தனிப்பட்ட விரோதம் காரணமாக ஆம்ஆத்மி எம்எல்ஏ கார் மீது துப்பாக்கிச்சூடு: ஒருவர் கைது

தில்லி மெஹ்ரௌலி தொகுதியில் வெற்றிபெற்ற ஆம்ஆத்மி எம்எல்ஏ நரேஷ் யாதவ் கார் மீது மர்ம நபரால் செவ்வாய்க்கிழமை இரவு துப்பாக்கிச்சூடு நடத்தப்பட்டது.
தனிப்பட்ட விரோதம் காரணமாக ஆம்ஆத்மி எம்எல்ஏ கார் மீது துப்பாக்கிச்சூடு: ஒருவர் கைது

நடந்து முடிந்த பேரவைத் தேர்தலில் மெஹ்ரௌலி தொகுதியில் வெற்றிபெற்ற ஆம்ஆத்மி எம்எல்ஏ நரேஷ் யாதவ் கார் மீது மர்ம நபரால் செவ்வாய்க்கிழமை இரவு துப்பாக்கிச்சூடு நடத்தப்பட்டது. இதில் ஆம்ஆத்மி தொண்டர் உயிரிழந்தார், மற்றொருவருக்கு படுகாயம் ஏற்பட்டது.

வெற்றிபெற்றதைத் தொடர்ந்து கோயிலுக்குச் சென்று வழிபாடு நடத்திவிட்டு திரும்பியபோது மர்ம நபரால் கார் மீது 4 முறை துப்பாக்கிச்சூடு நடத்தப்பட்டுள்ளது. இதில் அஷோக் மான் எனும் தொண்டர் கொல்லப்பட்டார், ஹரேந்தர் எனும் மற்றொரு தொண்டருக்கு பலத்த காயம் ஏற்பட்டது.

இதுதொடர்பாக போலீஸார் வழக்குப்பதிவு செய்து விசாரித்தனர். அப்பகுதியிலுள்ள அனைத்து சிசிடிவி காட்சிகளும் ஆய்வு செய்யப்பட்டன.

இந்த நிலையில், துப்பாக்கிச்சூடு நடத்திய மர்ம நபரை போலீஸார் புதன்கிழமை காலை கைது செய்தனர். இதில் அரசியல் பின்னணி இல்லை எனவும், தனிப்பட்ட விரோதம் காரணமாகவே துப்பாக்கிச்சூடு நடத்தப்பட்டுள்ளது.

இதில் துப்பாக்கிச்சூட்டில் உயிரிழந்த ஆம்ஆத்மி தொண்டர் அஷோக் மான் மற்றும் துப்பாக்கிச்சூடு நடத்தியவருக்கும் இடையே தனிப்பட்ட விரோதம் இருந்துள்ளது.

கடந்த 2019ல் தனது உறவினர் மீது நடத்தப்பட்ட துப்பாக்கிச்சூடு தாக்குதலுக்கு அஷோக் மானுக்கு தொடர்பு இருப்பதாக சந்தேகமடைந்துள்ளார். கடந்த 15 நாள்களுக்கு முன் அஷோக் மானுக்கு இதுதொடர்பாக மிரட்டல் விடுத்துள்ளார் என்று போலீஸார் தெரிவித்தனர். 

முன்னதாக, தன் மீது நடத்தப்பட்ட துப்பாக்கிச்சூடு சம்பவம் தொடர்பாக ஆம்ஆத்மி எம்எல்ஏ நரேஷ் யாதவ் கூறுகையில்,

இந்த துப்பாக்கிச்சூடு சம்பவம் மிகவும் துரதிருஷ்டவசமானது. என் மீதான தாக்குதலுக்கு என்ன காரணம் என்று தெரியவில்லை. மர்ம நபர் எனது காரை நோக்கி 4 முறை துப்பாக்கியால் சுட்டார். இதில் என்னுடன் பயணித்த இரு தொண்டர்கள் மீது துப்பாக்கி குண்டு பாய்ந்தது. அதில் ஒருவர் உயிரிழந்தார், மற்றொருவர் படுகாயம் அடைந்தார். இந்த துப்பாக்கிச்சூடு என் மீது மட்டும் குறி வைத்து நடத்தப்பட்டதா என்பது தெரியவில்லை. எனது காரை நோக்கி மட்டுமே சுடப்பட்டது. எனவே இதில் யார் மீதும் தாக்குதல் நடத்தப்பட்டிருக்கலாம் என்ற சந்தேகம் உள்ளது. போலீஸார் முறையாக விசாரணை நடத்தினால், குற்றவாளி நிச்சயம் பிடிபடுவார் என்ற நம்பிக்கை உள்ளதாக தெரிவித்தார்.

நடந்து முடிந்த தில்லி பேரவைத் தேர்தலில் ஆளும் ஆம்ஆத்மி கட்சி மொத்தமுள்ள 70 இடங்களில் 62ஐக் கைப்பற்றி தனிப்பெரும்பான்மையுடன் தொடர்ந்து 3ஆவது முறையாக ஆட்சியமைக்கவுள்ளது குறிப்பிடத்தக்கது. இதில் இதர 8 இடங்களில் பாஜக வென்றிருந்தது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com