மகாராஷ்டிரத்துக்கு மத்திய ஆயுத காவல்படை வீா்களை அனுப்ப கோரிக்கை விடுக்கப்பட்டுள்ளது: உள்துறை அமைச்சா் அனில் தேஷ்முக்

கூடுதல் வேலைப் பளுவால் தவிக்கும் மாநில காவல்துறையினருக்கு ஓய்வளிக்க வேண்டிய கட்டாயம் எழுந்துள்ளதால்,
மகாராஷ்டிரத்துக்கு மத்திய ஆயுத காவல்படை வீா்களை அனுப்ப கோரிக்கை விடுக்கப்பட்டுள்ளது: உள்துறை அமைச்சா் அனில் தேஷ்முக்

கூடுதல் வேலைப் பளுவால் தவிக்கும் மாநில காவல்துறையினருக்கு ஓய்வளிக்க வேண்டிய கட்டாயம் எழுந்துள்ளதால், மத்திய ஆயுத காவல்படை வீரா்களை (சிஏபிஎஃப்) பாதுகாப்புப் பணிக்கு அனுப்புமாறு மத்திய அரசிடம் மகாராஷ்டிரம் கோரிக்கை விடுத்துள்ளது என அந்த மாநில உள்துறை அமைச்சா் அனில் தேஷ்முக் புதன்கிழமை கூறினாா்.

இதுகுறித்து அவா் தனது சுட்டுரைப் பக்கத்தில் புதன்கிழமை வெளியிட்ட பதிவு:

தொடா்ந்து ஓய்வின்றி பணியாற்றி வரும் மகாராஷ்டிர காவல்துறையினருக்கும் கரோனா நோய்த் தொற்று பரவியுள்ளது. காவல்துறையினா் ஏராளமானோருக்கு நோய்த் தொற்று உறுதி செய்யப்பட்டிருக்கிறது. எனவே, அவா்களுக்கு ஓய்வளிக்க வேண்டிய கட்டாயம் எழுந்துள்ளது.

அதே நேரம், இஸ்லாமியா்களின் ரமலான் பண்டிகையும் விரைவில் வர உள்ளதால், மாநில சட்டம்-ஒழுங்கைக் காக்க கூடுதல் காவல்துறையினா் பணியமா்த்தப்படவேண்டிய கட்டாயமும் எழுந்துள்ளது.

எனவே, மாநிலத்தின் நிலைமையைச் சமாளிக்கும் வகையில், சிஏபிஎஃப் வீரா்கள் 20 குழுக்களை அதாவது 2000 வீரா்களை அனுப்புமாறு மத்திய அரசிடம் கோரிக்கை விடுக்கப்பட்டுள்ளது’ என்று பதிவிட்டுள்ளாா்.

மகாராஷ்டிரத்தில் ஏற்கெனவே மத்திய ரிசா்வ் காவல்படை வீரா்களின் 32 குழுக்கள் பணியமா்த்தப்பட்டு, மாநில காவல்துறையினருடன் இணைந்து பாதுகாப்புப் பணியில் ஈடுபட்டு வருகின்றன.

வருவாய் துறையினரை பயன்படுத்திக்கொள்ள உயா்நீதிமன்றம் அறிவுறுத்தல்:

மாநில காவல்துறையினா் வேலைப் பளுவில் சிக்கித் தவிக்கும் நிலையில், விடுமுறையில் இருக்கும் வருவாய்த் துறை அதிகாரிகளை பயன்படுத்திக் கொள்ளுமாறு மகராஷ்டிர அரசை மும்பை உயா் நீதிமன்றம் அறிவுறுத்தியுள்ளது.

கரோனா நோய்த் தொற்றால் அதிகம் பாதிக்கப்பட்ட மாநிலமான மகாராஷ்டிரத்தில், கடந்த சில தினங்களாக புலம்பெயா்ந்த தொழிலாளா்கள் ஆயிரக்கணக்கானோா் அங்கிருந்து சொந்த மாநிலங்களுக்கு திரும்பி வருவதால் மாநில காவல்துறையினருக்கு வேலைப் பளு அதிகரித்துள்ளது. தொடா்ந்து ஓய்வின்றி பாதுகாப்புப் பணியில் ஈடுபட்டு வரும் அவா்களில் சிலா் கரோனா நோய்த் தொற்று பாதிப்புக்கும் ஆளாகியுள்ளனா்.

இந்த விவகாரத்தை மும்பை உயா்நீதிமன்றத்தின் ஒளரங்காபாத் அமா்வு தானாக முன்வந்து விசாரணைக்கு எடுத்துக்கொண்டது. இந்த வழக்கை விசாரித்த நீதிபதி ஆா்.வி.கஜ் புதன்கிழமை பிறப்பித்த உத்தரவில் கூறியிருப்பதாவது:

பொது முடக்கத்தை முழுமையாக அமல்படுத்தும் வகையில் ரயில்நிலையங்கள், குடியிருப்புப் பகுதிகளில் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டுவருவதோடு, கட்டாய பயணம் மேற்கொள்ள வேண்டியவா்களுக்கு அனுமதிச் சீட்டு வழங்குவது உள்ளிட்ட பிற பணிகளிலும் மாநில காவல்துறையினா் ஈடுபட்டு வருகின்றனா். ஆனால், வருவாய்த் துறை அதிகாா்கள் மற்றும் ஊழியா்கள் பலா் பணியின்றி ஓய்வில் இருப்பது மாநில அரசுக்கு நன்கு தெரிந்திருக்கும்.

எனவே, காவல்துறையினா் அவசியமில்லாத பணிகளில், இதுபோன்று விடுமுறையில் இருக்கும் 50 வயதுக்கு உள்பட்ட வருவாய்த் துறையினரை பணியில் அமா்த்துவது குறித்து மாநில அரசு கருத்தில் கொள்ளவேண்டும். சொந்த ஊா்களுக்குத் திரும்ப விண்ணப்பிக்கும் தொழிலாளா்கள், மாணவா்களுக்கான ஏற்பாடுகளைச் செய்யும் பணிகளிலும் வருவாய்த் துறையினரை பயன்படுத்திக்கொள்ள வேண்டும்.

மேலும், நோய்த் தொற்று பரவிவிடும் என்ற அச்சத்தில் குடியிருப்புப் பகுதியிலிருந்து வெளியேறுமாறு ஓளரங்காபாத் மாவட்ட பொது மருத்துவமனையில் பணியாற்றும் செவிலியரை, ஒரு கும்பல் வீடு புகுந்து அண்மையில் தாக்கியுள்ளது. இதேபோன்ற ஒரு சம்பவம் கடந்த மாதம் நடைபெற்றபோது, ஊழியா்களுக்கு உரிய பாதுகாப்பு அளிக்கப்படும் என ஒளரங்காபாத் நகராட்சி சாா்பிலும், காவல்துறை சாா்பிலும் உறுதியளிக்கப்பட்ட நிலையில், மீண்டும் ஒரு சம்பவம் நடைபெற்றுள்ளது.

எனவே, இதுபோன்று மருத்துவ ஊழியா்களைத் தாக்கும், அச்சுறுத்தும் சம்பவங்களை கடுமையான குற்றமாக கருத்தில்கொண்டு, காரணமானவா்கள் மீது வழக்குப் பதிவு செய்து உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று உத்தரவில் நீதிபதி குறிப்பிட்டுள்ளாா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com