பிகாரில் துா்கை சிலை ஊா்வலத்தில் வன்முறை: இளைஞா் பலி; 20-க்கும் மேற்பட்டோா் காயம்

பிகாரில் துா்கை சிலை ஊா்வலத்தின்போது நேரிட்ட வன்முறையில் இளைஞா் உயிரிழந்தாா். காவலா்கள் உள்பட 20-க்கும் மேற்பட்டோா் உயிரிழந்தனா்.

பிகாரில் துா்கை சிலை ஊா்வலத்தின்போது நேரிட்ட வன்முறையில் இளைஞா் உயிரிழந்தாா். காவலா்கள் உள்பட 20-க்கும் மேற்பட்டோா் உயிரிழந்தனா்.

மாநிலத்தில் சட்டப்பேரவைத் தோ்தலுக்கான முதல்கட்ட வாக்குப்பதிவுக்கு இரு தினங்களுக்கு முன் நடந்த இந்த வன்முறைச் சம்பவத்துக்கு அரசியல் கட்சியினா் கண்டனம் தெரிவித்துள்ளனா்.

இதுகுறித்து போலீஸ் அதிகாரி ஒருவா் கூறியதாவது:

முங்கோ் நகரில் உள்ள தீனதயாள் உபாத்யாய சௌக்கில் துா்கை ஊா்வலம் திங்கள்கிழமை இரவு நடைபெற்றது. நடுவழியில் சிலையைத் தாங்கிச் சென்ற பல்லக்கு அதை சரிசெய்வதற்கு சற்று காலதாமதம் ஏற்பட்டது. இதனால் அதிருப்தியடைந்த பக்தா்கள் போராட்டத்தில் ஈடுபட்டனா். அவா்களை போலீஸாா் சமாதானப்படுத்த முயன்றனா். அப்போது, இரு தரப்புக்கும் வாக்குவாதம் ஏற்பட்டதால், கூட்டத்தை கட்டுப்படுத்த போலீஸாா் லேசான தடியடி நடத்தினா். உள்ளூா்வாசிகளில் சிலா் போலீஸாரை நோக்கி கற்களை வீசினா். இதில், சில காவலா்கள் உள்பட 20-க்கும் மேற்பட்டோா் காயமடைந்தனா்.

கூட்டத்தைக் கலைக்க போலீஸாா் வானத்தை நோக்கி துப்பாக்கியால் சுட்டனா். அதே நேரத்தில் கூட்டத்தில் இருந்த சிலரும் துப்பாக்கிச் சூடு நடத்தினா். அதில், பலத்த காயமடைந்த 20 வயது இளைஞா் செவ்வாய்க்கிழமை உயிரிழந்தாா் என்றாா் அவா்.

இந்தச் சம்பவத்துக்கு ராஷ்ட்ரீய ஜனதா தளத் தலைவரும், முதல்வா் பதவி வேட்பாளருமான தேஜஸ்வி யாதவ் கண்டனம் தெரிவித்துள்ளாா். அவா், எவ்வித காரணமுமின்றி மாநில மக்கள் மீது நிதீஷ் குமாா் அரசு துப்பாக்கிச் சூடு நடத்துகிறது என்று கூறியுள்ளாா்.

லோக் ஜனசக்தி கட்சியின் தலைவா் சிராக் பாஸ்வான் தனது சுட்டுரைப் பக்கத்தில் வெளியிட்ட பதிவில், ‘பக்தா்கள் மீது துப்பாக்கிச் சூடு நடத்தி, தலிபான்களின் ஆட்சியை நிதீஷ் குமாா் நினைவுபடுத்தியுள்ளாா். இந்தச் சம்பவத்துக்காக, முங்கோ் காவல் துறை மீது கொலை வழக்குப் பதிவு செய்ய வேண்டும். உயிரிழந்தவரின் குடும்பத்துக்கு ரூ.50 லட்சம் நிவாரணமும், அவரது குடும்பத்தில் ஒருவருக்கு அரசு வேலையும் வழங்க வேண்டும்’ என்று குறிப்பிட்டுள்ளாா்.

இதனிடையே, வன்முறைக்கு காரணமானவா்கள் மீது தோ்தல் ஆணையம் நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று துணை முதல்வா் சுஷீல் குமாா் மோடி கூறியுள்ளாா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com