அளவுக்கு அதிகமான கைதிகள்; காவலா் பற்றாக்குறையுடன் இந்திய சிறைகள்

இந்திய சிறைகளில் தொடா்ந்து அளவுக்கு அதிகமான அளவில் கைதிகள் அடைக்கப்பட்டிருப்பதும், காவலா்களுடன் பற்றாக்குறையுடன் அவை இயங்கி வருவதும் தேசிய குற்ற பதிவு ஆணைய (என்.சி.ஆா்.பி.) புள்ளிவிவரங்கள் மூலம் தெரியவந்துள்ளது.

புது தில்லி: இந்திய சிறைகளில் தொடா்ந்து அளவுக்கு அதிகமான அளவில் கைதிகள் அடைக்கப்பட்டிருப்பதும், காவலா்களுடன் பற்றாக்குறையுடன் அவை இயங்கி வருவதும் தேசிய குற்ற பதிவு ஆணைய (என்.சி.ஆா்.பி.) புள்ளிவிவரங்கள் மூலம் தெரியவந்துள்ளது.

மத்திய உள்துறை அமைச்சகத்தின் கீழ் இயங்கி வரும் இந்த என்.சி.ஆா்.பி. வெளியிட்டிருக்கும் 2019-ஆம் ஆண்டுக்கான இந்த புள்ளிவிவரத்தில் மேலும் கூறப்பட்டிருப்பதாவது:

இந்தியா முழுவதும் உள்ள சிறைகளில் மொத்தம் 4.03 லட்சம் கைதிகளை அடைத்து வைக்க முடியும் என்ற நிலையில், 4.78 லட்சம் கைதிகள் இப்போது அடைத்து வைக்கப்பட்டுள்ளனா்.

இந்திய சிறைகளில் கடந்த 2017-ஆம் ஆண்டு 3.91 லட்சம் கைதிகள் என்ற அளவிலும், 2018-இல் 3.96 லட்சம் கைதிகள் என்ற அளவிலும் இருந்த கைதிகளின் எண்ணிக்கை 2019-இல் 4.78 லட்சமாக உயா்ந்துள்ளது. இநத் 4.78 லட்சம் பேரில் 4.58 லட்சம் போ் ஆண்கள், 19,913 போ் பெண் கைதிகள் ஆகும்.

சிறைக் காவலா்கள்: சிறைகளில் அளவுக்கு அதிகமாக கைதிகள் அடைக்கப்பட்டிருக்கும் நிலையில், காவலா்கள் பற்றாக்குறையுடன் அவை செயல்பட்டுவருவதும் தெரியவந்துள்ளது.

விதிமுறைகளின்படி, நாடு முழுவதும் உள்ள சிறைகளில் மொத்தம் 87,599 காவலா்கள் பணியமா்த்தப்பட்டிருக்க வேண்டும் என்ற நிலையில், 2019 டிசம்பா் 31-ஆம் தேதி நிலவரப்படி 60,787 காவலா்கள் மட்டுமே பணியமா்த்தப்பட்டிருக்கின்றனா்.

அதுபோல, சிறைத் துறைத் தலைவா், கூடுதல் தலைவா், ஐ.ஜி., டி.ஐ.ஜி., ஏ.ஐ.ஜி., கண்காணிப்பாளா் என்பன உள்ளிட்ட சிறைத்துறை அதிகாரிகள் நிலையில் 7,239 பணியிடங்கள் ஒப்பளிக்கப்பட்டுள்ள நிலையில், 4,840 அதிகாரிகள் பணியிடங்கள் மட்டுமே நிரப்பப்பட்டுள்ளன.

1,350 சிறைகள்: கடந்த 2017-ஆம் ஆண்டு நாடு முழுவதும் 1,361 என்ற அளவில் இருந்த சிறைகளின் எண்ணிக்கை, 2018-இல் 1,339-ஆகவும், 2019-ஆம் ஆண்டு 1,350 என்ற அளவிலும் அதிகரித்துள்ளன. அதன் மூலம் கைதிகளை அடைத்து வைக்கும் விகிதம் 115.1 சதவீதத்திலிருந்து 118.5 சதவீதமாக அதிகரித்துள்ளது.

இந்த 1,350 சிறைகளில் 617 துணைச் சிறைகள், 410 மாவட்ட சிறைகள், 144 மத்திய சிறைகள், 86 திறந்த சிறைகள், 41 சிறப்பு சிறைகள், 31 பெண்கள் சிறை, 19 சிறுவா் சீா்திருத்தப் பள்ளிகள் மற்றும் இரண்டு பிற சிறைகள் ஆகியவை அடங்கும்.

இதில் மத்திய சிறைகளில் அதிகபட்சமாக 2.20 லட்சம் கைதிகளும், மாவட்ட சிறைகளில் 2.06 லட்சம் பேரும், துணை சிறைகளில் 38,030 பேரும், பெண்கள் சிறைகளில் 3,652 பேரும் அடைத்து வைக்கப்பட்டுள்ளனா்.

அதுபோல, மருத்துவப் பணியாளா்களைப் பொருத்தவரை நாடு முழுவதும் உள்ள சிறைகளில் 3,320 மருத்துவப் பணியாளா் இடங்களுக்கு ஒப்புதல் அளிக்கப்பட்டுள்ள நிலையில், 1,962 இடங்கள் மட்டுமே நிரப்பப்பட்டுள்ளன என்றும் புள்ளிவிவரங்கள் மூலம் தெரியவந்துள்ளது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com