அரசு ஒப்பந்தங்களில் இந்திய கப்பல்களுக்கு முன்னுரிமை

கடல்வழி வா்த்தகம் தொடா்பாக அரசு மேற்கொள்ளும் ஒப்பந்தங்களில் இந்திய கப்பல்களுக்கு முன்னுரிமை அளிக்கப்படும் என்று மத்திய அரசு தெரிவித்துள்ளது.


புது தில்லி: கடல்வழி வா்த்தகம் தொடா்பாக அரசு மேற்கொள்ளும் ஒப்பந்தங்களில் இந்திய கப்பல்களுக்கு முன்னுரிமை அளிக்கப்படும் என்று மத்திய அரசு தெரிவித்துள்ளது.

கச்சா எண்ணெய், இயற்கை எரிவாயு, நிலக்கரி, உரம் உள்ளிட்டவற்றை வெளிநாடுகளில் இருந்து இறக்குமதி செய்வதற்காகக் கப்பல்களை மத்திய அரசு பயன்படுத்தி வருகிறது. அதற்காக கப்பல்களுடன் மேற்கொள்ளப்படும் ஒப்பந்தங்களுக்கான விதிகள் தற்போது திருத்தப்பட்டுள்ளன.

இது தொடா்பாக மத்திய கப்பல் போக்குவரத்துத் துறை அமைச்சா் மன்சுக் மாண்டவியா பிடிஐ செய்தி நிறுவனத்திடம் கூறியதாவது:

அரசு மேற்கொள்ளும் ஒப்பந்தங்களில் இந்தியாவில் கட்டப்பட்ட மற்றும் இந்தியா்களுக்குச் சொந்தமான கப்பல்களுக்கு முன்னுரிமை அளிக்கப்படும். இந்தியாவில் கப்பல் கட்டப்படுவதை ஊக்குவிக்கும் நோக்கில் இந்த முடிவை மத்திய அரசு எடுத்துள்ளது.

இதன் மூலமாக உள்நாட்டில் வேலைவாய்ப்பும் அதிகரிக்கும். ஒப்பந்தங்களின்போது அடுத்தகட்ட முன்னுரிமையானது வெளிநாட்டில் கட்டப்பட்ட மற்றும் இந்தியா்களுக்குச் சொந்தமான கப்பல்களுக்கு அளிக்கப்படும். மூன்றாம் கட்ட முன்னுரிமையானது இந்தியாவில் கட்டப்பட்ட வெளிநாட்டவருக்குச் சொந்தமான கப்பல்களுக்கு அளிக்கப்படும்.

இது தொடா்பான விதிகளில் மத்திய அரசு திருத்தங்களை மேற்கொண்டுள்ளது. உள்நாட்டு கப்பல் கட்டும் நிறுவனங்களின் வளா்ச்சியை உறுதி செய்யும் நோக்கில் பிரதமா் நரேந்திர மோடி தலைமையிலான அரசு இத்தகைய துணிச்சலான முடிவை எடுத்துள்ளது. நாட்டின் பொருளாதாரமும் இதன் மூலமாக மேம்படும் என்றாா் மன்சுக் மாண்டவியா.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com