தமிழக ஜிஎஸ்டி வசூல் ரூ.7,084 கோடி

தமிழகத்தில் சரக்கு மற்றும் சேவை வரி (ஜிஎஸ்டி) நவம்பரில் ரூ. 7,084 கோடி வசூலாகியுள்ளது.
கோப்புப்படம்
கோப்புப்படம்

தமிழகத்தில் சரக்கு மற்றும் சேவை வரி (ஜிஎஸ்டி) நவம்பரில் ரூ. 7,084 கோடி வசூலாகியுள்ளது.
 2020, நவம்பர் மாத ஜிஎஸ்டிவசூல் விவரங்களை மத்திய நிதியமைச்சகம் செவ்வாய்க்கிழமை வெளியிட்டது. நாடு முழுவதும் மொத்தம் ரூ. 1,04,963 கோடி ஜிஎஸ்டி வசூலாகியுள்ளது. இது கடந்த அக்டோபர் மாதத்தைவிட (ரூ.1,05,155 கோடி) சற்று குறைவாகும். இருப்பினும், கடந்த 2019, நவம்பர் மாதத்துடன் ஒப்பிடுகையில் வரி வருவாய் 1.4% உயர்ந்துள்ளது.
 கரோனா தொற்றால் பொது முடக்கத்தால் அரசின் முக்கிய வருவாயான ஜிஎஸ்டி வரியில் ரூ 1 லட்சம் கோடிக்கு கீழே வருவாய் குறைந்தது. அதிலும் கடந்த ஏப்ரலில் ரூ. 32,172 கோடி ஆகக் குறைந்தது. பின்னர் படிப்படியாக முன்னேற்றம் ஏற்பட்டு, கடந்த செப்டம்பர், அக்டோபர் மாதங்களில் ரூ.1 லட்சம் கோடியை தொட்டது.
 நடப்பாண்டு (2020) நவம்பர் மாதத்தில் நாடு முழுவதும் மொத்த ஜிஎஸ்டி வரியாக ரூ. 1,04,963 கோடி வசூலிக்கப்பட்டுள்ளது. இதில் மத்திய ஜிஎஸ்டியாக ரூ. 19,189 கோடியும், மாநில ஜிஎஸ்டியாக ரூ. 25,540 கோடியும் வசூலாகியுள்ளது. இது தவிர, ஒருங்கிணைந்த சரக்கு, சேவை வரியில் ரூ. 51,992 கோடியும் (இறக்குமதி மூலம் ரூ. 22,078 கோடி உள்பட), செஸ் வரியாக ரூ.8,242 கோடியும் வருவாய் கிடைத்துள்ளது. ஒட்டு மொத்தமாக நடப்பு நவம்பர் மாதத்தில் மத்திய அரசுக்கு ரூ. 41,482 கோடியும், மாநில அரசுகளுக்கு ரூ.41,826 கோடியும் ஜிஎஸ்டி வருவாய் கிடைத்துள்ளது.
 10% அதிகரிப்பு: மாநில அளவில் ஜிஎஸ்டி வரி வசூலில் கரோனா நோய்த்தொற்று இல்லாத 2019, நவம்பரைவிட நடப்பாண்டு நவம்பர் மாதம், பெரிய மாநிலங்கள் வரிசையில் தமிழகம் 10% உயர்வைக் கண்டுள்ளது. தமிழகத்தில் கடந்த ஆண்டு நவம்பரில் ரூ.6,449 கோடி வசூலாகியது. கடந்த நவம்பரில் 7,084 கோடி வசூலாகியுள்ளது.
 இதே போல, ஆந்திரம் (12%), குஜராத் (11%), ஜார்க்கண்ட் (11%) ஆகிய மாநிலங்கள் நல்ல வளர்ச்சியைப் பெற்றுள்ளன. குறிப்பாக வட கிழக்கு மாநிலங்கள் ஒட்டு மொத்தமாக அதிக வளர்ச்சியைப் பெற்றுள்ளன. அதே சமயம், மகாராஷ்டிரம், கர்நாடகம், தில்லி, தெலங்கானா, கேரள மாநிலங்கள் ஜிஎஸ்டி வரி வசூல் வளர்ச்சியில் வீழ்ச்சியைக் கண்டுள்ளன.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com