இளம்பெண் பாலியல் வன்கொடுமையால் இறக்கவில்லை: உ.பி. ஏ.டி.ஜி.பி தகவல்

உத்தரப்பிரதேசத்தில் ஹாத்ராஸ் சம்பவத்தில் பலியான இளம்பெண் கூட்டுப் பாலியல் வன்கொடுமை செய்யப்படவில்லை என மாநில காவல்துறை துணைத் தலைவர் பிரசாந்த் குமார் தெரிவித்துள்ளார்.
கோப்புப்படம்
கோப்புப்படம்

உத்தரப்பிரதேசத்தில் ஹாத்ராஸ் சம்பவத்தில் பலியான இளம்பெண் கூட்டுப் பாலியல் வன்கொடுமை செய்யப்படவில்லை என மாநில காவல்துறை துணைத் தலைவர் பிரசாந்த் குமார் தெரிவித்துள்ளார்.

உத்தரப்பிரதேசத்தில் 4 பேர் கொண்ட கும்பலால் பாலியல் வன்கொடுமை செய்யப்பட்ட பெண் செவ்வாய்க்கிழமை சிகிச்சை பலனளிக்காமல் உயிரிழந்தார்.

கடந்த செப்டம்பர் 14 ஆம் தேதி உத்தரப்பிரதேச மாநிலம் ஹத்ராஸ் மாவட்டத்தில் வயல் வெளியில் வேலை செய்து வந்த 20 வயதான பெண் ஒருவரை 4 பேர் கொண்ட கும்பல் பாலியல் வன்கொடுமை செய்தது. இதுகுறித்து வெளியில் செய்தி கசியாமல் இருக்க அப்பெண்ணின் நாக்கை அந்தக் கும்பல் வெட்டியுள்ளது.

ரத்த வெள்ளத்தில் சாலையோரம் கண்டெடுக்கப்பட்ட அந்தப் பெண் ஜவஹர்லால் நேரு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். பின் அவரது உடல்நிலை மோசமடைந்ததால் அவர் தில்லி சப்தர்ஜங் மருத்துவமனையின் அவசர சிகிச்சைப் பிரிவிற்கு மாற்றப்பட்டார்.

பட்டியல் சமூகத்தைச் சேர்ந்த அந்தப் பெண், கழுத்து முதுகுப் பகுதிகளில் எலும்பு முறிவுகளுடன் சிகிச்சை பெற்று வந்தார். எனினும் தீவிர சிகிச்சை பலனளிக்காமல் அவர் செவ்வாய்க்கிழமை பலியானார்.

இந்த சம்பவம் நாடுமுழுவதும் பெரும் அதிர்வலைகளைக் கிளப்பியுள்ளது. இந்நிலையில் இதுகுறித்துப் பேசிய உத்தரப்பிரதேச மாநில காவல்துறைத் துணைத்தலைவர் பிரசாந்த் குமார், “ஹாத்ராஸ் இளம்பெண் பாலியல் வன்கொடுமைக்கு உள்ளாகவில்லை.” எனத் தெரிவித்துள்ளார்.

மேலும், “தடயவியல் அறிக்கையின்படி இளம்பெண் கழுத்தில் ஏற்பட்ட காயம் காரணமாகவே பலியானார். இதுகுறித்து தவறான தகவல்கள் பரப்புபவர்கள் மீது சட்டப்படியான நடவடிக்கை மேற்கொள்ளப்படும்.” என அவர் தெரிவித்துள்ளார்.

முன்னதாக ஹாத்ராஸ் இளம்பெண்ணின் குடும்பத்தினரை சந்திக்கச் சென்ற காங்கிரஸ் கட்சியின் ராகுல்காந்தி மற்றும் பிரியங்கா காந்தி கைது செய்யப்பட்டனர் என்பது குறிப்பிடத்தக்கது. 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com