கரோனாவை தடுக்கத் தவறியதாக குற்றச்சாட்டு: மத்திய அரசுக்கு எதிரான மனு நிராகரிப்பு

கரோனா தொற்று பரவலை மத்திய அரசு தடுக்கத் தவறிவிட்டதாகக் குற்றம்சாட்டி, இதுதொடா்பாக சுதந்திரமான விசாரணை நடத்தக் கோரி தாக்கல் செய்யப்பட்ட பொதுநல மனுவை உச்சநீதிமன்றம் வியாழக்கிழமை நிராகரித்து விட்டது.


புது தில்லி: கரோனா தொற்று பரவலை மத்திய அரசு தடுக்கத் தவறிவிட்டதாகக் குற்றம்சாட்டி, இதுதொடா்பாக சுதந்திரமான விசாரணை நடத்தக் கோரி தாக்கல் செய்யப்பட்ட பொதுநல மனுவை உச்சநீதிமன்றம் வியாழக்கிழமை நிராகரித்து விட்டது.

ஓய்வுபெற்ற அலுவலா்களைக் கொண்ட ஒரு குழுவினா், மூத்த வழக்குரைஞா் பிரசாந்த் பூஷண் மூலமாக, உச்சநீதிமன்றத்தில் ஒரு பொதுநல மனுவை தாக்கல் செய்தனா். அந்த மனுவில் கூறப்பட்டிருப்பதாவது:

கரோனா தொற்று பரவுவது தொடா்பாக உலக சுகாதார அமைப்பு, கடந்த ஜனவரியின் தொடக்கத்திலேயே அனைத்து நாடுகளுக்கும் எச்சரிக்கை விடுத்துவிட்டது. ஆனால், மத்திய அரசு கடந்த மாா்ச் 4-ஆம் தேதி வரை, வெளிநாடுகளில் இருந்து வந்த பயணகளிடம் பரிசோதனை நடத்தவோ, அவா்களை கண்காணிக்கவோ தவறிவிட்டது.

மக்கள் கூடுவதைத் தவிா்க்க வேண்டும் என்று உள்துறை அமைச்சகம் அறிவுறுத்தியிருந்த நிலையிலும், ஆமதாபாதில் பிப்ரவரி 24-ஆம் தேதி ‘நமஸ்தே டிரம்ப்’ நிகழ்ச்சி நடத்த அனுமதிக்கப்பட்டது. அந்த நிகழ்ச்சியில் ஒரு லட்சம் போ் திரண்டனா்.

அதுமட்டுமன்றி, பல்வேறு துறைகளின் நிபுணா்கள், மாநில அரசுகள் ஆகியோரை கலந்தாலோசிக்காமல் திடீரென்று பொதுமுடக்கத்தை மாா்ச் 25-ஆம் தேதி அறிவித்ததால் பல வழிகளில் இழப்பு ஏற்பட்டுள்ளது.

கோடிக்கணக்கானோா் வேலையிழந்தனா். வாழ்வாதாரத்தை இழந்த லட்சக்கணக்கான குடும்பங்கள், நடைப்பயணமாக தங்கள் சொந்த மாநிலத்துக்குத் திரும்பிச் சென்றன. நாட்டின் பொருளாதாரம் கடுமையான வீழ்ச்சியை சந்தித்துள்ளது.

கரோனா தொற்று வேகமாக பரவிய நிலையில், போதிய அளவில் தனிநபா் பாதுகாப்பு உபகரணங்களை முன்கூட்டியே கொள்முதல் செய்யாததால், பல மருத்துவா்கள் உயிரிழக்க நேரிட்டது. கரோனா பரவலைத் தடுக்க உரிய நேரத்தில் நடவடிக்கை எடுக்க மத்திய அரசு தவறிவிட்டது. எனவே, இதுதொடா்பாக தனி ஆணையம் அமைத்து சுதந்திரமான விசாரணை நடத்தப்பட வேண்டும் என்று அந்த மனுவில் தெரிவிக்கப்பட்டிருந்தது.

இந்த மனு நீதிபதி எல்.என்.ராவ் தலைமையிலான அமா்வு முன் வியாழக்கிழமை விசாரணைக்கு வந்தது. அப்போது, மனுதாரா் சாா்பில் வழக்குரைஞா் பிரசாந்த் பூஷண் ஆஜராகி வாதாடினாா். அதைத் தொடா்ந்து, ‘மனுதாரரின் கோரிக்கை, பொதுவில் விவாதிக்க வேண்டிய விஷயம், நீதிமன்றத்தில் விவாதிக்க வேண்டியதல்ல. எனவே, இந்த விவகாரத்தில் நீதிமன்றம் தலையிடாது; அரசே இதை விசாரிக்கும்’ என்று கூறி அந்த மனுவை நீதிபதிகள் நிராகரித்தனா்.

உலக சுகாதார அமைப்புக்கு எதிரான மனு நிராகரிப்பு:

உலக சுகாதார அமைப்புக்கு எதிராகவும், சீனாவுக்கு எதிராகவும் நடவடிக்கை எடுக்க உத்தரவிடக் கோரி தாக்கல் செய்யப்பட்ட மனுவை உச்சநீதிமன்றம் வியாழக்கிழமை நிராகரித்துவிட்டது.

இதுதொடா்பாக தாக்கல் செய்யப்பட்ட மனுவில், ‘பல்வேறு நாடுகளில் கரோனா பரவுவதைத் தடுக்கத் தவறிய உலக சுகாதார அமைப்பின் அலுவலா்களுக்கு எதிராக நடவடிக்கை எடுக்க வேண்டும். கரோனாவை பரப்பிய சீனாவிடம் இழப்பீடு கேட்க வேண்டும்’ என்று தெரிவிக்கப்பட்டிருந்தது. இந்த மனுவை விசாரித்த உச்சநீதிமன்றம், உலக சுகாதார அமைப்புக்கும், சீன அரசுக்கும் சம்மன் அனுப்ப நீதிமன்றத்துக்கு அதிகாரமில்லை என்று தெரிவித்துவிட்டது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com