குடற்புழு நோய்த் தாக்கம் 14 மாநிலங்களில் குறைந்தது

தேசிய குடற்புழு நீக்க தினம் கடந்த 5 ஆண்டுகளாக நாட்டில் கடைப்பிடிக்கப்பட்டதன் காரணமாக 14 மாநிலங்களில் குடற்புழு நோய்த் தாக்கம் குறைந்திருப்பதாக

தேசிய குடற்புழு நீக்க தினம் கடந்த 5 ஆண்டுகளாக நாட்டில் கடைப்பிடிக்கப்பட்டதன் காரணமாக 14 மாநிலங்களில் குடற்புழு நோய்த் தாக்கம் குறைந்திருப்பதாக மத்திய சுகாதார குடும்பநலத் துறை அமைச்சகம் தெரிவித்துள்ளது.
இது தொடர்பாக மத்திய சுகாதார அமைச்சகம் செவ்வாய்க்கிழமை வெளியிட்ட அறிக்கை: 
குடற்புழு தொற்று குழந்தைகளின் உடல் வளர்ச்சிக்கு தீங்கு விளைவிக்கின்றன. உலக சுகாதார நிறுவனத்தின் அறிவுறுத்தலைத் தொடர்ந்து, மத்திய சுகாதாரம் மற்றும் குடும்பநலத் துறை அமைச்சகம் சார்பில் 2015-ஆம் ஆண்டு முதல் தேசிய குடற்புழு நீக்க தினம் ஒவ்வொரு ஆண்டும் இரண்டு நாள்கள் (பிப்ரவரி, ஆகஸ்ட் மாதங்களில் ) பள்ளிகள் மற்றும் அங்கன்வாடிகளில் கடைப்பிடிக்கப்படுகிறது. உலக சுகாதார நிறுவனத்தால் அங்கீகரிக்கப்பட்ட "அல்பெண்டசோல்' மாத்திரை, உலகம் முழுவதும் இந்த இரு தினங்களில் குடற்புழு நீக்கத்துக்காக குழந்தைகள் மற்றும் பருவ வயதினருக்குத் தரப்படுகிறது. இந்த ஆண்டின் தொடக்கத்தில் குடற்புழு நீக்க தினத்தன்று 22 மாநிலங்கள், யூனியன் பிரதேசங்களில் 11 கோடி குழந்தைகளுக்கு "அல்பெண்டசோல்' மாத்திரைகள் வழங்கப்பட்டன.
இந்த குடற்புழு தொற்றுப் பரவலை கண்டறிய தேசிய தொற்று கட்டுப்பாட்டு மையத்தை மத்திய சுகாதாரம் மற்றும் குடும்பநலத் துறை அமைச்சகம் ஏற்படுத்தியது. இதன் பிறகு மேற்கொள்ளப்பட்ட ஆய்வு கடந்த 2016-ஆம் ஆண்டு முடிவடைந்தது. இதில் நோய்ப் பரவல் தாக்கம் மத்திய பிரதேச மாநிலத்தில் 12.5%, தமிழகத்தில் 85% வரையிலும் காணப்பட்டது கண்டறியப்பட்டது. தேசிய குடற்புழு நீக்க தினம் தொடர்ந்து கடந்து 5 ஆண்டுகளாக கடைப்பிடிக்கப்பட்டது. அப்போது 14 மாநிலங்களில் முதற்கட்டமாக ஆய்வு மேற்கொள்ளப்பட்டது. அதன்படி, இந்த மாநிலங்களில் நோய்த் தொற்றுப் பரவல் குறைந்திருப்பது தெரிய வந்துள்ளது. 
சத்தீஸ்கரில் 74.6% 13.6% -ஆகக் குறைந்துள்ளது. மேலும், ஹிமாசல பிரதேசம், மேகாலயம், சிக்கிம், தெலங்கானா, திரிபுரா, ராஜஸ்தான், மத்தியப் பிரதேசம், பிகார் ஆகிய மாநிலங்களிலும் கணிசமான அளவு குறைந்துள்ளது. ஆனால், ஆந்திர பிரதேசத்தில் அவ்வளவாகக் குறையவில்லை என அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com