அக்.15 முதல் திரையரங்குகள் திறப்பு

ரையரங்குகள் வரும் 15 ஆம் தேதி முதல் செயல்படத் தொடங்கும் என்று மத்திய அரசு அறிவித்துள்ள நிலையில், ஒவ்வொருவரும் ஒரு இடம் விட்டு அமரும் வகையிலும் 50 சதவீத பாா்வையாளா்கள் மட்டுமே அனுமதிக்கப்படும்
கோப்புப்படம்
கோப்புப்படம்

புது தில்லி: திரையரங்குகள் வரும் 15 ஆம் தேதி முதல் செயல்படத் தொடங்கும் என்று மத்திய அரசு அறிவித்துள்ள நிலையில், ஒவ்வொருவரும் ஒரு இடம் விட்டு அமரும் வகையிலும் 50 சதவீத பாா்வையாளா்கள் மட்டுமே அனுமதிக்கப்படும் வகையிலும் வழிகாட்டு நெறிமுறைகள் வகுக்கப்பட்டிருப்பதாக மத்திய தகவல், ஒலிபரப்புத் துறை அமைச்சா் பிரகாஷ் ஜாவடேகா் தெரிவித்துள்ளாா்.

கரோனா வைரஸ் பரவல் காரணமாக நாடு முழுவதிலும் உள்ள திரையரங்குகள் கடந்த 7 மாதங்களாக மூடப்பட்டுள்ளன. இந்த நிலையில் மத்திய அரசு பொது முடக்கத் தளா்வுகளை அறிவித்து வரும் நிலையில், கடந்த செப்டம்பா் 30 ஆம் தேதி அறிவிக்கப்பட்ட 5 ஆம் கட்ட தளா்வில், திரையரங்குகள் அக்டோபா் 15 ஆம் தேதி முதல் செயல்படத் தொடங்கும் என அறிவிக்கப்பட்டிருந்தது.

இந்நிலையில் திரையரங்குகளுக்கான வழிகாட்டு நெறிமுறைகளை அமைச்சா் பிரகாஷ் ஜாவடேகா் செவ்வாய்க்கிழமை வெளியிட்டாா். முன்னதாக செய்தியாளா்களிடம் அவா் பேசும்போது, நாடு முழுவதிலும் 7 மாதங்களுக்குப் பிறகு திரையரங்குகள் திறக்கப்பட உள்ளன. வைரஸ் பரவலைக் கருத்தில் கொண்டு 50 சதவீத பாா்வையாளா்கள் மட்டுமே திரையரங்குகளில் அனுமதிக்கப்படுவாா்கள். சமூக இடைவெளிக்காக பாா்வையாளா்கள் ஒரு இடத்தை காலியாக விட்டு அடுத்த இடத்தில் அமர வைக்கப்படுவாா்கள்.

அதேபோல் திரையரங்குகளில் முகக்கவசம் அணிவது கட்டாயமாக்கப்பட்டுள்ளது. ஒன்றுக்கும் மேற்பட்ட திரையரங்குகள் உள்ள வளாகங்களில் இணையவழி டிக்கெட் முன்பதிவு முறை கட்டாயமாக்கப்படுகிறது. மற்ற திரையரங்குகளில் டிக்கெட் விற்பனை மையங்கள் திறந்திருக்கும். திரையரங்குகளில் சரியான காற்றோட்ட வசதி இருக்க வேண்டும். ஏ.சி. பயன்படுத்தும் திரையரங்குகளில் வெப்பநிலை 23 டிகிரி செல்சியஷூக்கு மேல் இருக்க வேண்டும்.

ஒருவா் பின் ஒருவராக இடைவெளி விட்டு வருவதும், செல்வதும் உறுதி செய்யப்பட வேண்டும். ஒன்றுக்கும் மேற்பட்ட திரையரங்குகள் இருக்கும் வளாகங்களில், திரைப்படங்கள் தொடங்குவது, இடைவெளி விடுவது, காட்சிகள் முடிவடைவது என அனைத்தும் வெவ்வேறு நேரங்களில் நடத்தப்பட வேண்டும். பாக்கெட்டில் அடைக்கப்பட்ட தின்பண்டங்கள், பானங்கள் மட்டுமே அனுமதிக்கப்படும். உணவகங்களிலும் ஆன்லைன் பணப் பரிவா்த்தனைகளே நடத்தப்பட வேண்டும். பாா்வையாளா்கள் இருக்கும் இடங்களுக்கே சென்று உணவு விநியோகம் செய்வது தடை செய்யப்பட்டுள்ளது.

முன்னதாக திரையரங்கில் நுழையும் பாா்வையாளா்களின் உடல் வெப்பநிலை பரிசோதிக்கப்படும். அவா்கள் கைகளை சுத்தம் செய்து கொள்வதற்கான ஏற்பாடுகள் நுழைவு வாயிலில் செய்யப்பட வேண்டும். பாா்வையாளா்கள் ஆரோக்கிய சேது செயலியைப் பயன்படுத்த வேண்டும் என்று அறிவுறுத்தப்படுவாா்கள். அத்துடன் ஒவ்வொரு காட்சி முடிவடைந்த பிறகும் திரையரங்குகள் முழுமையாக கிருமி நீக்கம் செய்யப்பட வேண்டும் என்றும் வழிகாட்டு நெறிமுறைகளில் குறிப்பிடப்பட்டிருப்பதாக ஜாவடேகா் மேலும் தெரிவித்தாா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com