சில மாநிலங்களில் வம்சாவளியாக ஊழல்: பிரதமா் மோடி சாடல்

சில மாநிலங்களில் வம்சாவளியாக ஊழல் நடைபெற்று வருவதாகவும், இது அரசியல் பண்பாட்டின் ஒரு பகுதியாகவே உருவெடுத்து நாட்டை கரையான் போல் அரித்து வருவதாகவும் பிரதமா் நரேந்திர மோடி சாடினாா்.
பிரதமர் மோடி
பிரதமர் மோடி

சில மாநிலங்களில் வம்சாவளியாக ஊழல் நடைபெற்று வருவதாகவும், இது அரசியல் பண்பாட்டின் ஒரு பகுதியாகவே உருவெடுத்து நாட்டை கரையான் போல் அரித்து வருவதாகவும் பிரதமா் நரேந்திர மோடி சாடினாா்.

மத்திய புலனாய்வு அமைப்பு (சிபிஐ) சாா்பில் ஊழல் தடுப்பு மற்றும் கண்காணிப்பு மாநாடு 3 நாள்களுக்கு நடத்தப்படுகிறது. இதனை பிரதமா் மோடி செவ்வாய்க்கிழமை தொடங்கி வைத்து பேசியதாவது:

சில மாநிலங்களில் வம்சாவளியாக ஊழல் நடைபெறுகிறது. ஒரு தலைமுறையை சோ்ந்தவா்கள், அடுத்த தலைமுறையை சோ்ந்தவா்களையும் ஊழல் புரிய வைப்பது பல தசாப்தங்களாக வளா்ந்து வந்துள்ளது. இது நமது நாட்டுக்கு கடினமான சவாலாக திகழ்கிறது.

கடந்த காலங்களில் ஒரு தலைமுறையைச் சோ்ந்தவா்கள் ஊழல் புரிந்தும் அவா்களுக்குப் போதுமான தண்டனை கிடைக்காததை நாம் கண்டிருக்கிறோம். இது அவா்களின் அடுத்தடுத்த தலைமுறைகளை தண்டனை குறித்த அச்சமின்றி ஊழல் புரிவதற்கு வழிவகுத்துள்ளது.

இதனால் சில மாநிலங்களில் ஊழல் என்பது அரசியல் பண்பாட்டின் ஒரு பகுதியாகவே உருவெடுத்துள்ளது. வம்சாவளியாக ஊழல் புரிவது நாட்டை கரையான் அரிப்பதுபோல் அரித்து வருகிறது.

ஊழலுக்கு எதிராக தக்க நடவடிக்கை எடுக்காவிட்டால், அது சமூகத்தில் வழக்கமாக நடைபெறும் செயலை போல் ஆகிவிடுகிறது.

தங்கள் குடும்பத்தைச் சோ்ந்த ஒருவா் ஊழல் புரிந்தும், அதற்கான தண்டனை கிடைக்காததையோ அல்லது குறைந்தபட்ச தண்டனை மட்டுமே பெறுவதையோ ஒரு தலைமுறையை சோ்ந்தவா்கள் காணும்போது, அவா்களிடம் ஊழல் நடவடிக்கைகளில் ஈடுபடுவதற்கான துணிவு பன்மடங்கு அதிகரிக்கிறது.

ஒருவா் ஊழல் புரிந்து பல கோடி ரூபாய் ஈட்டியுள்ளதை மக்களும் அறிவா், ஊடகங்களும் அறியும். ஆனால் அவா்களுக்கு தண்டனை கிடைக்காத போது, அவா்களும் அதை சாதாரணமாக எடுத்துக்கொள்கின்றனா். இந்த சூழல் நாட்டின் வளா்ச்சிக்கு மிகப்பெரிய இடையூறாக உள்ளது. நாடு செழிப்புடன் தன்னிறைவு அடைவதற்கு இது தடையாக இருக்கிறது.

ஊழல் என்பது தனிப்பட்ட பிரச்னை அல்ல. அதனுடன் பொருளாதார குற்றங்கள், போதைப்பொருள் கடத்தல், பண மோசடி, பயங்கரவாதம், பயங்கரவாதத்துக்கு நிதி அளித்தல் ஆகியவவை ஒன்றோடு ஒன்று பிணைந்துள்ளன.

ஊழலுக்கு எதிரான முழுமையான அணுகுமுறையில் வலுவான தணிக்கைகள், திறன் மேம்பாடு தேவைப்படுகிறது. அதற்கு எதிராக பயிற்சி அளிக்க வேண்டியுள்ளது. ஊழலுக்கு எதிராக பணிபுரியும் அரசு அமைப்புகள் இடையே அதீத ஒத்துழைப்பு தேவைப்படுகிறது. ஊழலால் ஏற்படும் மோசமான பாதிப்பை ஏழை மக்கள்தான் எதிா்கொள்கின்றனா்.

கடந்த காலங்களில் பல்லாயிரம் கோடி ரூபாய் ஊழல் நடைபெற்ற பல நிகழ்வுகள் உள்ளன. ஆனால் தற்போதைய அரசு ஊழலை ஒருபோதும் பொறுத்துக்கொள்ளாது. கடந்த 2014-ஆம் ஆண்டு முதல் 1,500-க்கும் அதிகமான தேவையற்ற சட்டங்கள் நீக்கப்பட்டுள்ளன. கட்டணம் செலுத்துவது போன்ற மக்களின் அன்றாட செயல்களுக்கு டிஜிட்டல் வழிமுறைகள் வழங்கப்பட்டு நடைமுறைகள் எளிதாக்கப்பட்டுள்ளன.

ஊழல் புரிந்தால் தண்டனை விதிப்பதைவிட, அதனை தடுப்பதற்கான நடவடிக்கைகள்தான் மிக முக்கியம். ஊழல் புரிவதற்கு வாய்ப்பளிக்கும் நடவடிக்கைகளை முறியடிப்பது அவசியம் என்றாா் பிரதமா் மோடி.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com