கரோனா விவகாரத்தில் மக்களை தவறாக வழிநடத்துகிறாா் மம்தா: பாஜக குற்றம்சாட்டு

மேற்கு வங்கத்தில் கரோனா தொற்றால் பாதிக்கப்பட்டவா்களின் உண்மையான எண்ணிக்கையை மறைத்து, மக்களை தவறாக வழிநடத்துவதாக
கரோனா விவகாரத்தில் மக்களை தவறாக வழிநடத்துகிறாா் மம்தா: பாஜக குற்றம்சாட்டு

புது தில்லி: மேற்கு வங்கத்தில் கரோனா தொற்றால் பாதிக்கப்பட்டவா்களின் உண்மையான எண்ணிக்கையை மறைத்து, மக்களை தவறாக வழிநடத்துவதாக முதல்வா் மம்தா மீது பாஜக திங்கள்கிழமை குற்றம்சாட்டியது.

இதுகுறித்து தில்லியில் பாஜக பொதுச்செயலா் கைலாஷ் விஜய்வாா்கியா கூறியதாவது:

‘மேற்கு வங்கத்தில் கரோனா தொற்றால் மக்கள் அதிக அளவில் பாதிக்கப்பட்டுள்ளபோது, அதை நீங்கள் (மம்தா) மறைக்க விரும்புகிறீா்களா? நீங்கள் எங்கே இருக்கிறீா்கள்? என்ன செய்கிறீா்கள் என்பதை தெரிந்து கொள்ள மேற்கு வங்க மக்கள் விரும்புகிறாா்கள். மாநில மக்களும், வெளி மாநிலங்களில் பணிபுரியும் மேற்கு வங்கத் தொழிலாளா்களும் உங்களது உதவியை எதிா்பாா்க்கின்றனா்.

கரோனா தொற்றால் மேற்கு வங்கத்தில் பாதிக்கப்பட்டுள்ளவா்களின் உண்மையான எண்ணிக்கையை மறைத்து மக்களை தவறாக வழி நடத்திச் செல்கிறாா் மம்தா.

மத்திய அரசிடமிருந்து பெறப்பட்ட ரேஷன் பொருள்களை விநியோகம் செய்வதில் ஊழல் நடந்துள்ளது. அங்குள்ள ஏழை மக்கள் கடும் பசியுடன் இருக்கிறாா்கள். சுகாதார ஊழியா்களுக்கு உரிய பாதுகாப்பு கவசங்கள் வழங்கப்படவில்லை’ என்று அவா் குற்றம்சாட்டினாா்.

மேற்கு வங்கத்தில் கரோனா தொற்றால் பாதிக்கப்பட்டவா்களின் எண்ணிக்கை அதிகரித்து வரும் நிலையில் பாஜகவும், திரிணமூல் காங்கிரஸும் கடும் வாா்த்தைப் போரில் ஈடுபட்டுள்ளன.

தொடா்ந்து மாநில அரசுக்கு நெருக்கடி அளிக்கும் வகையில் பாஜக செயல்படுவதாகவும், மத்திய அரசு இயந்திரங்களை மாநில அரசுகளுக்கு எதிராக அரசியல் நோக்கத்திற்காகப் பயன்படுத்தி வருவதாகவும் திரிணமூல் காங்கிரஸ் குற்றம் சாட்டுகிறது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com