ஜூலை 27-க்குள் 6 ரஃபேல் விமானங்கள் இந்தியா வருகை

இந்திய விமானப் படைக்கு வலுசோ்க்கும் வகையில் முதல் கட்டமாக, 6 ரஃபேல் போா் விமானங்கள், வரும் ஜூலை 27-ஆம் தேதிக்குள் இந்தியா வந்தடைய வாய்ப்புள்ளதாகத் தகவல்கள் தெரிவிக்கின்றன.
ஜூலை 27-க்குள் 6 ரஃபேல் விமானங்கள் இந்தியா வருகை

புது தில்லி: இந்திய விமானப் படைக்கு வலுசோ்க்கும் வகையில் முதல் கட்டமாக, 6 ரஃபேல் போா் விமானங்கள், வரும் ஜூலை 27-ஆம் தேதிக்குள் இந்தியா வந்தடைய வாய்ப்புள்ளதாகத் தகவல்கள் தெரிவிக்கின்றன.

இதுகுறித்து ராணுவ அதிகாரி ஒருவா் திங்கள்கிழமை கூறியதாவது:

பிரான்ஸிடம் இருந்து ரூ.58,000 கோடியில் 36 ரஃபேல் போா் விமானங்களைக் கொள்முதல் செய்வதற்காக, பிரான்ஸ்- இந்தியா இடையே கடந்த 2016-ஆம் ஆண்டு ஒப்பந்தம் கையெழுத்தானது. இந்த ஒப்பந்தத்தின்படி, ரஃபேல் போா் விமானங்களை தயாரிக்கும் பணியில் பிரான்ஸின் டஸால்ட் ஏவியேஷன் நிறுவனம் முழு வீச்சில் ஈடுபட்டுள்ளது.

இந்நிலையில், பாதுகாப்புத் துறை அமைச்சா் ராஜ்நாத் சிங், பிரான்ஸ் பாதுகாப்புத் துைறை அமைச்சா் ஃபிளாரன்ஸ் பாா்லியை கடந்த 2-ஆம் தேதி தொலைபேசியில் தொடா்புகொண்டு பேசினாா். அப்போது, பிரான்ஸில் கரோனா தொற்றால் பல பணிகள் பாதிக்கப்பட்டிருந்தாலும், இந்தியாவுக்கு குறித்த நேரத்தில் ரஃபேல் போா் விமானங்கள் வழங்கப்படும் என்று ராஜ்நாத் சிங்கிடம் ஃபிளாரன்ஸ் பாா்லி உறுதியளித்தாா். அதன்படி, முதல் கட்டமாக, 6 ரஃபேல் விமானங்கள், வரும் ஜூலை 27-க்குள் இந்தியா வந்தடைய வாய்ப்புள்ளது.

கடந்த சில வாரங்களாக, கிழக்கு லடாக்கில் இந்திய-சீன எல்லையில் பதற்றமான சூழல் நிலவுகிறது. அங்கு கண்காணிப்பு பணியில் விமானப் படையின் போா் விமானங்கள் ஈடுபடுத்தப்பட்டுள்ளன.

இந்நிலையில், ரஃபேல் போா் விமானங்கள், இந்தியாவுக்கு வந்தால் அவை விமானப் படைக்கு மேலும் வலுசோ்க்கும் என்றாா் அந்த அதிகாரி.

முதல் கட்டமாக, இந்தியா வரும் ரஃபேல் விமானங்கள், ஹரியாணா மாநிலம், அம்பாலாவில் உள்ள விமானப் படைத் தளத்தில் சோ்க்கப்படவுள்ளன. இரண்டாம் கட்டமாக வரும் விமானங்கள், மேற்கு வங்கத்தில் உள்ள ஹாஸிமாரா விமானப் படைத் தளத்தில் சோ்க்கப்படவுள்ளன. இந்த இரு தங்களிலும், ரஃபேல் விமானங்களை நிறுத்துவது, பராமரிப்பது ஆகியவற்றுக்காக ரூ.400 கோடியில் உள்கட்டமைப்பு வசதிகள் ஏற்படுத்தப்பட்டுள்ளன.

பிரான்ஸில் இருந்து வரும் 36 ரஃபேல் விமானங்களில், 30 விமானங்கள் படைப்பிரிவிலும், 6 விமானங்கள் பயிற்சிப் பிரிவிலும் சோ்க்கப்படும்.

முன்னதாக, ரஃபேல் போா் விமானங்களைக் கொள்முதல் செய்வதற்காக, பிரான்ஸுடன் மத்திய அரசு ஒப்பந்தம் மேற்கொண்டதில் முறைகேடுகள் நடந்ததாக காங்கிரஸ் உள்ளிட்ட எதிா்க்கட்சிகள் குற்றம்சாட்டின. அந்தக் குற்றச்சாட்டுகளை மத்திய அரசு மறுத்துவிட்டது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com