மாநிலங்களுக்கு மானிய விலையில் பாசிப் பயறு, உளுந்து: மத்திய அரசு

பதப்படுத்தப்பட்ட பாசிப் பயறு, உளுந்து ஆகியவற்றை சில்லறை விற்பனைக்காக மாநிலங்களுக்கு மானிய விலையில் தனது இருப்பிலிருந்து வழங்க மத்திய அரசு முன்வந்துள்ளதாக நுகர்வோர் விவகாரத் துறை
கோப்புப் படம்.
கோப்புப் படம்.

பதப்படுத்தப்பட்ட பாசிப் பயறு, உளுந்து ஆகியவற்றை சில்லறை விற்பனைக்காக மாநிலங்களுக்கு மானிய விலையில் தனது இருப்பிலிருந்து வழங்க மத்திய அரசு முன்வந்துள்ளதாக நுகர்வோர் விவகாரத் துறை செயலர் லீனா நந்தன் தெரிவித்தார். விலை உயர்வைத் தடுக்கும் வகையில் இந்த நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டுள்ளது.
இதுகுறித்து லீனா நந்தன் தெரிவித்தது: அண்மையில் அமைச்சர்கள் குழுவால் ஒரு புதிய சில்லறை விலை தலையீட்டு நடைமுறைக்கு அனுமதி அளிக்கப்பட்டது. அதன்படி, பாசிப் பயறு கிலோ ரூ.92, உளுந்து கிலோ ரூ.84-96 என்ற மானிய விலையில் மாநிலங்களுக்கு மத்திய அரசு வழங்கும். சில்லறை சந்தை விலையைவிட இது மிகவும் குறைவாகும்.
விலை உயர்வைக் கட்டுப்பாட்டை உறுதி செய்வதற்காக உருவாக்கப்பட்ட நிதியைக் கொண்டு கொள்முதல் செய்து சேமித்த மத்திய அரசின் கையிருப்பிலிருந்து இந்தப் பருப்பு வகைகள் வழங்கப்படும். 
குறைந்தபட்ச ஆதரவு விலை மற்றும் பிற கட்டணங்களை உள்ளடக்கிய மானிய விலையில், புதிய பயிர் வரும் வரை இரு மாத காலத்துக்கு இந்தப் பருப்பு வகைகள் வழங்கப்படும். 
பாசிப் பயறு வழங்குவதற்கான உத்தரவு செப்டம்பர் 14-ஆம் தேதி பிறப்பிக்கப்பட்டுள்ளது. உளுந்து வழங்குவது தொடர்பாக உத்தரவு விரைவில் பிறப்பிக்கப்படும்.
இதில், பதப்படுத்துதல், போக்குவரத்துக் கட்டணம் உள்ளிட்டவை மத்திய அரசால் ஏற்றுக்கொள்ளப்படும். உதாரணத்துக்கு, பாசிப் பயறு சந்தையில் சராசரி சில்லறை விலை கிலோ ரூ.100-ஆக உள்ள நிலையில், மாநிலங்களுக்கு கிலோ ரூ.92-க்கும், உளுந்து கிலோ ரூ.84-96 என்ற விலையிலும் வழங்கப்படும். விலைவாசி உயர்வைத் தடுக்கும் வகையில் இந்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது என்றார் 
அவர்.
மத்திய அரசு கூடுதல் சேமிப்பாக தற்போது ஒரு லட்சம் டன் உளுந்து, 2 லட்சம் டன் பாசிப் பயறு ஆகியவற்றை இருப்பு வைத்துள்ளது.
 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com