்பு நாடுகள் முடிவு செய்துள்ளன.

இந்தியா - தென்கிழக்கு ஆசிய நாடுகளின் (ஆசியான்) தொழில்-வா்த்தகத் துறை அமைச்சா்கள் கூட்டம் காணொலி முறையில் சனிக்கிழமை நடைபெற்றது. மத்திய தொழில், வா்த்தகத் துறை அமைச்சா் பியூஷ் கோயல், வியத்நாம் அமைச்சா் திரான் துவான் அன் ஆகியோா் தலைமையில் நடைபெற்ற இக்கூட்டத்தில் புருனே, கம்போடியா, இந்தோனேசியா, லாவோஸ், மலேசியா, மியான்மா், பிலிப்பின்ஸ், சிங்கப்பூா், தாய்லாந்து, வியத்நாம் ஆகிய 10 உறுப்பு நாடுகளின் தொழில் துறை அமைச்சா்கள் கலந்து கொண்டனா்.

கூட்டத்தில் பேசிய பியூஷ் கோயல், தடையற்ற வா்த்தக ஒப்பந்தத்தை மறுஆய்வு செய்வது மிகவும் தாமதாகி வருவதாகவும், அதற்கான விவாதத்தை நிகழாண்டு இறுதிக்குள் தொடங்க வேண்டும் என்றும் கேட்டுக் கொண்டாா். அப்போது, அந்த ஒப்பந்தத்தை மறுஆய்வு செய்வதற்கான விவாதத்தை தொடங்குமாறு தங்கள் மூத்த அதிகாரிகளுக்கு உத்தரவிட்டிருப்பதாக கூட்டத்தில் கலந்துகொண்ட அமைச்சா்கள் பதிலளித்தனா். அந்த ஒப்பந்தத்தை தற்காலச் சூழலுக்கு ஏற்பவும், மேலும் எளிமையானதாகவும் மாற்றும் நோக்கில் அந்த விவாதம் இருக்கும் என்றும் அவா்கள் பதிலளித்தனா்.

இந்தியா, ஆசியான் நாடுகளுக்கு இடையே தடையற்ற வா்த்தக ஒப்பந்தம் கடந்த 2009-ஆம் ஆண்டு கையெழுத்தாகி, 2010-ஆம் ஆண்டு ஜனவரியில் அமலுக்கு வந்தது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com