மூன்றாம் தரப்பு தலையீட்டுக்கு இடமில்லை: காஷ்மீர் விவகாரத்தில் இந்தியா திட்டவட்டம்!

காஷ்மீர் விவகாரத்தில் எந்தவொரு மூன்றாம் தரப்பு தலையீட்டுக்கும் இடமில்லை என மத்திய வெளியுறவுத் துறை அமைச்சகம் திட்டவட்டமாகத் தெரிவித்துள்ளது.
கோப்புப்படம்
கோப்புப்படம்


காஷ்மீர் விவகாரத்தில் எந்தவொரு மூன்றாம் தரப்பு தலையீட்டுக்கும் இடமில்லை என மத்திய வெளியுறவுத் துறை அமைச்சகம் திட்டவட்டமாகத் தெரிவித்துள்ளது.

சுவிட்சர்லாந்தில் பாகிஸ்தான் பிரதமர் இம்ரான் கானுடனான சந்திப்புக்குப் பிறகு கடந்த செவ்வாய்கிழமை செய்தியாளர்களைச் சந்தித்த அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்ப், 

"காஷ்மீர் மற்றும் அதுசார்ந்த விவகாரங்கள் தொடர்பாக நாங்கள் விவாதித்தோம். இந்த விவகாரத்தில் உதவ அமெரிக்கா தயாராக உள்ளது. இந்தியா மற்றும் பாகிஸ்தான் இடையிலான நிகழ்வுகளை, அமெரிக்கா மிகவும் கூர்ந்து கவனித்து வருகிறது" என்றார்.

இந்நிலையில், இன்று (வியாழக்கிழமை) செய்தியாளர்களைச் சந்தித்த மத்திய வெளியுறவுத் துறை அமைச்சகத்தின் செய்தித் தொடர்பாளர் ரவீஷ் குமார், டிரம்ப்பின் கருத்துக்கு பதிலளித்தார். அவர் தெரிவிக்கையில்,

"காஷ்மீர் விவகாரத்தில் எந்தவொரு மூன்றாம் தரப்பு தலையீட்டுக்கும் இடமில்லை. இது இந்தியா - பாகிஸ்தான் இடையிலான இருதரப்பு பிரச்னை. காஷ்மீர் விஷயத்தில் நமது நிலைப்பாடு எந்தவித மாற்றமுமின்றி தெளிவாக உள்ளது" என்றார்.

முன்னதாக, காஷ்மீர் பிரச்னையில் இந்தியா - பாகிஸ்தான் இடையே மத்தியஸ்தம் செய்யத் தயாராக இருப்பதாக டிரம்ப் கடந்தாண்டு ஜூலை மாதம் தெரிவித்தது சர்ச்சையை ஏற்படுத்தியது. அப்போதும், டிரம்ப்பின் கருத்தை இந்தியா நிராகரித்தது குறிப்பிடத்தக்கது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com