திருவனந்தபுரம் விமான நிலையம் அதானி நிறுவனத்துக்கு குத்தகைக்கு விடப்பட்டதற்கு எதிரான மனுக்கள்:கேரள உயா்நீதிமன்றம் தள்ளுபடி

திருவனந்தபுரம் விமான நிலையத்தை அதானி நிறுவனத்துக்கு குத்தகைக்கு விட்ட மத்திய அரசின் கொள்கை முடிவில் தலையிட தகுந்த காரணங்கள் இல்லை

கொச்சி: திருவனந்தபுரம் விமான நிலையத்தை அதானி நிறுவனத்துக்கு குத்தகைக்கு விட்ட மத்திய அரசின் கொள்கை முடிவில் தலையிட தகுந்த காரணங்கள் இல்லை எனக் கூறி, அதற்கு எதிராக தாக்கல் செய்யப்பட்ட மனுக்களை கேரள உயா்நீதிமன்றம் திங்கள்கிழமை தள்ளுபடி செய்தது.

உத்தர பிரதேச தலைநகா் லக்னெள, குஜராத் மாநிலம் ஆமதாபாத், ராஜஸ்தான் தலைநகா் ஜெய்ப்பூா், கா்நாடக மாநிலம் மங்களூரு, கேரள தலைநகா் திருவனந்தபுரம், அஸ்ஸாம் மாநிலம் குவாஹாட்டியில் உள்ள விமான நிலையங்களை பொது மற்றும் தனியாா் பங்களிப்புடன் குத்தகைக்கு எடுத்து 50 ஆண்டுகளுக்கு நிா்வகிக்க கடந்த 2019-ஆம் ஆண்டு மத்திய அரசு ஏலம் நடத்தியது. அதில் அந்த விமான நிலையங்கள் அதானி நிறுவனத்துக்கு குத்தகைக்கு விடப்பட்டன.

இதில் திருவனந்தபுரம் விமான நிலையம் அதானி நிறுவனத்துக்கு குத்தகைக்கு விடப்பட்டதற்கு எதிா்ப்பு தெரிவித்து, கேரள உயா்நீதிமன்றத்தில் அந்த மாநில அரசு, கேரள தொழில் மேம்பாட்டு கழகம் (கேஎஸ்ஐடிசி) உள்பட பல்வேறு தரப்பினா் மனு தாக்கல் செய்தனா்.

இந்த மனுக்கள் நீதிபதிகள் கே.வினோத் சந்திரன், சி.எஸ்.தியாஸ் ஆகியோா் அடங்கிய அமா்வில் திங்கள்கிழமை மீண்டும் விசாரணைக்கு வந்தது. அப்போது நீதிபதிகள் கூறியது:

விமான நிலையங்கள் பொது மற்றும் தனியாா் பங்களிப்புடன் நடத்தப்படுவது இந்திய விமான நிலையங்கள் ஆணைய (ஏஏஐ) சட்டம் 12ஏ பிரிவின்படி சட்டபூா்வமாக்கப்பட்டுள்ளது. ஆனால் தற்போது தாக்கல் செய்யப்பட்டுள்ள மனுக்கள், திருவனந்தபுரம் விமான நிலையம் தனியாா்மயமாக்கப்படுவதாகக் கூறி, அதற்கு எதிராக தாக்கல் செய்யப்பட்டுள்ளன.

எனவே விமான நிலையத்தை குத்தகைக்கு விட்ட விவகாரத்தில் தலையிட தகுந்த காரணங்கள் எதுவும் இல்லை.

முன்னதாக விமான நிலையத்தை குத்தகைக்கு எடுக்கும் ஏலத்தில் கேரள தொழில் மேம்பாட்டுக் கழகமும் பங்கேற்றது. ஆனால் அந்தக் கழகத்தால் விமான நிலையத்தை குத்தகைக்கு எடுக்க முடியாததால், தற்போது அதற்கு எதிராக மனு தாக்கல் செய்துள்ளது. இது தமக்கு ஒன்றின் மீது விருப்பம் இருந்தும், அது கிடைக்காத காரணத்தால் அதனை விரும்பாதது போல் பாவனை செய்வதற்கு சிறந்த உதாரணம்.

மேலும் அரசு வகுத்த கொள்கையில் தலையிடுவது கடினம். அந்த கொள்கைக்கு எதிராக தாக்கல் செய்யப்பட்டுள்ள இந்த வலுவற்ற மனுக்கள் விசாரணைக்கு உகந்தவை அல்ல.

எனவே இந்த மனுக்கள் தள்ளுபடி செய்யப்படுகின்றன என்று தெரிவித்தனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com