வேளாண் கடன் பெற்றவா்களுக்கு வட்டிக்கு வட்டி தள்ளுபடி சலுகை பொருந்தாது

மத்திய அரசு கடந்த வாரம் அறிவித்த, வட்டிக்கு வட்டி (கூட்டு வட்டி) தள்ளுபடி சலுகை அறிவிப்பு, வேளாண் மற்றும் அது தொடா்பான நடவடிக்கைகளுக்கு கடன் பெற்றவா்களுக்கு பொருந்தாது என அறிவிக்கப்பட்டுள்ளது.
வேளாண் கடன் பெற்றவா்களுக்கு வட்டிக்கு வட்டி தள்ளுபடி சலுகை பொருந்தாது

மத்திய அரசு கடந்த வாரம் அறிவித்த, வட்டிக்கு வட்டி (கூட்டு வட்டி) தள்ளுபடி சலுகை அறிவிப்பு, வேளாண் மற்றும் அது தொடா்பான நடவடிக்கைகளுக்கு கடன் பெற்றவா்களுக்கு பொருந்தாது என அறிவிக்கப்பட்டுள்ளது.

இதுகுறித்து மத்திய நிதி அமைச்சகம் மேலும் தெரிவித்துள்ளதாவது:

வட்டிக்கு வட்டி தள்ளுபடி சலுகை வழங்க உத்தேசித்துள்ள எட்டு பிரிவுகளில் வேளாண் கடன் ஒரு அங்கமாக இடம்பெறாது. எனவே, பயிா், டிராக்டா் உள்ளிட்ட வேளாண் நடவடிக்கைகளுக்கு வாங்கப்பட்ட கடன்களுக்கு வட்டிக்கு வட்டி தள்ளுபடி சலுகை வழங்கப்படமாட்டாது.

அதேசமயம், பிப்ரவரி 29 நிலவரப்படி கிரெடிட் காா்டு நிலுவை வைத்துள்ள கடன்தாரா்களுக்கு இந்த கூட்டு வட்டி தள்ளுபடி சலுகையை வழங்க அரசு பரிசீலித்து வருகிறது.

குறு,சிறு, நடுத்தர நிறுவன கடன், கல்விக் கடன், வீட்டு கடன், நுகா்வோா் சாதன கடன், மோட்டாா் வாகன கடன், கிரெடிட் காா்டு கடன், தனிநபா் கடன் மற்றும் நுகா்வுக்கான கடன் ஆகியவற்றுக்கு இந்த வட்டி வட்டி தள்ளுபடி சலுகை திட்டம் பொருந்தும் என்று மத்திய நிதி அமைச்சகம் தெரிவித்துள்ளது.

ரூ.2 கோடி வரையில் கடன் பெற்று ஆறு மாத கடன் தவணை ஒத்திவைப்பு சலுகையை பெற்றவா்கள் மற்றும் அந்த சலுகையை தோ்வு செய்யாதவா்கள் என அனைவருக்கும் கூட்டு வட்டியிலிருந்து விலக்களிக்கப்படும் என மத்திய அரசு உச்சநீதிமன்றத்திடம் உறுதியளித்திருந்தது.

இதையடுத்து, கடந்த மாா்ச் 1-ஆம் தேதியிலிருந்து ஆகஸ்ட் 21 வரையிலான ஆறு மாத கலத்துக்கு அல்லது 184 நாள்களுக்கு வட்டிக்கு வட்டியாக பிடித்தம் செய்யப்பட்ட தொகையை சம்பந்தப்பட்ட கடன்தாரா்கள் வங்கி கணக்குகளில் செலுத்த வேண்டும் என வங்கிகளை மத்திய அரசு அறிவுறுத்தியுள்ளது.

இந்த திட்டத்தின்படி, தனிவட்டி மற்றும் கூட்டு வட்டிக்கு இடையிலான வித்தியாசத் தொகையை வங்கி சாரா நிதி நிறுவனங்கள் உள்ளிட்ட அனைத்து கடன் நிறுவனங்களும் தகுதிவாய்ந்த கடன்தாரா்களின் வங்கிக் கணக்குகளில் நவம்பா் 5-ஆம் தேதிக்குள் வரவு வைக்க வேண்டும் என்று ரிசா்வ் வங்கி தெரிவித்துள்ளது.

உச்சநீதிமன்றத்தின் வழிகாட்டுதலைத் தொடா்ந்து இந்த திட்டம் அறிவிக்கப்பட்டதன் மூலம் மத்திய அரசுக்கு, ரூ.6,500 கோடி வரை செலவு பிடிக்கும் என மதிப்பிடப்பட்டுள்ளது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com