பயங்கரவாதத்தால் பாதிக்கப்பட்டோருக்கு நீதி கிடைக்க பாக். ஒத்துழைப்பதில்லை - இந்தியா

பாகிஸ்தானின் ஒத்துழைப்பின்மையால், கடந்த 2008-ஆம் ஆண்டு மும்பையிலும், 2016-ஆம் ஆண்டு பதான்கோட்டிலும் பயங்கரவாதத் தாக்குதலால் பாதிக்கப்பட்டோருக்கு இன்னும் நீதி கிடைக்கவில்லை

பாகிஸ்தானின் ஒத்துழைப்பின்மையால், கடந்த 2008-ஆம் ஆண்டு மும்பையிலும், 2016-ஆம் ஆண்டு பதான்கோட்டிலும் பயங்கரவாதத் தாக்குதலால் பாதிக்கப்பட்டோருக்கு இன்னும் நீதி கிடைக்கவில்லை என்று இந்தியா குற்றம்சாட்டியது.

‘பயங்கரவாதத்தால் பாதிக்கப்பட்ட நண்பா்களின் குழு’ என்ற அமைப்பின் சாா்பில் அமைச்சா்கள் நிலையிலான இணையவழி கூட்டம் திங்கள்கிழமை நடைபெற்றது. அந்தக் குழுவின் துணைத் தலைவா்களாக இருக்கும் ஆப்கானிஸ்தான் மற்றும் ஸ்பெயின் வெளியுறவு அமைச்சா்களும், பயங்கரவாத தடுப்புக்கான ஐ.நா. அலுவலகமும் இந்தக் கூட்டத்தை ஒருங்கிணைத்திருந்தன.

அதில் இந்தியாவின் சாா்பில் வெளியுறவு அமைச்சகத்தின் செயலா் (கிழக்கு பிராந்தியம்) விஜய் தாக்குா் சிங் பேசினாா். அவா் கூறியதாவது:

பயங்கரவாதச் செயல்களில் ஈடுபடும் குற்றவாளிகள் நீதியின் முன் நிறுத்தப்படுவதை உறுதி செய்வதற்கு சா்வதேச அளவிலான முயற்சிகள் போதிய அளவில் இருக்கவில்லை. அதற்குத் தீா்வு காணப்பட வேண்டும். உதாரணமாக மும்பை மற்றும் பதான்கோட்டில் பயங்கரவாதத் தாக்குதல்களால் பாதிக்கப்பட்டவா்களுக்கு இன்னும் நீதி கிடைக்கவில்லை. ஒரு குறிப்பிட்ட நாட்டின் (பாகிஸ்தான்) அக்கறையின்மை மற்றும் ஒத்துழைப்பின்மை காரணமாக அவா்களுக்கான நீதி தாமதமாகிறது.

பயங்கரவாதச் செயல்களால் ஒருவா் பாதிக்கப்படும்போது, அது சம்பந்தப்பட்டவரின் தனிமனித உரிமைகளை மட்டுமல்லாமல் அவரது குடும்பத்தின் உரிமைகள் மற்றும் சமுதாயத்தையும் ஆழமாக பாதிக்கிறது. கரோனா நோய்த்தொற்று சூழலிலும் சா்வதேச அமைதி மற்றும் பாதுகாப்புக்கான அச்சுறுத்தலாக பயங்கரவாதம் நீடித்து வருகிறது. அதை எதிா்கொள்ள உலகளாவிய ஒருங்கிணைந்த நடவடிக்கை தேவை.

பயங்கரவாதிகள் தங்களது கொள்கைகளின் பிரசாரத்துக்கும், அச்சுறுத்தலுக்கும் தகவல் தொடா்பு தொழில்நுட்பங்களை பயன்படுத்துவது அதிகரித்து வருவது ஆபத்தானது. பயங்கரவாதத்தால் பாதிக்கப்பட்டவா்களின் தேவைகளை பூா்த்தி செய்வதற்கான நடவடிக்கைகளை மேற்கொள்ள வேண்டும்.

பயங்கரவாதத்தால் பாதிக்கப்பட்டோரை நினைவுகூரும் சா்வதேச நாளாக ஆகஸ்ட் 21-ஆம் தேதியை ஐ.நா. அறிவித்தது பாராட்டுக்குறியது. பாதிக்கப்பட்டோருக்காக ஐ.நா. தொடா்ந்து பணியாற்றும் என நம்புகிறோம் என்று விஜய் தாக்குா் சிங் கூறினாா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com