உத்தரப்பிரதேச முதல்வர் யோகி ஆதித்யநாத்  (கோப்புப்படம்)
உத்தரப்பிரதேச முதல்வர் யோகி ஆதித்யநாத் (கோப்புப்படம்)

நொய்டாவில் திரைப்பட நகரம்: மும்பை திரையுலகம் அச்சமடைய வேண்டாம்

எதையும் எடுத்துச் செல்வதற்காக மும்பைக்கு வரவில்லை; நொய்டாவில் திரைப்பட நகரம் அமைவதால், மும்பை திரையுலகம் அச்சப்பட வேண்டாம் என்று உத்தர பிரதேச முதலமைச்சர் யோகி ஆதித்யநாத் தெரிவித்தார்.

மும்பை,: எதையும் எடுத்துச் செல்வதற்காக மும்பைக்கு வரவில்லை; நொய்டாவில் திரைப்பட நகரம் அமைவதால், மும்பை திரையுலகம் அச்சப்பட வேண்டாம் என்று உத்தர பிரதேச முதலமைச்சர் யோகி ஆதித்யநாத் தெரிவித்தார்.
மும்பைக்கு அவர் வருவதற்கு முன், மகாராஷ்டிரத்தின் திரைப்பட நகரத்தை உத்தர பிரதேசத்துக்கு அபகரித்துச் செல்ல சதி நடப்பதாக அந்த மாநில முதல்வர் உத்தவ் தாக்கரே குற்றம்சாட்டியிருந்தார். இங்கிருந்து வலுக்கட்டாயமாக எதையும் எடுத்துச் செல்ல யாரையும் அனுமதிக்க மாட்டேன் என்றும் அவர் எச்சரித்திருந்தார். 
இந்நிலையில், புதன்கிழமை மும்பைக்கு வந்த யோகி ஆதித்யநாத், உத்தவ் தாக்கரேவுக்குப் பதிலளிக்கும் வகையில், செய்தியாளர்களிடம் கூறியதாவது: 
நாங்கள் யாருடைய முதலீடுகளையும் அபகரிக்கவோ அல்லது தடுக்கவோ வரவில்லை. யாரும் எதையும் எடுத்துச் செல்ல முடியாது.  இது ஒரு வெளிப்படையான போட்டி. பாதுகாப்பான சூழ்நிலையையும், சிறந்த வசதிகளையும், குறிப்பாக சமூகப் பாதுகாப்பையும் கொடுக்கக்கூடிய ஒருவர், இதில் எவ்வித பாகுபாடுமின்றி பணியாற்றி முதலீடுகளைப் பெற முடியும்.  
மும்பை திரைப்பட நகரத்தை வேறு இடத்துக்கு மாற்றுவது கடினமானப் பணி என்று எம்.பி. சஞ்சய் ரெüத் கூறியது பற்றி கேட்கிறீர்கள். அவருக்கு நான் சொல்லிக் கொள்வதெல்லாம்,  நாங்கள் எதையும் எடுத்துச் செல்ல இங்கு வரவில்லை; நாங்கள் புதிதாக ஒன்றை உருவாக்குகிறோம்; நீங்கள் ஏன் கவலைப்படுகிறீர்கள்? ஒரு புதிய உலகத்தரம் வாய்ந்த உள்கட்டமைப்பை அனைவருக்கும் நாங்கள் வழங்குகிறோம். எனவே, எல்லோரும் வளர்ந்து, அவரவர் சிந்தனையை விரிவுபடுத்த வேண்டும். மேலும் சிறந்த வசதிகள் செய்துதரப்பட வேண்டும். 
 நொய்டாவில் 1,000 ஏக்கர் பரப்பளவில் வரவிருக்கும் திரைப்பட நகரத்திற்கான பரிந்துரைகளைப் பெற இயக்குநர்கள், தயாரிப்பாளர்கள்  நடிகர்கள் உள்ளிட்ட ஹிந்தி பட வல்லுநர்களைச் சந்தித்தேன்.  தொலைநோக்குப் பார்வையை மனதில் கொண்டு குறிப்பிட்ட துறைசார் கொள்கைகள் உருவாக்கப்பட்டுள்ளன. இதுபோன்ற கூட்டங்கள் அவற்றை மேம்படுத்த உதவுகின்றன என்றார் அவர்.
உத்தர பிரதேச மாநிலம், நொய்டாவில் திரைப்பட நகரை உருவாக்க அந்த அரசு பணிகளை மேற்கொண்டுள்ள நிலையில், அதற்கான நிதியை திரட்டும் பொருட்டு,  மகாராஷ்டிரத்தில் பயணம் மேற்கொண்ட ஆதித்யநாத், ஹிந்தி பட நட்சத்திரங்களான அக்ஷய் குமார், போனி கபூர், சுபாஷ் கய், மன்மோகன் ஷெட்டி, ஆனந்த் பண்டிட் உள்ளிட்ட பிரமுர்களை சந்தித்தார்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com