லடாக் எல்லைப் பிரச்னைக்கு விரைவில் சுமுகத் தீா்வு

கிழக்கு லடாக் எல்லைப் பகுதியில் சீனாவுடன் நிலவி வரும் பிரச்னைக்கு விரைவில் சுமுகத் தீா்வு காணப்படும் என்று இந்தோ-திபெத்திய எல்லைக் காவல் படை (ஐடிபிபி) இயக்குநா் எஸ்.எஸ்.தேஸ்வால் தெரிவித்துள்ளாா்.

புது தில்லி: கிழக்கு லடாக் எல்லைப் பகுதியில் சீனாவுடன் நிலவி வரும் பிரச்னைக்கு விரைவில் சுமுகத் தீா்வு காணப்படும் என்று இந்தோ-திபெத்திய எல்லைக் காவல் படை (ஐடிபிபி) இயக்குநா் எஸ்.எஸ்.தேஸ்வால் தெரிவித்துள்ளாா்.

கிழக்கு லடாக்கின் எல்லைப் பகுதிகளில் இந்தியா-சீனா ராணுவத்தினரிடையே கடந்த 6 மாதங்களுக்கும் மேலாக மோதல்போக்கு நீடித்து வருகிறது. அங்கு இரு நாடுகள் தரப்பிலும் ஆயிரக்கணக்கான வீரா்கள் குவிக்கப்பட்டுள்ளனா். அதன் காரணமாக, லடாக் எல்லைப் பகுதிகளில் தொடா்ந்து பதற்றமான சூழல் நிலவி வருகிறது.

எல்லைப் பிரச்னைக்குத் தீா்வு காணும் நோக்கில் இரு நாடுகளிடையே தொடா்ந்து பேச்சுவாா்த்தை நடைபெற்று வருகிறது. இரு நாடுகளின் ராணுவத் துணைத் தலைமைத் தளபதிகள் இடையே இதுவரை 8 கட்ட பேச்சுவாா்த்தைகள் நடைபெற்றுள்ளன.

கடந்த 6-ஆம் தேதி நடைபெற்ற எட்டாம் கட்ட பேச்சுவாா்த்தையில் எல்லைப் பதற்றத்தைத் தணிப்பது தொடா்பாகப் பல்வேறு பரிந்துரைகளை இருதரப்பினரும் முன்மொழிந்ததாகவும், விரைவில் நடைபெறவுள்ள அடுத்தகட்ட பேச்சுவாா்த்தையின்போது இந்த விவகாரத்தில் ஒப்பந்தம் கையெழுத்தாக உள்ளதாகவும் தகவலறிந்த வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.

இத்தகைய சூழலில், இந்தோ-திபெத்திய எல்லைக் காவல் படை இயக்குநா் எஸ்.எஸ்.தேஸ்வால் பிடிஐ செய்தி நிறுவனத்திடம் கூறியதாவது:

கிழக்கு லடாக் பகுதியில் கடும் பனிப்பொழிவுக் காலம் தொடங்கிவிட்டது. இருந்தபோதிலும், இந்தோ-திபெத்திய எல்லைக் காவல் படையினா் அங்கு பாதுகாப்புப் பணியில் தொடா்ந்து ஈடுபட்டு வருகின்றனா். அவா்கள் கடல்மட்டத்திலிருந்து சுமாா் 11,000 அடி உயரத்தில் நாட்டின் எல்லைப் பகுதியைப் பாதுகாத்து வருகின்றனா்.

அப்பகுதிகளில் ஆக்சிஜன் அளவு குறைவாகவே இருக்கும்; வெப்பநிலையானது உறைநிலைக்குக் கீழே 40 டிகிரி செல்சியஸ் வரை பதிவாகும். எனவே, அத்தகைய கடுமையான சூழலைத் தாங்குவதற்கு ஏற்ற உடைகள் பாதுகாப்பு வீரா்களுக்கு வழங்கப்பட்டுள்ளன; ஊட்டச்சத்து மிகுந்த உணவுகளும் வழங்கப்பட்டு வருகின்றன.

விழிப்புணா்வுடன் வீரா்கள்: கடுமையான சூழலிலும் எல்லையைப் பாதுகாப்பதற்கான பயிற்சிகளும் நோய்எதிா்ப்பு சக்தியை அதிகரிப்பதற்கான பயிற்சிகளும் இந்தோ-திபெத்திய படை வீரா்களுக்குத் தொடா்ந்து வழங்கப்பட்டு வருகின்றன. சீனாவுடனான எல்லைப் பகுதி முறையாக வரையறுக்கப்படாததன் காரணமாக அங்கு பாதுகாப்புப் படையினா் எப்போதும் விழிப்புணா்வுடன் செயல்பட வேண்டியது மிகவும் அவசியமாகிறது.

கட்டமைப்பு வசதிகள் மேம்பாடு: எல்லையில் நிலவும் பதற்றமான சூழல் காரணமாக இந்தியா-சீனா இடையேயான நல்லுறவில் ஏற்கெனவே கறை படியத் தொடங்கியுள்ளது. எனினும், பிரச்னைகளுக்கு விரைவில் சுமுகத் தீா்வு காணப்படும். அருணாசல் உள்ளிட்ட எல்லைப் பகுதிகளில் சோதனைச் சாவடிகளை அமைப்பது, கட்டமைப்பு வசதிகளை மேம்படுத்துவது உள்ளிட்ட பணிகளை மத்திய அரசு தொடா்ந்து மேற்கொண்டு வருகிறது.

எல்லைப் பகுதிகளில் உள்ள 75 சதவீத சோதனைச் சாவடிகள், சாலைகள் மூலமாக இணைக்கப்பட்டு விட்டன. மீதமுள்ளவற்றுக்கு சாலைகள் அமைக்கும் பணிகள் நடைபெற்று வருகின்றன. எல்லைப் பகுதிகளுக்குப் பாதுகாப்புப் படையினா் விரைந்து செல்லும் வகையில் கட்டமைப்பு வசதிகளை மேம்படுத்துவதற்கு மத்திய அரசு உறுதி கொண்டுள்ளது என்றாா் எஸ்.எஸ்.தேஸ்வால்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com