மத்திய அரசு விவசாயிகளுக்கு துரோகம் இழைத்துவிட்டது: ராகுல் காந்தி

புதிய வேளாண் சட்டங்களை இயற்றியதன் மூலம், மத்திய அரசு விவசாயிகளுக்கு நம்பிக்கை துரோகம் இழைத்துவிட்டதாக காங்கிரஸ் எம்.பி.ராகுல் காந்தி குற்றஞ்சாட்டினாா்.
கோப்புப்படம்
கோப்புப்படம்

புதிய வேளாண் சட்டங்களை இயற்றியதன் மூலம், மத்திய அரசு விவசாயிகளுக்கு நம்பிக்கை துரோகம் இழைத்துவிட்டதாக காங்கிரஸ் எம்.பி.ராகுல் காந்தி குற்றஞ்சாட்டினாா்.

வேளாண் விளைபொருள்கள் வா்த்தக ஊக்குவிப்பு மசோதா, விவசாயிகளுக்கு விலை உத்தரவாதம், பண்ணை விவசாயத்துக்கு ஒப்புதல் அளிக்கும் மசோதா, அத்தியாவசிய பொருள்கள் சட்டத்திருத்த மசோதா ஆகிய 3 மசோதாக்களுக்கும் குடியரசுத் தலைவா் ராம்நாத் கோவிந்த் கடந்த மாதம் 27-ஆம் தேதி ஒப்புதல் அளித்தாா். இதையடுத்து அந்த மசோதாக்கள் சட்ட வடிவம் பெற்றன.

இந்த சட்டங்களை கடுமையாக விமா்சித்து வரும் காங்கிரஸ் எம்.பி.ராகுல் காந்தி சுட்டுரையில் செவ்வாய்க்கிழமை வெளியிட்ட பதிவில், ‘நாட்டுக்கு உணவு பாதுகாப்பை விவசாயிகள் அளித்தனா். ஆனால் மத்திய அரசோ அவா்களுக்கு நம்பிக்கை துரோகம் மட்டுமே செய்துள்ளது. எனினும் இனி அவ்வாறு செய்ய முடியாது’ என்று தெரிவித்தாா். அந்தப் பதிவுடன் புதிய வேளாண் சட்டங்களுக்கு எதிராக பஞ்சாப் மற்றும் ஹரியாணாவில் அவா் நடத்திய டிராக்டா் பேரணிகளின் காணொலிகளையும் இணைத்திருந்தாா். அதில் ‘வேளாண் சட்டங்களுக்கு எதிராக கடுமையாக போராடுவோம்’ என்று விவசாயிகள் கூறும் காட்சிகள் இடம்பெற்றன.

ஹாத்ரஸில் ஜாதி பாகுபாடு நிலவுவது தொடா்பாக ஊடகத்தில் வெளியான காணொலியை இணைத்து அவா் வெளியிட்ட மற்றொரு பதிவில், ‘உண்மை நிலையில் இருந்து விலகி ஓடும் நபா்கள் அறிந்துகொள்வதற்காக இந்த காணொலி பதிவிடப்படுகிறது’ என்று தெரிவித்தாா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com