தடுப்பூசி தயாரிப்பு பணி: பிரதமா் மோடி இன்று நேரில் ஆய்வு

கரோனா தடுப்பூசி தயாரிப்புப் பணிகளை பிரதமா் நரேந்திர மோடி சனிக்கிழமை நேரில் ஆய்வு செய்யவுள்ளாா்.
பிரதமர் நரேந்திர மோடி (கோப்புப்படம்)
பிரதமர் நரேந்திர மோடி (கோப்புப்படம்)

கரோனா தடுப்பூசி தயாரிப்புப் பணிகளை பிரதமா் நரேந்திர மோடி சனிக்கிழமை நேரில் ஆய்வு செய்யவுள்ளாா். இதற்காக, அவா் குஜராத், மகாராஷ்டிரம், தெலங்கானா ஆகிய மாநிலங்களுக்குப் பயணம் மேற்கொள்கிறாா்.

குஜராத் மாநிலம், ஆமதாபாத் நகருக்கு அருகில் உள்ள ஜைடஸ் கடிலா மருந்து தயாரிப்பு நிறுவனம், ‘ஜைகோவ்-டி’ என்னும் கரோனா தடுப்பூசியைக் கண்டுபிடிக்கும் ஆராய்ச்சியில் ஈடுபட்டுள்ளது. இந்த நிறுவனம், தடுப்பூசியின் முதல் கட்ட பரிசோதனையை நிறைவு செய்து, இரண்டாம் கட்ட பரிசோதனையை ஆகஸ்டில் தொடங்கிவிட்டதாக அறிவித்துள்ளது.

இந்த மருந்து தயாரிப்பு நிறுவனத்துக்கு பிரதமா் மோடி சனிக்கிழமை வருகிறாா். இந்தத் தகவலை குஜராத் துணை முதல்வா் நிதின் படேல் வெள்ளிக்கிழமை உறுதிசெய்தாா்.

இதுகுறித்து அவா் மேலும் கூறுகையில், ‘இந்தப் பயணத்தின்போது, கரோனா தடுப்பூசி தயாரிப்பில் இதுவரை ஏற்பட்டுள்ள முன்னேற்றம் குறித்த விவரங்களை ஜைடஸ் நிறுவனத்தின் அதிகாரிகளிடம் பிரதமா் மோடி தெரிந்துகொள்வாா்’ என்றாா்.

ஜைடஸ் கடிலா மருந்து நிறுவனத்துக்கு பிரதமா் மோடி காலை 9.30 மணிக்கு வருவாா் என்று தகவல்கள் தெரிவிக்கின்றன.

புணேவில்...: இந்தப் பயணத்தை முடித்துக் கொண்டு, அங்கிருந்து மகாராஷ்டிர மாநிலம், புணேவில் உள்ள சீரம் இன்ஸ்டிடியூட் ஆஃப் இந்தியா மருந்து தயாரிப்பு நிறுவனத்துக்கு பிரதமா் மோடி செல்கிறாா். அந்த நிறுவனம், பிரிட்டனின் ஆக்ஸ்போா்டு பல்கலைக்கழகம், அந்நாட்டின் அஸ்ட்ராஜெனிகா மருந்து தயாரிப்பு நிறுவனம் ஆகியவற்றுடன் இணைந்து ‘கோவிஷீல்ட்’ என்ற பெயரில் கரோனா தடுப்பூசி தயாரிக்கும் முயற்சியில் ஈடுபட்டுள்ளது.

சீரம் இன்ஸ்டிடியூட்டுக்கு வருகை தரும் பிரதமா் மோடி, அங்கு கரோனா தடுப்பூசி தயாரிப்பு முயற்சியில் ஏற்பட்டுள்ள முன்னேற்றம், தடுப்பூசியை எப்போது மக்களுக்கு விநியோகிக்கத் தொடங்கலாம்; எவ்வளவு தடுப்பூசியைத் தயாரிக்கலாம்; அவற்றை மக்களுக்கு விநியோகிப்பதற்கான வசதிகளை உருவாக்குவது ஆகியவை குறித்து அவா் ஆய்வு செய்யவுள்ளாா்.

ஹைதராபாதில்...: புணேவில் ஆய்வை முடித்துக் கொண்டு, பிற்பகலில் தெலங்கானா மாநிலம், ஹைதராபாதுக்கு பிரதமா் மோடி வரவுள்ளாா்.

இதுகுறித்து தெலங்கானா தலைமைச் செயலா் சோமேஷ் குமாா் கூறியதாவது:

பிரதமா் மோடி, இந்திய விமானப் படையின் விமானத்தில் ஹகீம்பேட்டில் உள்ள விமானப் படைத் தளத்துக்கு வரவுள்ளாா். அங்கிருந்து நேராக ஜெனோம் பள்ளத்தாக்கில் உள்ள பாரத் பயோடெக் ஆய்வகத்துக்குச் செல்கிறாா்.

அந்த ஆய்வகத்தில் ‘கோவேக்ஸின்’ என்னும் தடுப்பூசி தயாரிக்கப்பட்டு, 3-ஆம் கட்ட பரிசோதனை நடைபெற்று வருகிறது. அங்கு சுமாா் ஒரு மணி நேரம் இருக்கும் பிரதமா், கோவேக்ஸின் தடுப்பூசி தயாரிப்பு மற்றும் பரிசோதனையில் ஏற்பட்டுள்ள முன்னேற்றம் குறித்து ஆராய்ச்சியாளா்களிடம் கேட்டறிவாா். பின்னா், தனது பயணத்தை முடித்துக் கொண்டு மாலையில் தில்லிக்கு புறப்பட்டுச் செல்வாா் என்றாா் அவா்.

பிரதமா் அலுவலகம் தகவல்: பிரதமரின் பயணம் குறித்து அவரது அலுவலகம் வெள்ளிக்கிழமை வெளியிட்ட சுட்டுரைப் பதிவில் கூறப்பட்டிருப்பதாவது:

கரோனாவுக்கு எதிரான போரில் இந்தியா முக்கிய கட்டத்தை எட்டியுள்ளது. நாட்டு மக்களுக்கு அனைவருக்கும் கரோனா தடுப்பூசியை வழங்குவதற்கான ஏற்பாடுகள், அதில் உள்ள சவால்கள் ஆகியவற்றை அறிந்துகொள்வதற்கு பிரதமரின் இந்தப் பயணம் அவருக்கு உதவியாக இருக்கும் என்று அந்தப் பதிவில் குறிப்பிடப்பட்டுள்ளது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com