மெஹபூபாவை விடுதலை செய்ய மகள் உச்சநீதிமன்றத்தில் மனு: ஜம்மு-காஷ்மீர் அரசு பதிலளிக்க உத்தரவு

ஜம்மு-காஷ்மீரில் பொது பாதுகாப்புச் சட்டத்தின்கீழ் வீட்டுச்சிறையில் உள்ள தனது தாயாரும், முன்னாள் முதல்வருமான மெஹபூபா முஃப்தியை விடுதலை செய்யக் கோரி அவரது மகள் இல்திஜா உச்சநீதிமன்றத்தில் தாக்கல்
மெஹபூபாவை விடுதலை செய்ய மகள் உச்சநீதிமன்றத்தில் மனு: ஜம்மு-காஷ்மீர் அரசு பதிலளிக்க உத்தரவு

ஜம்மு-காஷ்மீரில் பொது பாதுகாப்புச் சட்டத்தின்கீழ் வீட்டுச்சிறையில் உள்ள தனது தாயாரும், முன்னாள் முதல்வருமான மெஹபூபா முஃப்தியை விடுதலை செய்யக் கோரி அவரது மகள் இல்திஜா உச்சநீதிமன்றத்தில் தாக்கல் செய்துள்ள மனுவுக்கு பதிலளிக்குமாறு ஜம்மு-காஷ்மீர் அரசுக்கு உச்சநீதிமன்றம் செவ்வாய்க்கிழமை உத்தரவிட்டது.
 உச்சநீதிமன்ற நீதிபதிகள் எஸ்.கே.கெளல், ரிஷிகேஷ் ராய் ஆகியோர் அடங்கிய அமர்வு எழுப்பியுள்ள கேள்வியில், குறிப்பிட்ட சட்டத்தின்கீழ் ஒருவரை கைது செய்து சிறையில் அடைத்து வைப்பதற்கான அதிகபட்ச கால அளவு எவ்வளவு என்பதை அரசு தெளிவுபடுத்த வேண்டும் என்றும் கருத்து தெரிவித்துள்ளது.
 காணொலி மூலம் நடைபெற்ற இந்த விசாரணையின்போது, ஜம்மு-காஷ்மீரில், மக்கள் ஜனநாயகக் கட்சியின் (பி.டி.பி.) தலைவர் தனது கட்சிக் கூட்டங்களில் கலந்து கொள்ள அனுமதி வழங்குவது தொடர்பாக சம்பந்தப்பட்ட அதிகாரிகளிடம் கோரிக்கையை முன்வைக்க வேண்டும் என்று நீதிபதிகள் தெரிவித்தனர்.
 சிறைகளில் உள்ளவர்கள் கூட தங்களது குடும்பத்தினரை சந்திக்க அனுமதிக்கப்படுகிறார்கள். எனவே, தனது தாயார் மெஹபூபாவை சந்திக்க தனக்கு அனுமதியளிக்க வேண்டும் என்று இல்திஜாவுக்காக ஆஜரான வழக்குரைஞர் நித்யா ராமகிருஷ்ணன் கோரினார்.
 மெஹபூபாவை சந்திக்க விரும்புவோரின் பட்டியலை அதிகாரிகளின் முன்னிலையில் வைத்து, அவர்களது பரிசீலனைக்குப்பின் சந்திக்க அனுமதி வழங்கலாம் என்று அவர் நீதிபதிகளிடம் தெரிவித்தார். மேலும், தனது மனுவை "ஆள்கொணர்வு மனுவாக' மாற்ற அவர் அனுமதி கோரினார்.
 அது குறித்து கருத்து தெரிவிக்காத நீதிபதிகள், ஜம்மு-காஷ்மீர் யூனியன் பிரதேச நிர்வாகம் வரும் அக்.15-ஆம் தேதிக்குள் பதில் மனு தாக்கல் செய்ய வேண்டும் என்று உத்தரவிட்டனர்.
 கடந்த ஆண்டு ஆகஸ்ட் 5-ஆம் தேதி ஜம்மு-காஷ்மீர் மாநிலத்தின் சிறப்பு அந்தஸ்து ரத்து செய்யப்பட்டது. அதையொட்டி, பிடிபி தலைவர் மெஹபூபா ஓராண்டுக்கும் மேலாக வீட்டுக்காவலில் வைக்கப்பட்டுள்ளார்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com