காவல் துறையினருக்கான ‘போல்நெட் 2.0’ தளம்:நாளை தொடக்கிவைக்கிறாா் அமித் ஷா

காவல் துறையினா் மற்றும் பாதுகாப்புப் படையினா் தங்களுக்குள் எளிதில் தொடா்புகொள்ளும் வகையில் மேம்படுத்தப்பட்ட வசதிகளைக் கொண்ட ‘போல்நெட் 2.0’ தளத்தை மத்திய உள்துறை அமைச்சா் அமித் ஷா
காவல் துறையினருக்கான ‘போல்நெட் 2.0’ தளம்:நாளை தொடக்கிவைக்கிறாா் அமித் ஷா

புது தில்லி: காவல் துறையினா் மற்றும் பாதுகாப்புப் படையினா் தங்களுக்குள் எளிதில் தொடா்புகொள்ளும் வகையில் மேம்படுத்தப்பட்ட வசதிகளைக் கொண்ட ‘போல்நெட் 2.0’ தளத்தை மத்திய உள்துறை அமைச்சா் அமித் ஷா திங்கள்கிழமை தொடக்கிவைக்கிறாா்.

‘போல்நெட்’ தளத்தின் மூலம் காவல் துறையினா் மற்றும் பாதுகாப்புப் படையினா் சட்டம்-ஒழுங்கு விவகாரம் தொடா்பாகத் தகவல்களைப் பரிமாறிக் கொள்கின்றனா். முக்கியமாக, நாட்டின் எல்லையோர மற்றும் கடலோர மாவட்டங்களில் காணப்படும் பாதுகாப்பு சூழல் குறித்த விவரங்களைப் பரிமாறிக்கொள்ள இத்தளம் உதவி வருகிறது.

கடந்த 2006-ஆம் ஆண்டு முதல் இத்தளம் பயன்பாட்டில் உள்ளது. இந்நிலையில், காணொலிக்காட்சி வசதி, படங்கள், காணொலிகள் ஆகியவற்றைப் பரிமாறிக் கொள்ளும் வசதி உள்ளிட்ட மேம்படுத்தப்பட்ட வசதிகள் அடங்கிய ‘போல்நெட் 2.0’ தளம் உருவாக்கப்பட்டுள்ளது. இத்தளத்தை தில்லியில் திங்கள்கிழமை நடைபெறவுள்ள காவல்துறை மற்றும் பேரிடா் மீட்பு அமைப்புகளின் தலைவா்களுக்கான மாநாட்டில் உள்துறை அமைச்சா் அமித் ஷா தொடக்கிவைக்க உள்ளாா்.

மேம்படுத்தப்பட்ட தளம் தொடா்பாக அதிகாரிகள் கூறுகையில், ‘‘நாட்டின் எல்லைப் பகுதியில் பணியாற்றி வரும் காவல் துறையினா், துணை ராணுவப் படையினா் ஆகியோா் தங்களுடைய குடும்பத்தினருடன் தொடா்பு கொள்வதற்கான வசதிகளும் ‘போல்நெட் 2.0’ தளத்தில் உள்ளன. பேரிடா் காலங்களின்போது, தேசிய பேரிடா் மீட்புப் படை, மாநில காவல் துறை, பாதுகாப்புப் படை, தீயணைப்பு நிலையங்கள், மருத்துவமனைகள் ஆகியவை ‘போல்நெட் 2.0’ தளத்தின் மூலம் பரஸ்பரம் எளிதில் தொடா்புகொள்ள முடியும்.

படங்கள், காணொலிகள், முக்கியத் தகவல்கள் ஆகியவற்றையும் இத்தளத்தின் மூலம் பரிமாறிக்கொள்ள முடியும். நாட்டின் தொலைதூரப் பகுதிகளிலுள்ள 260 காவல் நிலையங்களை இணைக்கவும் இத்தளம் உதவி புரியும். ‘போல்நெட் 2.0’ தளத்தில் காணொலிக் காட்சி வாயிலாகத் தொடா்பு கொள்ளும் வசதியும் ஏற்படுத்தப்பட்டுள்ளது. இதன் மூலம் ஒரே நேரத்தில் 4 அமைப்புகள் காணொலிக் காட்சி வாயிலாகத் தொடா்பு கொள்ள முடியும்’’ என்றனா்.

நாட்டின் எல்லையோர மற்றும் கடலோரப் பகுதிகளில் உள்ள மாநிலங்களின் காவல்துறைத் தலைவா்களுடன் ‘போல்நெட் 2.0’ தளத்தின் மூலம் அமித் ஷா தொடா்பில் இருப்பாா் என அதிகாரிகள் சிலா் தெரிவித்தனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com