ஸ்டெர்லைட் ஆலையில் பராமரிப்புப் பணிக்கு அனுமதி கூடாது: உச்சநீதிமன்றத்தில் தமிழக அரசு பதில் மனு

ஸ்டெர்லைட் ஆலையில் பராமரிப்புப் பணிகளை மேற்கொள்ள வேதாந்தா நிறுவனத்துக்கு அனுமதி அளிக்கக் கூடாது என்று உச்சநீதிமன்றத்தில் தமிழக அரசு தாக்கல் செய்துள்ள பதில் மனுவில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
உச்ச நீதிமன்றம்
உச்ச நீதிமன்றம்

ஸ்டெர்லைட் ஆலையில் பராமரிப்புப் பணிகளை மேற்கொள்ள வேதாந்தா நிறுவனத்துக்கு அனுமதி அளிக்கக் கூடாது என்று உச்சநீதிமன்றத்தில் தமிழக அரசு தாக்கல் செய்துள்ள பதில் மனுவில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
தூத்துக்குடி ஸ்டெர்லைட் ஆலையை நிரந்தரமாக மூட தமிழக அரசு எடுத்த நடவடிக்கைக்கு எதிராக வேதாந்தா நிறுவனம் சென்னை உயர்நீதிமன்றத்தில் வழக்குத் தொடர்ந்தது.
இந்த வழக்கை விசாரித்த உயர்நீதிமன்றம், ஆலையை நிரந்தரமாக மூட தமிழக அரசு எடுத்த நடவடிக்கை நியாயமானதுதான் என்று உத்தரவிட்டு வேதாந்தா நிறுவனம் தாக்கல் செய்த அனைத்து மனுக்களையும் தள்ளுபடி செய்தது. இதை எதிர்த்து, வேதாந்தா நிறுவனம் சார்பில் உச்சநீதிமன்றத்தில் மேல்முறையீட்டு மனு தாக்கல் செய்யப்பட்டது. மனுவை கடந்த ஆகஸ்ட் 31-இல் விசாரித்த உச்சநீதிமன்றம், சென்னை உயர்நீதிமன்ற உத்தரவுக்கு இடைக்காலத் தடை விதிக்க மறுத்துவிட்டது. மேலும், மேல்முறையீட்டு மனு மீது தமிழக அரசு உள்ளிட்ட எதிர்மனுதாரர்கள் பதில் அளிக்க நோட்டீஸ் அனுப்பவும் உத்தரவிட்டிருந்தது. இதையடுத்து, தமிழக அரசு தாக்கல் செய்த பதில் மனுவில், "மாசுக் கட்டுப்பாட்டு விதிகளைப் பின்பற்றாததால்தான், தூத்துக்குடி ஸ்டெர்லைட் ஆலை மூட உத்தரவிடப்பட்டது' என தெரிவிக்கப்பட்டிருந்தது. 
இதனிடையே, ஸ்டெர்லைட் ஆலையில் பராமரிப்புப் பணியை மேற்கொள்ள தற்காலிகமாக அனுமதி அளிக்க உத்தரவிட வேண்டும் என்று கோரி வேதாந்தா நிறுவனம் சார்பில் உச்சநீதிமன்றத்தில் இடைக்கால மனு தாக்கல் செய்யப்பட்டிருந்தது. இதற்கு தமிழக அரசு திங்கள்கிழமை பதில் மனு தாக்கல் செய்தது. தமிழக அரசின் வழக்குரைஞர் யோகேஷ் கண்ணா தாக்கல் செய்துள்ள அந்த மனுவில் கூறப்பட்டுள்ளதாவது: 
மாசு விதிகளை மீறிச் செயல்பட்டதால் மூடப்பட்ட ஸ்டெர்லைட் ஆலையில் பாரமரிப்புப் பணிகளை மேற்கொள்வதற்கு அனுமதி அளிக்கக் கூடாது. கடந்த இரு ஆண்டுகளாக வேதாந்தா நிறுவனம் பல்வேறு நீதிமன்றங்களில் இதுதொடர்பாக முறையிட்டும் எந்த அனுமதியும் தரப்படவில்லை. அப்பகுதியில் நிலத்தடி நீர் மாசு உள்ளிட்டவற்றுக்கு இந்த ஆலை முக்கியக் காரணமாக இருந்ததால்தான், நிரந்தரமாக மூட தமிழக அரசால் நடவடிக்கை எடுக்கப்பட்டது. ஆலையின் பராமரிப்புத் தொடர்பாக உள்ளூர் அளவிலான ஒரு குழுவை அமைத்து அரசு மேற்பார்வையிட்டு வருகிறது. இதனால், வேதாந்தா நிறுவனத்திற்கு என தனியாக பராமரிப்புப் பணிக்கு அனுமதி அளிக்கும் தேவை எழவில்லை. அண்மையில் ஒரு வல்லுநர் குழுவையும் தமிழக அரசு அமைத்துள்ளது. இக்குழுவினர் அக்டோபர் மாதத்தில் ஆலையை நேரில் சென்று பார்வையிட்டு, தற்போதைய பராமரிப்பு போதுமானது எனத் தெரிவித்துள்ளனர் என்று மனுவில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com