அரசியலமைப்புச் சட்டமே முதன்மையானது: வெங்கய்ய நாயுடு

ஜனநாயகத்தில் அரசியலமைப்புச் சட்டமே முதன்மையானது என குடியரசு துணைத் தலைவர் வெங்கய்ய நாயுடு கூறினார்.
அரசியலமைப்புச் சட்டமே முதன்மையானது: வெங்கய்ய நாயுடு

கேவாடியா: ஜனநாயகத்தில் அரசியலமைப்புச் சட்டமே முதன்மையானது என குடியரசு துணைத் தலைவர் வெங்கய்ய நாயுடு கூறினார்.
நாடாளுமன்ற, சட்டப்பேரவைத் தலைவர்களின் 80 ஆவது அகில இந்திய மாநாடு, குஜராத் மாநிலம் கேவாடியாவில் புதன்கிழமை தொடங்கியது. "துடிப்பான ஜனநாயகத்துக்கு சட்டப்பேரவை, நிர்வாகம் மற்றும் நீதித்துறை இடையே இணக்கமான ஒத்துழைப்பு அவசியம்' என்பதை மையக் கருத்தாகக் கொண்டு இந்த மாநாடு நடைபெறுகிறது. இதில் வெங்கய்ய நாயுடு பேசியதாவது:
நாடாளுமன்றம், சட்டப்பேரவை, நிர்வாகம் மற்றும் நீதித்துறை ஆகியவை அரசியலமைப்பு சட்டத்தில் வரையறுக்கப்பட்டுள்ளபடி அதிகார வரம்புக்குள் செயல்பட வேண்டிய கட்டாயத்தில் உள்ளன. இவற்றில் ஒன்று மற்றொன்றின் விஷயத்தில் தலையிடாமல் தத்தமது பணிகளைச் செய்வதில் நல்லிணக்கம் காணப்படுகிறது. இது பரஸ்பர மரியாதை, பொறுப்புணர்வு, கட்டுப்பாடு ஆகியவற்றுக்கு உத்தரவாதம் அளிக்கிறது.
துரதிருஷ்டவசமாக, எல்லை தாண்டிய சில நிகழ்வுகளும் உள்ளன. சூப்பர் நிர்வாகம் அல்லது சூப்பர் சட்டப்பேரவை போல நீதித்துறை செயல்படுவது விரும்பத்தக்கது அல்ல. நாடு சுதந்திரம் பெற்றதிலிருந்து, உச்சநீதிமன்றமும் உயர்நீதிமன்றங்களும் சமூக பொருளாதார நோக்கங்களை மேம்படுத்துவதில் பல முக்கியத் தீர்ப்புகளை அளித்துள்ளன. ஆனால், நாடாளுமன்றம், சட்டப்பேரவை மற்றும் நிர்வாக அதிகாரத்தில் அவை எப்போதாவது தலையிடுகின்றனவா என்ற கவலைகளும் எழுப்பப்பட்டுள்ளன.
நாடாளுமன்றம், சட்டப்பேரவை, நிர்வாகம் மற்றும் நீதித்துறையைவிட  அரசியலமைப்புச் சட்டமே முதன்மையானது. சில பிரச்னைகள் அரசின் பிற அங்கங்களுக்கு இன்னும் சட்டபூர்வமாக விடப்பட்டிருக்க வேண்டுமா என்பது குறித்து விவாதங்கள் நடந்துள்ளன. தீபாவளி பட்டாசு வெடிப்பதற்கு கட்டுப்பாடு, கொலீஜியம் மூலம் நீதிபதிகளை நியமிப்பதில் அரசு நிர்வாகத்தின் தலையீட்டுக்கு தடை, தேசிய நீதி நியமனங்கள் ஆணையச் சட்டத்தை செல்லாததாக்கியது ஆகியவை குறித்து உயர் நீதித்துறை தீர்மானித்ததை இங்கு சுட்டிக்காட்ட விரும்புகிறேன்.
சில சமயங்களில், நாடாளுமன்றமும் எல்லை மீற முனைகிறது. குடியரசுத் தலைவர், குடியரசு துணைத் தலைவர், பிரதமர் ஆகியோரை நீதித்துறை விசாரணைக்கு உள்படுத்தும் 39 வது அரசியலமைப்பு சட்டதிருத்தம் அதற்கு ஓர் உதாரணம் என்றார் வெங்கய்ய நாயுடு.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com