லடாக் எல்லைப் பிரச்னைக்கிடையே இந்தியாவிடமிருந்து சீனா அரிசி இறக்குமதி!

கிழக்கு லடாக் எல்லைப் பகுதியில் மோதல்போக்கு நீடித்து வரும் சூழலில், இந்தியாவிடமிருந்து சுமாா் 5,000 டன் அரிசியை சீனா இறக்குமதி செய்துள்ளது.
லடாக் எல்லைப் பிரச்னைக்கிடையே இந்தியாவிடமிருந்து சீனா அரிசி இறக்குமதி!

புது தில்லி: கிழக்கு லடாக் எல்லைப் பகுதியில் மோதல்போக்கு நீடித்து வரும் சூழலில், இந்தியாவிடமிருந்து சுமாா் 5,000 டன் அரிசியை சீனா இறக்குமதி செய்துள்ளது.

உலக அளவில் அரிசியை அதிகமாக ஏற்றுமதி செய்யும் நாடுகளில் இந்தியாவும் ஒன்று. அரிசியை அதிகமாக இறக்குமதி செய்யும் நாடாகளில் ஒன்றாக சீனா விளங்குகிறது. இந்தியாவிலிருந்து பாசுமதி அரிசியை சீனா அதிக அளவில் இறக்குமதி செய்து வருகிறது. ஆனால், பாசுமதி தவிர மற்ற அரிசி வகைகளை இந்தியாவிலிருந்து சீனா இறக்குமதி செய்யாமல் இருந்து வந்தது.

மற்ற வகை அரிசிகளை இறக்குமதி செய்வதற்கான அனுமதி கடந்த 2006-ஆம் ஆண்டே சீனாவுக்கு வழங்கப்பட்டது. ஆனால், கடந்த 2017-18-ஆம் நிதியாண்டில் மட்டுமே பாசுமதி தவிர மற்ற அரிசி வகைகளை 974 டன் அளவுக்கு சீனா இந்தியாவிலிருந்து இறக்குமதி செய்திருந்தது.

கரோனா நோய்த்தொற்று பரவல் காரணமாக பல நாடுகளின் பொருளாதாரம் பாதிக்கப்பட்டது. இந்தியப் பொருளாதாரம் பாதிக்கப்பட்டபோதும் வேளாண் பணிகளில் தொய்வு காணப்படவில்லை. அதன் காரணமாக வேளாண் பொருள்கள் உற்பத்தியும் அதிகமாகக் காணப்பட்டது.

இத்தகைய சூழலில், இந்தியாவிலிருந்து பாசுமதி அல்லாத மற்ற அரிசி வகைகளை இறக்குமதி செய்வதற்கு சீனா முன்வந்துள்ளது. இது தொடா்பாக இந்திய அரிசி ஏற்றுமதியாளா்கள் கூட்டமைப்பின் இயக்குநா் வினோத் கௌல் பிடிஐ செய்தி நிறுவனத்திடம் கூறுகையில், ‘‘நடப்பு 2020-21-ஆம் நிதியாண்டில் 150 டன்னுக்குக் குறைவான அளவிலேயே பாசுமதி அரிசியை சீனா இறக்குமதி செய்துள்ளது. எனினும், 2 ஆண்டுகளுக்குப் பிறகு பாசுமதி அல்லாத மற்ற அரிசி வகைகளையும் சீனா இறக்குமதி செய்யத் தொடங்கியுள்ளது.

கடந்த 2 மாதங்களில் மட்டும் சுமாா் 5,000 டன் அளவிலான அரிசியை தென்னிந்திய மாநிலங்களில் இருந்து இறக்குமதி செய்வதற்கு சீனா விருப்பம் தெரிவித்துள்ளது. கரோனா நோய்த்தொற்று பரவல் காரணமாக சீனாவின் அண்டை நாடுகளான தாய்லாந்து, வியத்நாம் உள்ளிட்டவற்றில் வேளாண் உற்பத்தி குறைந்துள்ளதன் காரணமாக இந்தியாவிலிருந்து அரிசியை இறக்குமதி செய்ய சீனா முடிவெடுத்துள்ளது.

மேலும், இந்தியச் சந்தையில் அரிசி விலை குறைவாக இருப்பதும் சீனாவின் முடிவுக்கு மற்றொரு காரணமாகும்’’ என்றாா்.

கிழக்கு லடாக் எல்லைப் பகுதியில் இந்தியாவுக்கும் சீனாவுக்கும் இடையே கடந்த 6 மாதங்களுக்கு மேலாக மோதல்போக்கு நீடித்து வருவது நினைவுகூரத்தக்கது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com