வலிமையை உணர்ந்துகொண்ட ஆண்டாக 2020 நினைவில் நிற்கும்: மோடி

மக்களின் மனவலிமையை உணரச் செய்த ஆண்டாக 2020 நினைவில் நிற்கும் என்று பிரதமர் நரேந்திர மோடி தெரிவித்துள்ளார். 
பிரதமர் நரேந்திர மோடி
பிரதமர் நரேந்திர மோடி


புது தில்லி: மக்களின் மனவலிமையை உணரச் செய்த ஆண்டாக 2020 நினைவில் நிற்கும் என்று பிரதமர் நரேந்திர மோடி தெரிவித்துள்ளார். 

தனியார் பத்திரிகை நிறுவனம் வெளியிடும் ஆண்டு மலருக்காக "தற்சார்பு இந்தியா: மாற்றம் காணும் இந்தியா' என்ற தலைப்பில் பிரதமர் மோடி சிறப்புக் கட்டுரை எழுதியுள்ளார். அதில் அவர் கூறியுள்ளதாவது: 

கரோனா நோய்த்தொற்று பரவல் காரணமாக 2020- ஆம் ஆண்டை பிரச்னைகள் நிறைந்த ஆண்டு என சிலர் கருதலாம். ஆனால், மக்கள் தங்கள் மனவலிமையை உணர்ந்துகொண்ட ஆண்டாக 2020 நினைவில் நிற்கும் என உறுதியாக நம்புகிறேன். துன்பங்கள் மனவலிமையை அதிகரித்துக் கொள்ள உதவும். 

கரோனா நோய்த்தொற்றை எதிர்கொள்வதில் நாட்டு மக்கள் அனைவரும் பொறுப்புடன் நடந்து கொண்டனர். அந்நோய்த்தொற்று பரவலானது இந்திய மக்களின் மனவலிமையையும் நாட்டின் ஒருமைப்பாட்டையும் உலக நாடுகளுக்கு எடுத்துரைத்துள்ளது. 

இக்கட்டான சூழலில் உறுதியான நடவடிக்கைகளை மேற்கொண்டது மட்டுமில்லாமல், மற்ற நாடுகளுக்குத் தேவையான உதவிகளையும் இந்தியா செய்தது. உலக நாடுகளுக்கான மருந்தகமாக விளங்கிய இந்தியா, அனைத்து நாடுகளுக்கும் தேவையான உயிர்காக்கும் மருந்துகளை அனுப்பி வைத்தது. அதே வேளையில், அந்த மருந்துப் பொருள்களுக்கு உள்நாட்டில் தட்டுப்பாடு ஏற்படாததும் உறுதி செய்யப்பட்டது. 

கரோனா நோய்த்தொற்று பரவல் காலத்தில் முன்களப் பணியாளர்கள் திறம்பட செயலாற்றினார். பல்வேறு தரப்பினரும் போர்க்கால அடிப்படையில் செயல்பட்டதால், தற்காப்பு உபகரணங்கள் தயாரிப்பில் இந்தியா தன்னிறைவு கண்டது. 

போட்டி நிறைந்த, திறன்மிக்க நாட்டை உருவாக்குவதற்கு தற்சார்பு இந்தியா திட்டம் வழிவகுக்கும். அத்திட்டம் சர்வதேச அளவில் இந்தியாவின் ஏற்றுமதியை அதிகரிப்பதோடு முதலீடுகளையும் அதிகமாக ஈர்க்க உதவும். அதற்கு நாட்டில் காணப்படும் நிலையான கொள்கைகள், குறைவான வரிகள், திறமையான மனித வளம் ஆகியவை உறுதுணையாக இருக்கும்.

கரோனா பரவலானது தொழில்நுட்ப வசதிகளின் அத்தியாவசியத்தை உணர்த்தியுள்ளது. பன்னாட்டுத் தலைவர்களின் சந்திப்புகள், நிறுவனங்களின் ஆலோசனைக் கூட்டங்கள் உள்ளிட்ட அனைத்தும் இணைய வழியிலேயே நடைபெறும் சூழல் உருவாகியுள்ளது. வரும் காலங்களில் தொழில்நுட்பங்கள் மேலும் வளர்ச்சி காணும் என்று அந்தக் கட்டுரையில் குறிப்பிட்டுள்ளார் பிரதமர் மோடி. 
 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com