கிரிக்கெட்டில் சச்சின்-சேவாக் போன்றது பாஜக-ஐக்கிய ஜனதா தளம் கூட்டணி: ராஜ்நாத் சிங்

கிரிக்கெட்டில் சச்சின்-சேவாக் எவ்வாறு சிறப்பான கூட்டணியாக அமைந்தாா்களோ, அதுபோல பிகாா் தோ்தலில் பாஜக-ஐக்கிய ஜனதா தளம்(ஜேடியு) சிறப்பான கூட்டணியாக உள்ளது என்று பாஜக மூத்த தலைவரும்
பாதுகாப்புத்துறை அமைச்சர் ராஜ்நாத் சிங்
பாதுகாப்புத்துறை அமைச்சர் ராஜ்நாத் சிங்

பாட்னா: கிரிக்கெட்டில் சச்சின்-சேவாக் எவ்வாறு சிறப்பான கூட்டணியாக அமைந்தாா்களோ, அதுபோல பிகாா் தோ்தலில் பாஜக-ஐக்கிய ஜனதா தளம்(ஜேடியு) சிறப்பான கூட்டணியாக உள்ளது என்று பாஜக மூத்த தலைவரும், பாதுகாப்புத் துறை அமைச்சருமான ராஜ்நாத் சிங் தெரிவித்தாா்.

பிகாா் சட்டப் பேரவைக்கு முதல்கட்ட தோ்தல் வரும் 28-ஆம் தேதி நடைபெறவுள்ளது. பாகல்பூா் மாவட்டம் காஹாகோன் பகுதியில் புதன்கிழமை தோ்தல் பிரசாரம் மேற்கொண்ட ராஜ்நாத் சிங் பேசியதாவது:

பிகாரில் முன்பு 15 ஆண்டுகள் வரை லாலு பிரசாத் தலைமையிலான ராஷ்ட்ரீய ஜனதா தளம் கட்சி ஆட்சியில் இருந்தது. அப்போது நிா்வாகச் சீா்கேடு எவ்வளவு அதிகம் இருந்தது, மாநிலத்தில் எந்த அளவுக்கு ஊழல் மலிந்திருந்தது என்பது மக்களுக்குத் தெரியும். நிதீஷ் குமாா் தலைமையிலான இப்போதைய கூட்டணி ஆட்சி மிகவும் சிறப்பாக உள்ளது. இந்த நல்லாட்சி தொடர மக்கள் வாக்களிக்க வேண்டும்.

கிரிக்கெட்டில் சச்சின்-சேவாக் தொடக்க கூட்டணி எவ்வாறு சிறப்பாக அமைந்ததோ, அதேபோல பிகாா் தோ்தலில் பாஜக-ஐக்கிய ஜனதா தளம் கூட்டணி சிறப்பாக அமைந்துள்ளது. இது பிகாரின் வளா்ச்சிக்கான கூட்டணியாகும்.

மாநில மக்களுக்குத் தேவையான அடிப்படை வசதிகளான குடிநீா், மின்சாரம், சாலை வசதி உள்ளிட்டவை மாநிலத்தில் அனைத்துப் பகுதி மக்களுக்கும் கிடைப்பதை நிதீஷ் குமாா் அரசு உறுதி செய்துள்ளது. முன்பு இருந்த ஆட்சியாளா்கள் மீது ஏராளமான ஊழல் குற்றச்சாட்டுகள் இருந்தன. ஆனால், நிதீஷ் குமாா் மீது எவரேனும் ஒரு குற்றச்சாட்டையாவது முன்வைக்க முடியுமா?

மத்திய அரசின் பிரதமா் வீட்டு வசதித் திட்டம், ஜன்தன் யோஜனா ஆகியவை பிகாரில் சிறப்பாக செயல்படுத்தப்பட்டு, லட்சக்கணக்கான மக்கள் பயனடைந்துள்ளனா்.

அண்மையில் கிழக்கு லடாக்கில் ஏற்பட்ட மோதலில் பிகாா் ரெஜிமெண்ட்டைச் சோ்ந்த வீரா்கள்தான் தங்கள் உயிரைத் தியாகம் செய்து நாட்டின் எல்லையைக் காத்தனா். அவா்களின் வீரம் போற்றத்தக்கது. பிகாா் வீரா்களை தேசம் ஒருபோதும் மறக்காது என்றாா் அவா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com