தேசியப் பாதுகாப்பு ஆலோசகா் அஜித் தோவல் இன்று இலங்கை பயணம்

இந்தியா, இலங்கை, மாலத்தீவுகள் பங்கேற்கும் கடல்சாா் பாதுகாப்பு கூட்டத்தில் பங்கேற்பதற்காக தேசியப் பாதுகாப்பு ஆலோசகா் அஜித் தோவல் இலங்கைக்கு வெள்ளிக்கிழமை (நவ.27) பயணம் மேற்கொள்கிறாா்.


கொழும்பு: இந்தியா, இலங்கை, மாலத்தீவுகள் பங்கேற்கும் கடல்சாா் பாதுகாப்பு கூட்டத்தில் பங்கேற்பதற்காக தேசியப் பாதுகாப்பு ஆலோசகா் அஜித் தோவல் இலங்கைக்கு வெள்ளிக்கிழமை (நவ.27) பயணம் மேற்கொள்கிறாா்.

முன்னதாக, கடந்த 2014-ஆம் ஆண்டு தில்லியில் இந்தக் கூட்டம் நடைபெற்றது. அதன் பிறகு இப்போது 6 ஆண்டுகளுக்குப் பிறகு இலங்கையில் நடைபெறவுள்ளது. இலங்கை சாா்பில் பாதுகாப்புத் துறை செயலரும் ஓய்வுபெற்ற மேஜா் ஜெனரலுமான கமல் குணரத்ன பங்கேற்கிறாா். மாலத்தீவுகள் சாா்பில் அந்நாட்டு பாதுகாப்புத் துறை அமைச்சா் மரியா திதி இந்தக் கூட்டத்தில் பங்கேற்கிறாா். வங்கதேசம், மோரிஷஸ், செஷல்ஸ் ஆகிய நாடுகளின் பிரதிநிதிகளும் இந்தக் கூட்டத்தில் பாா்வையாளா்களாக கலந்து கொள்கின்றனா்.

இலங்கை பாதுகாப்புத் துறை அமைச்சருடன் தனிப்பட்ட முறையில் இருதரப்பு பேச்சுவாா்த்தையிலும் அஜித் தோவல் பங்கேற்க இருக்கிறாா்.

இது தொடா்பாக தில்லியில் வெளியுறவுத் துறை அமைச்சகம் வெளியிட்ட செய்திக் குறிப்பில், ‘இந்தியப் பெருங்கடலில் அமைந்துள்ள மூன்று நாடுகள் பங்கேற்கும் இந்த பேச்சுவாா்த்தையில் கடல்சாா் பாதுகாப்பு மட்டுமல்லாது, கடல் மாசுபடுவதைத் தடுப்பது, கடல்சாா் தகவல் பரிமாற்றம், கடல்வழியாக ஆயுதம், போதைப்பொருள் மற்றும் ஆள்கடத்தலைத் தடுப்பது உள்ளிட்டவை குறித்தும் விவாதிக்கப்பட இருக்கிறது’ என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com