உ.பி.யில் குடியரசுத் தலைவர் ஆட்சியை அமல்படுத்த வேண்டும்: மாயாவதி

உத்தரப்பிரதேசத்தில் குடியரசுத் தலைவர் ஆட்சியை அமல்படுத்த வேண்டும் என உத்தரப்பிரதேச மாநில முன்னாள் முதல்வரும், பகுஜன் சமாஜ் கட்சித் தலைவருமான மாயாவதி வலியுறுத்தியுள்ளார்.
பகுஜன் சமாஜ் கட்சித் தலைவர் மாயாவதி
பகுஜன் சமாஜ் கட்சித் தலைவர் மாயாவதி

உத்தரப்பிரதேசத்தில் குடியரசுத் தலைவர் ஆட்சியை அமல்படுத்த வேண்டும் என உத்தரப்பிரதேச மாநில முன்னாள் முதல்வரும், பகுஜன் சமாஜ் கட்சித் தலைவருமான மாயாவதி வலியுறுத்தியுள்ளார்.

உத்தரப்பிரதேசத்தில் 4 பேர் கொண்ட கும்பலால் பாலியல் வன்கொடுமை செய்யப்பட்ட பெண் செவ்வாய்க்கிழமை சிகிச்சை பலனளிக்காமல் உயிரிழந்தார்.

கடந்த செப்டம்பர் 14 ஆம் தேதி உத்தரப்பிரதேச மாநிலம் ஹத்ராஸ் மாவட்டத்தில் வயல் வெளியில் வேலை செய்து வந்த 20 வயதான பெண் ஒருவரை 4 பேர் கொண்ட கும்பல் பாலியல் வன்கொடுமை செய்தது. இதுகுறித்து வெளியில் செய்தி கசியாமல் இருக்க அப்பெண்ணின் நாக்கை அந்தக் கும்பல் வெட்டியுள்ளது.

ரத்த வெள்ளத்தில் சாலையோரம் கண்டெடுக்கப்பட்ட அந்தப் பெண் ஜவஹர்லால் நேரு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். பின் அவரது உடல்நிலை மோசமடைந்ததால் அவர் தில்லி சப்தர்ஜங் மருத்துவமனையின் அவசர சிகிச்சைப் பிரிவிற்கு மாற்றப்பட்டார்.

பட்டியல் சமூகத்தைச் சேர்ந்த அந்தப் பெண், கழுத்து முதுகுப் பகுதிகளில் எலும்பு முறிவுகளுடன் சிகிச்சை பெற்று வந்தார். எனினும் தீவிர சிகிச்சை பலனளிக்காமல் அவர் செவ்வாய்க்கிழமை பலியானார்.

உ.பி. காவல்துறை தங்களுக்கு உதவி எதுவும் செய்யவில்லை என்றும், தாக்குதல் நடத்தியவர்கள் மீது எந்த நடவடிக்கையும் எடுக்கவில்லை என்றும் அந்த பெண்ணின் குடும்பத்தினர் குற்றம் சாட்டியுள்ளனர்.

இந்நிலையில் புதன்கிழமை அதிகாலை அப்பெண்ணின் உடல் உடற்கூராய்வு மேற்கொள்ளப்பட்டு உ.பி.காவல்துறையினரால் எரியூட்டப்பட்டார். குடும்பத்தினரின் ஒப்புதல் இல்லாமல் காவல்துறை அவரது உடலை எரியூட்டியதாக குற்றச்சாட்டு எழுந்துள்ளது.

இந்நிலையில் பாரதிய ஜனதா கட்சித் தலைமையிலான உத்தரபிரதேச அரசின் கீழ் குற்றவாளிகள் மற்றும் கற்பழிப்பாளர்கள் சுதந்திரமாக உலவி வருவதாக பகுஜன் சமாஜ் கட்சியின் தலைவர் மாயாவதி குற்றம்சாட்டியுள்ளார்.

மேலும் பெண்களைப் பாதுகாக்கத் தவறியதால், முதல்வர் யோகி ஆதித்யநாத் பதவி விலக வேண்டுமெனவும், மாநிலத்தில் ஜனாதிபதியின் ஆட்சியை அமல்படுத்த வேண்டும் எனவும் அவர் தெரிவித்துள்ளார்.

ஹத்ராஸ் மற்றும் பால்ராம்பூரில் நடந்த இரண்டு சம்பவங்களும் புதுதில்லியின் நிர்பயா சம்பவத்தை நினைவூட்டியதாக அவர் மேலும் குறிப்பிட்டார்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com